பற்குணம்(பதிவு9)

அண்ணன் வசதிக் கட்டணம் கட்ட தாமதம் ஆனதால் பள்ளிக்கூடம் போகவில்லை .இதே நேரம் அய்யாவுடன் கதைத்த பொலிஸ் இன்ஸ்பெக்டர் எமது குடும்பத்தின் நிலையை விளக்க அஅதிபரைத் சந்திக்கப் போயிருந்தார்.அதிபரைப் பொறுத்தவரை அண்ணன் பற்குணம் ஒரு குழப்படிகார மாணவன் என்பதே தெரியும். குடும்ப சூழல் தெரியாது.அந்த இன்ஸ்பெக்டர் சொன்னபின்பே அவருக்கு அண்ணன் அடிக்கடி பாடசாலை வராத காரணங்கள் புரிந்தது.ஆனாலும் அண்ணனின் குழப்படிகளையும் அவருடன் பகிர்ந்தார்.அவர் அதில் சிக்காமல் தப்புவதிலும் கெட்டிக்காரன் எனவும் சொன்னார்.

இவரகள் கதைத்துக்கொண்டிருந்தபோது ஒருவர் வந்து பற்குணம் என அண்ணனின் பெயரை அதிபரிடம் கேட்டார்.அதிபரும் ஏதாவது பிரச்சினை என எண்ணி வினாவினார்.அவர் ஒரு தபால் அட்டையைக் கொடுத்தார்.

வந்த நபர் கணிசமான பணத்தோடு காணி உறுதிகள் சகிதம் தன் பையைத் தொலைத்துவிட்டார்.அது என் அண்ணன் கையில் கிடைத்தது.அதில் உள்ள முகவரியை கண்டுபிடித்து உரியவருக்கு தபால் அட்டை அனுப்பி தன் பாடசாலையின் முகவரியைக் கொடுத்துள்ளார்.இதைக் கேட்ட அதிபரும் அந்த இன்ஸ்பெக்டரும் அண்ணனின் நேர்மையை நினைத்து வியந்து மனம் வருந்தினார்கள்.

உடனே அண்ணனை அழைத்துவருமாறு அவர் நண்பனை அனுப்பினார்.அண்ணன் அன்று வெளிய பஸ் நிலையத்தில் நின்றார்.அவர் பாடசாலையின் உள்ளே போக விரும்பவில்லை .அந்த நபரை வெளியே அழைத்து வீட்டுக்கு வந்து அவரின் உடமைகளைக் கொடுத்தார்.அவர் கொஞ்சம் பணம் கொடுக்க முயல அவர் மறுத்துவிட்டு உங்கள் பணத்திலே தான் தபால் அட்டை வாங்கினேன் என கணக்கு சொன்னார்.
அய்யா பொலிஸ் அதிகாரியிடம் உதவி கோரியதை விரும்பவில்லை .அம்மா மூலமாக இப்படி இனிமேல் செய்ய வேண்டாம் என அய்யாவிடம் சொல்லுவித்தார் .
அதன்பின் வசதிக் கட்டணம் கட்டியபின்பே பள்ளிக்கூடம் போனார்.அதிபர் சபாபதிப்பிள்ளை அவரைக் கூப்பிட்டு நலம் விசாரித்தார்.நீ இனி வசதிக்கட்டணம் கட்ட வேண்டாம் என்றாராம்.அதற்கு அண்ணன் அந்தளவுக்கு நாங்கள் வறுமை இல்லை.கொஞ்சம் தாமதமாகலாம் என்றாராம்.திரும்பவும் அப்படி உரிய நேரத்தில் கட்ட முடியாமல் வந்தபோதும் அவர் கட்டும்வரை பாடசாலை போவதில்லை .
1962 இல் உயர்தர பரீட்சையில் அண்ணன் சித்தியடைந்தார் .பல்கலைக்கழகத்துக்கு தெரிவான மாணவர் பட்டியலில் அண்ணனின் பெயரே முதலாவதாக இருந்தது.டிறிபேர்க் கல்லூரி தேசியமயமாக்கப்பட்ட பின் முதலாவதாக அங்கிருந்து பல்கலைக்கழகம் தெரிவான முதல் மாணவன் பெயர் அண்ணன் பற்குணத்தின் பெயர் என்பதில் எல்லோருக்கும் சந்தோசம்.அதைவிட அதிசயமாகவும் இருந்தது.உண்மையில் சுற்றயல் கிராமங்களில் ஒரு செய்தியாகவே இருந்தது.
கல்வி மீது தணியாத தாகம் கொண்ட அய்யா தன் மகன் மூலமாக அந்த இலக்கை அடைந்தார்.இதன் பின்னர் எமது கிராமம்,சுற்றயல் கிராமங்களிலும் சகல சமூக ஏழைகளுக்கும் படிப்பின் மீது நம்பிக்கை ஏற்பட்டது.உண்மையில் இது ஒரு புரட்சி எனலாம்.

(விஜய பாஸ்கரன்)
(தொடரும்…..)