சிரியப் போர்நிறுத்த ‘பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன’

சிரியாவில் போர்நிறுத்தமொன்றை ஏற்படுத்துவதற்காக அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிவடைந்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக, சிரியாவில் மனிதாபிமான உதவிகளை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, இல்லாது செய்யப்பட்டுள்ளதாகக் கருப்படுகிறது.

இருநாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகளை, சில வாரங்களாக மேற்கொண்டுவந்த நிலையில், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியும் ரஷ்ய வெளிநாட்டமைச்சர் சேர்ஜெய் வல்ரோவும், சீனாவில் இடம்பெறும் ஜி20 மாநாட்டின் ஓரங்களில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன்போது, எந்தவிதமான இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டிருக்கவில்லை.

ஏற்கெனவே இணங்கப்பட்ட விடயங்களிலிருந்து, ரஷ்யத் தரப்புப் பின்வாங்கியதாகக் குற்றஞ்சாட்டிய அமெரிக்க அதிகாரிகள், அவ்வாறான விடயங்கள் குறித்தும் மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்தனர்.

இவ்வாறான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின்னர், அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினும், உத்தியோகபூர்வமற்றரீதியில் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அந்தச் சந்திப்பின் போதும், பேச்சுவார்த்தைகளை மீள ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் வெளிப்படுத்தப்படவில்லை.

ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையில் காணப்படும் வேறுபாடுகள் காரணமாக, ஜனாதிபதி புட்டினை, உத்தியோகபூர்வமாகச் சந்திப்பதற்கு, ஜனாதிபதி ஒபாமா, நீண்டகாலமாக மறுத்துவருகிறார். அதற்குப் பதிலாக, இவ்வாறான மாநாடுகளின் ஓரங்களில், உத்தியோகபூர்வமல்லாத சந்திப்புகளுக்கே அவர் இணக்கம் தெரிவித்து வருகிறார். சீனாவில் இடம்பெற்றுள்ள சந்திப்பும், இவ்வாறான ஒரு சந்திப்பாகவே அமைந்துள்ளது.

சுமார் 300,000 பேரைக் கொன்றுள்ள சிரிய யுத்தம், ஐந்தாண்டுகளாகத் தொடர்கின்றது. அதில், சிரிய ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கும் அவருக்கு ஆதரவான படைகளுக்கும் ரஷ்யா ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில், ஜனாதிபதி அசாட்டுக்கு எதிரான போராளிகளுக்கு, அமெரிக்கா ஆதரவு தெரிவிக்கிறது. இந்த வேறுபாடே, இப்பேச்சுவார்த்தைகளில் பாரிய முட்டுக்கட்டையாக இருப்பதாகக் கருதப்படுகிறது.