பற்குணம் A.F.C (பகுதி 61 )

நாட்டில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோதும் பற்குணம் பற்றிய தகவல்கள் வேகமாக பரவின.இந்த செய்தி எங்கள் காதுகளுக்கும் வந்தன.நாங்களோ பற்குணம் தொடர்பான தகவல்களை அறியமுடியவில்லை.அய்யா சாஸ்திர நம்பிக்கை உள்ளவர்.எனவே அவர் ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்.அவர் தனக்கு புத்திர சோகம் இல்லை என்பார்.அவர் வாழ்வில் அது உண்மையானதே.

பற்குணம் பற்றிய இந்த தகவல் அறிந்ததும் அவரை கடுமையாக தேடும் முயற்சியில் முன்னாள் மூதூர் பா.உ அ.தங்கத்துரை ஈடுபட்டார்.தனக்குத் தெரிந்த அரசியல்வாதிகள்,அதிகாரிகள் என பலரிடம் தொடர்பு கொண்டு தேடினார்.எந்த தகவலும் கிடைக்கவில்லை.அவர் பற்குணம் இல்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டார்.
இதேபோல் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ரி.ஈ. ஆனந்தராசா அவர்களும் கடும் முயற்சி எடுத்து தேடினார்.தகவல் கிடைக்கவில்லை.ஆனந்தராசா பற்குணத்தின் நண்பர்.ஒன்றாக பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அப்போது தங்காலை எஸ்.பி ஆக பணியாற்றினார் .

நாட்டின் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்கு வந்தபின் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது .தொடர்ந்தும் ஒபயசேகரா வீட்டில் இருப்பதை பற்குணம் விரும்பவில்லை .தனது நண்பரும் சட்டத்தரணியுமான ஜாம் என்பவருடன் தொடர்பு கொண்டார்.

ஜாம் யாழ்ப்பாண தமிழர்தான்.ஆனால் சிங்களவராகவே அடையாளம் மாறிவிட்டார்.அவர் வந்து பற்குணம் குடும்பத்தை அழைத்துச் சென்றார்.

மறுநாள் அவரின் துணையுடன் அவரகள் இருந்த வீட்டைப் பார்க்கச் சென்றார்.அப்போது ஒரு சில அயலவர்கள் பற்குணத்துடன் பேசினார்கள்.பலர் பயந்தார்கள்.சம்பவம் நடந்த இடத்தைப் பார்த்தார்.அப்போதுதான் அயலக வீட்டவரான களனியா டி.ஆர. ஓ வந்து கதைத்தார்.அவர் சொல்லியே வீட்டின் உரிமையாளர் பத்மநாதன் அங்கே போய் ஒழிந்ததுமாதிரி பற்குணத்துக்கு தெரியவந்தது.ஆனாலும் அவர் கோப்ப்படவில்லை.

அந்த வீட்டின் உடமைகளை பலர் எடுத்துச் சென்ற போதும் ஒரு சில சாறிகள் பைல்கள் என இருந்தன.அவற்றை எடுத்து கொண்டு ஜாம் அவர்களின் வீட்டுக்குத் திரும்பினார்.
அந்தப்பொருட்களைத் தவிர எவையும் மிஞ்சவில்லை.

(தொடரும்….)
(விஜய பாஸ்கரன்)