பயிரை மேய்ந்த வேலிகள்..(9)

(பிள்ளைகளை பறிகொடுத்தபோதும் தலைவரை புகழ்ந்த மக்கள்)

அதே நேரம் புலிகளின் தீவிரஆதரவாளர்களாக செயற்பட்டோர் இந்த கட்டாய ஆட்கடத்தல் விடையத்தில் அவர்களுக்கு உதவ பின்நிற்கவில்லை. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட சொந்த மக்களுக்கு எதிரான அராஜகத்தை மூடி மறைப்பதிலும், காட்டுதீ போன்று அந்த செய்திகள் மக்களிடையே பரவாமல் இருப்பதற்காகவும் இவர்கள் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தனர். புலிகளால் கடத்தி செல்லப்பட்டவர்களின் குடும்பங்களை தொடர்புகொண்டு அவர்களை அசுவசப்படுத்துவதிலும், அவர்களின் பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதாக கூறு அந்த குடுமங்களிடம் பணத்தை கறந்தவர்களும் இருந்தார்கள்.

புலிகளின் அராஜகத்துக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் ஒரு நியமன வசனத்தை அவர்கள் கைவசம் வைத்திருந்தனர். “இது எல்லாம் தலைவருக்கு தெரியாதுஎன்பதுதான் அந்த வசனம். ஒரு போர் வெற்றி என்றால் அது தலைவரின் நேரடி மேற்பார்வையில் நடைபெறுவதாக கூறிதிரிந்தவர்களால் மிக தெளிவாகவே திட்டமிட்டு வெளிப்படையாகவே சொந்த மக்கள் மீது அவிழ்த்து விடப்பட்ட இந்த அராஜகமும் அதனால் ஊர் முழுவதும் கேட்கும் ஒப்பாரியும் ஓலங்களும் மட்டு தலைவருக்கு தெரியாமல் இருந்ததுதான் பெரிய அதிசயமான விடையமாக இருந்திருக்க வேண்டும்.

அவ்வாறான ஒரு தீவிர ஆதரவாளர் ஒருவர் இந்த கதையை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருந்த போது தனது பிள்ளையை பறிகொடுத்த பெண்மணி ஒருவர்உங்கள் தலைவன் செவிடனா? அல்லது குருடனா?” என கேட்டுவிட்டார். ஒன்றும் பேசாது கிளிநொச்சி பன்னங்கண்டியை சேர்ந்த அந்த தீவிர புலி ஆதரவாளர் அங்கிருந்து புறப்பட்டு அப்படியே நேராக சென்று புலிகளிடத்தில் போட்டுக்கொடுத்துவிட்டார்.

சில மணி இடைவெளிக்குள்உங்கள் மகனை பார்க்கலாம் உரிய ஆவணங்களுடன் வாருங்கள் தேவை ஏற்பட்டால் அவரை நீங்கள் மீளவும் அழைத்துச்செல்லலாம் என பரவிப்பாஞ்சானில் உள்ள புலிகளின் சமாதான செயலகத்திலிருந்து அந்த பெண்மணிக்கு தகவல் அனுப்பபட்டது. அடித்து பிடித்துக்கொண்டு அங்கு ஓடிய அந்த தாய்க்கு எங்கள் தலைவரை எப்படி நீ செவிடன் குருடன் என்று கூறலாம் என்று புலிகளின் மகிளீர் அரசியல் பிரிவினர் கொடுத்த அடியில் புலித்தேவனின் அந்தகாரியாலயத்திலேயே அந்த பெண் மயங்கி சரிந்து போனார். மாலையாகியும் மகனை பார்க்க போன மனைவியை காணாது அங்கு தேடிச்சென்ற வயதான மனிதர் இறுதியாக புலித்தேவனின் கருணைக்காக அவரை வேண்டி மன்னிப்பு கேட்டு மனைவியை மீட்டு வரவேண்டியதாயிற்று.

பிள்ளைகளை பறிகொடுத்தாலும் பிரபாகரன் என்கின்ற பெயரை உச்சரிக்காமல் அவரை புகழ்ந்து மரியாதையுடன் பேசவேண்டும் எனவும் அவ்வாறு செய்யாவிட்டால் அதற்கான தண்டனையை எதிர்நோக்குவதுடன் அவர்களின் பிள்ளைகளை மீள காணவே இயலாது என்றும் இப்போது மக்களை அச்சுறுத்த தொடங்கியிருந்தனர் புலிகள் இயக்கத்தினர்.

தங்கள் பிள்ளைகளுக்கு எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக மககளும் தலைவரை வெளிப்படையாக திட்டுவதை தவிர்த்து அவரை புகழ்வதை தவிர அவர்களால் வேறு எதனையும் செய்ய முடியவில்லை.

தொடரும்..

(Rajh Selvapathi)