பயிரை மேய்த வேலிகள்..(25)

( செஞ்சோலையாக மாறிய பயிற்சி முகாம்.)

புலிகளின் சிவில் நிர்வாகத்தின் ஓர் அங்கமாக விளங்கிய பெண்கள் அபிவிருத்தி புனர்வாழ்வு நிலையத்தினரின் ஒத்துழைப்புடன் மகிளீர் அரசியல் துறை பொறுப்பாளரின் ஏற்பாட்டில் அவருடைய உதவியாளர்களால் கட்டாயமாக அழைத்து செல்லப்பட்ட இம்மாணவிகள் இப்போது கொத்துக்கொத்தாக மடிந்து கிடந்தனர். பலர் கண்களுக்கு எட்டிய பக்கங்களில் எல்லாம் குற்றுயிரும் குலையுயிருமாக பெரும் காயமடைந்து ஈனக்குரலில் முனங்கிக்கொண்டிருந்தார்கள். ஏனையோர் மீண்டும் ஒரு தடவை விமானத்தாக்குதல் நடைபெறலாம் என அஞ்சி உயிரை கையில் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிக்கொண்டிருந்தனர்.

சற்று நேரத்தில் நிலைமை கைமீறி சென்றுவிட்டத்தை புரிந்துகொண்ட புலிகள் உடனடியாகவே அதனை சமாளிக்க முயன்றனர். இந்த மாணவிகளை கட்டாய ஆயுத பயிற்சிக்கு அழைத்துச்சென்றிருந்த புலிகளின் அரசியல் துறையினர் விரைவாக இயங்கத்தொடங்கினர். அங்கு சென்ற புலிகளின்மகிளீர் அரசியல் குழுவினர் ஆயுத பயிற்சி நடைபெற்றமைக்கான சான்றுகளை அப்புறப்படுத்தி விட்டு மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என அழைக்கப்பட்ட முகாமை செஞ்சோலையாக மாற்றத்தொடங்கினர். அருகே இருந்த செஞ்சோலையில் பெயர் பலகையை எடுத்துவந்து விமானதாக்குதல் நடந்த இடத்தில் போட்டுவிட்டனர்.

ஒருகாலத்தில் புலிகளின் மூத்த தளபதியாக இருந்த கருணாவின் கட்டுப்பாடில் இருந்த இந்த இடம் பின்பு செஞ்சோலையாக மாற்றப்பட்டு 2006 ஜனவரி நடுப்பகுதிவரை போரில் தாய் தந்தையரை இழந்த குழந்தைகளை பராமரிக்கும் இடமாகவே இருந்தது வந்தது. அதன் பின்பு புளிகளின் மகளீர் அரசியல் துறையின் கட்டுப்பாட்டில் மேஜர் பாரதி பயிற்சி பள்ளி என பெயர் சூட்டப்பட்டு பல்வேறு பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டிருந்தது.

அப்போது சமாதான காலமாக இருந்தமையால் இந்த இடம் இராணுவ தேவைக்காக பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை. பின்னாட்களில் நான்காம் கட்ட ஈழப்போர் தொடங்கியபோதே இந்த மாணவிகளை புலிகள் ஆயுத பயிற்சி வழங்கும் முகமாக அங்கு அழைத்துச்சென்றிருந்தனர். இது ஒரு ஆயுத பயிற்சி முகாமாக தொழிற்பட தொடங்கியிருந்தாலும் முழுமையான புலிகளின் போர் பயிற்சி முகாம்களைவிட குறைந்த நிலை பயிற்சி முகாமாகவே இருந்தது.

செஞ்சோலை என்பது புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் போர்ச் சூழ்நிலையால் பெற்றோரை, பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளின் பராமரிப்புக்காக பிரபாகரன் பணிப்புரையின் பேரில் 1991 அக்டோபர் 23ம் நாள் யாழ்ப்பானம் சண்டிலிப்பாயில் புலிகளால் தொடங்கப்பட்ட சிறுவர் இல்லமாகும். 1995 யாழ்ப்பாண இடம்பெயர்வின்போது கிளிநொச்சிக்கு இடம்மாற்றப்பட்டு பின் கிளிநொச்சி இடம்பெயர்வின் போது பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு பின்பு இந்த வள்ளிபுனம் பகுதியில் இயங்கத்தொடங்கியது. சமாதான சூழலில் ஏற்பட்ட சாதகமான சூழ்நிலையால் கிளிநொச்சி இரணைமடு சந்திக்கு அருகாமையில் இரணைமடு நீர்த்தேக்கத்துக்கு செல்லும் வீதியில் ஒருபகுதியாகவும் இயங்கத்தொடங்கியது.

கிளிநொச்சி சமூக சேவைகள் திணைக்களத்தில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட நிறுவனமாக செயற்பட தொடங்கிய செஞ்சோலைக்கான நிரந்தர வளாகத்தை கிளிநொச்சியிலேயே புலிகள் அமைத்து இயக்கத்தொடங்கியிருந்தனர்.

2003 ஜூனில் இதன் கட்டுமானப்பணிகளை தொடங்கிய அவர்கள் 18 மாதங்களில் மிக அழகான அதிக வசதிகள் கொண்ட வளாகமாக அதனை அமைத்திருந்தனர். மூன்று வயது தொடக்கம் வயதுக்கு வந்த பிள்ளைகள் என 245 பெண்பிள்ளைகளுக்காக் 11 வதிவிட கட்டடத்தொகுதிகளையும் ஒரு விசேட சிசு பராமரிபு நிலையம், கற்றல் செயற்பாட்டு நிலையங்கள், இரண்டு சமையல் கூடங்கள், உணவு உண்ணும் இடம் என்பவற்றையும் கட்டியிருந்தனர்.

அத்துடன் ஒரு நிர்வாக கட்டடத்தொகுதி, ஒரு திறன்விருத்தி நிலையம், ஒரு கலாச்சார மண்டபம், ஒரு சுகாதார பராமரிப்பு நிலையம், மற்றும் ஒரு நூலகத்தினையும் இந்த புதிய செஞ்சோலை வளாகம் கொண்டிருந்த்தது. ஒரு பூங்காவை அமைப்பதன் மூலம் அருகில் இருந்த ஆண்களுக்கான காந்தரூபன் அறிவுச்சோலையில் இருந்து செஞ்சோலையை தனியாக பராமரிக்கும் திட்டத்தையும் புலிகள் கொண்டிருந்தனர். கணணி கூடம், ஒலிஒளி காட்சியமைப்பையும் அங்கு நிறுவ புலிகள் திட்டமிட்டிருந்தனர்.

கிளிநொச்சியில் அமைந்த இந்த புதிய செஞ்சோலை வளாகத்தை பிரபாகரன் 2006 ஜனவரி 15ல் திறந்து வைத்து செஞ்சோலை பிள்ளைகளுக்கு பொங்கல் பரிசாக வழங்கியிருந்தார். சுதர்மகள் என அழைக்கப்பட்ட ஜனனி செஞ்சோலையின் பொறுப்பாளராக இருந்தார்.

தொடரும்..

(Rajh Selvapathi)