‘கட்டுநாயக்கவை கட்டியெழுப்புவோம்’

கட்டுநாயக்கவிலுள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் காணப்படும் பல்வேறு குறைபாடுகள், ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா, அந்தக் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நீண்டகாலத் திட்டங்கள், ஏற்கெனவே வகுக்கப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

ஆசிய நாடுகளிலுள்ள மோசமான விமான நிலையங்களின் பட்டியலில், கட்டுநாயக்கா பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம், 10ஆவது இடத்தைப் பெற்றுள்ளதாக, வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில், அமைச்சரிடம் கேட்ட போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர் சில்வா, ‘விமான நிலையத்தில் தற்போது நெருக்கடி நிலைமை காணப்படுவது உண்மை. இந்த நெருக்கடி மற்றும் மலசலகூடப் பிரச்சினைகளைச் சீர் செய்வதற்கான நடவடிக்கைகள் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. ஊழியர்களின் சேவை தொடர்பில் அதிருப்தி இல்லை. இதுவரையில், அவ்வாறான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை’ என்றார்.