பயிரை மேய்ந்த வேலிகள்–(11)

(பயங்கரமான இரவுபொழுதுகள்)

2006 ஜூன் தொடக்கம் -2009 மே வரையான இந்த காலப்பகுதி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் மறக்க முடியாத இருண்ட காலமாகவே இருந்தது. மாலை ஆறுமணியாகிவிட்டால் வீட்டில் வெளிச்சம் வைக்கவே மக்கள் பயப்படதொடங்கியிருந்தனர். இரவில் நாய்கள் குறைத்தால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைமோதும் இளைஞர் யுவதிகள் அவர்களை பாதுகாக்க வழிதெரியாது தவிக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒரு அச்ச சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தனர்.

83 ஜூலைக்கலவரங்களில் போது சிங்கள இனவாத காடையர்களால் அடித்து நொருக்கி கொன்று குவிக்கப்பட்ட தமிழ் மக்களை பாதுகாக்க அப்போது சிங்களவர்கள் தயங்கவில்லை. தமது அயலவரை கூடியவரை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைப்பதில் அன்று அவர்களிடம் இருந்த மனிதாபிமானம் கூட இப்போது இந்த தமிழர்களிடம் இல்லாமல் இருந்தது.

எங்காவது அகப்படுவான் அவனை பிள்ளைபிடிக்காரன்களுக்கு காட்டிகொடுத்துவிட வேண்டும் என்று கண்ணுக்குள் எண்ணை ஊற்றிக்கொண்டு 24×7 மணிநேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருந்து தப்பிப்பதற்கு வழியை தேடிய பிள்ளைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிக மோசமான காலமாகவே அந்த காலப்பகுதியின் இரவுகள் இருந்தன.

பேய்களும்,பிசாசுகளும், பாம்புகளும் உலாவிய பற்றைகளிலும், வாய்க்கால்களிலும் , காடுகளிலும், மர உச்சிகளிலும் இந்த இளம் வயதினர் தஞ்சமடைய வேண்டியதாயிற்று. இயற்கை கடன்களை கழிப்பது என்பது கூட இபோது அவர்களுக்கு உயிரை பணயம் வைக்கும் செயலாமாறிவிட்டிருந்தது.

தலைமயிர் வெட்டுவற்க்கோ முகச்சவரம் செய்வதற்கோ இயலாத காரியமாயிற்று. ஒரு கட்டத்தில் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்கு நாவிதன் வேலை பார்க்கதொடங்கியிருந்தனர். சீரான முறையில் இயற்கை கடன்களை கழிக்கமுடியாமலும் குளிக்கவே முடியாத நிலையிலும் சில இளைஞர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதுதான் அவர்களுக்கான சவாலான காலகட்டம், உடல் நோயினால் மழைக்காலத்தில் கொட்டும் மழையிலும் மரங்களுக்குள்ளும் பற்றைக்காடுகளுக்குள்ளும் மறைந்திருந்தனர். மரங்களுடன் மரங்களாக இரவு பகலாக வாழவேண்டி இருந்தது. இருட்டில் வெளிச்சம் இல்லாமல் பற்றை காடுகளில் ஒழிந்திருப்போருக்கு விசப்பாம்புகளும் ஒரு அபாயமானவையாக இருந்தன. சுகவீனமடைந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய நிலையில் உடல் சுகமாகிவிட வேண்டும் என கடவுளை வேண்டுவதை தவிர அவர்களுக்கு வேறு வழியே இருக்கவில்லை.

இப்படியான சூழலில் ஒழிந்திருந்த ஒரு இளைஞன் பாம்பு தீண்டி இறந்து போன துயர சம்பவம் கிளிநொச்சி ஓரம் கட்டையில் நடந்தது. புலிகளுக்கு அஞ்சி 43 நாட்கள் பற்றைக்காட்டில் பதுங்கியிருந்த அந்த இளைஞன் நாகம் தீண்டி இறந்து போனான். பிள்ளையை காப்பாற்ற நினைத்த பெற்றோர் உறவினர்களும் இறந்து போன இளைஞனின் உடலை வைத்துக்கொண்டு கதறி அழுவதை கூட கண்டுகொள்ளாமல் அந்த இளைஞனை இவ்வளவு நாட்களாக ஒழித்துவைத்திருந்த பெற்றோரை அடித்து உதைத்த கொடுஞ்செயலை அங்கு வந்த புலிகள் அரங்கேற்றிவிட்டு சென்றிருந்தனர். அவ்வாறு தங்கள் பிள்ளைகளை ஒழித்து வைத்திருந்தமை ஒரு குற்றசெயலாக கருதப்பட்டு அவர் துரோகி என்றளவில் அந்த இளைஞனுக்கு இறுதிகிரிகைகள் செய்வதற்குகூட இயலாமல் அந்த குடும்பம் தவித்தது. கிரிகைகள் செய்யவந்த மதகுரு அச்சுருத்தப்பட்டு திருப்பி அனுப்பபட்டார்.

இறந்த இளைஞனின் உறவினர்கள் கிளிநொச்சி கரடிபோகில் இருந்த அரசியல்துறை பணிமணைக்கு வரவழைக்கப்பட்டு தமது பிள்ளையை ஒழித்து வைத்தமைக்கான விளக்கத்தை அளிக்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். பின்பு ஒரு கட்டத்தில் தாம் அவ்வாறு தமது பிள்ளையை தலைமறைவாக வைத்திருந்தமை தவறு என்றும் அதற்காக மன்னிப்பை கோருவதாக அந்த இறந்து போன இளைஞனின் பெற்ரோர் கெஞ்சி மண்டாடியதன் விளைவாகவும் அந்த இளைஞனின் 47 வயது மூத்த சகோதரன் எல்லைபடையில் சேர்ந்துகொள்ள இணங்கியமையாலும் நீண்ட இழுபறியின் பின்பு அவனது உடலை தகணம் செய்ய புலிகள் அனுமதித்திருந்தனர்.

கிளிநொச்சி நகரை அண்டிய பகுதிகளில் இருந்த ஊர்களில் உள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை என்றால் காட்டுபுர கிராமங்களில் வசித்த இளைஞர்கள் தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள காடுகளில் தஞ்சமைந்திருந்த போது வேறு ஒரு ஆபத்துக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

தொடரும்..

(Rajh Selvapathi)