யாழ். மண்ணில் அருகி வரும் புத்தாண்டுப் பாரம்பரியங்கள்

மன்மத வருடம் நிறைவு பெற்று இன்று புதன்கிழமை (13.-04.-2016) துர்முகி தமிழ்ப் புத்தாண்டு உதயமாகிறது. புதுவருடப் பண்டிகை தமிழர்களின் ஏனைய பண்டிகைகளான தைப்பொங்கல், தீபாவளி ஆகியன போன்று சமூக விழாவாக விளங்குவது சிறப்பெனலாம். இலங்கையைப் பொறுத்த வரை சித்திரைப் புத்தாண்டு (தமிழ் -_ சிங்களப் புத்தாண்டு) இரு இன மக்களினாலும் காலகாலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரைப் புதுவருடம் உலகம் முழுவதுமுள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்டாலும் யாழ்ப்பாணத்துக்கென தனித்துவமான புத்தாண்டுப் பாரம்பரியம் உள்ளது. இந்நன்னாள் எமது புத்தாண்டுப் பாரம்பரியத்தின் முன்னோடிகளாக விளங்கிய முன்னோர்களை நினைவு கூரும் நாளாகவும் காணப்படுகிறது.

முன்னோர்கள் எமக்கு வகுத்தளித்த எங்கள் வாழ்க்கை முறைக்கு பயனுள்ள பல வழிமுறைகளை நாம் பின்பற்றத் தயக்கம் காட்டுகிறோம். இந்த நிலையில் புத்தாண்டுப் பாரம்பரியம் மாத்திரம் விதி விலக்கா என்ன ?

விஷு புண்ணிய காலத்தில் எல்லாம் வல்ல பரம்பொருளான இறைவனை நினைத்து சங்கற்பித்து தலையில் மருத்து நீர் தேய்த்து நீராடி புத்தாடை தரித்துப் புத்தாண்டு உதயமாகும் காலப் பகுதியில் குத்துவிளக்கேற்றி நிறைகுடம் வைத்து வரவேற்பது மரபு. அதன் பின்னர் வீட்டிற்கு அருகிலுள்ள ஆலயத்துக்குச் சென்று வழிபாடாற்ற வேண்டும்.

இந்நாளில் மாதா, பிதா, குரு, பெரியோர்களை வணங்கி ஆசி பெற்றுத் தம்மால் முடிந்த தான, தர்மங்களையும் செய்து உற்றார் , அயலவர்கள், நண்பர்களுடன் ஒன்றுகூடி அறுசுவை உணவு உண்டு மகிழ்வர். அத்துடன் தமிழர்களுக்கே உரித்தான பாரம்பரிய விளையாட்டுகளிலும், கலை , கலாசார நிகழ்வுகளிலும் ஈடுபடுவர். இந்த மரபு காலம்காலமாக எமது மண்ணில் நிலவி வந்தாலும் இன்றைய தலைமுறையினர் மத்தியில் இந்த வழக்கங்கள் அருகி வருவது வேதனைக்குரிய விடயம்.

யாழ்ப்பாணத்தில் முன்னைய காலத்தில் சித்திரைப் புத்தாண்டு வசதி படைத்தவர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது. இந்த நிலையில் அன்றாடம் கிடைக்கின்ற விவசாய மற்றும் கூலி உழைப்பில் தமது குடும்ப வாழ்வைக் கொண்டு நடாத்தி வருகின்ற வறுமைக்குட்பட்டவர்களும் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடுவதற்காகத் தாம் சிறுகச் சிறுக உழைத்த பணத்தைச் சேமித்து வைத்து அல்லது தமது நண்பர்கள், உறவினர்கள் எவரிடமாவது கடன்பட்டாவது சித்திரைப் புத்தாண்டைச் சிறப்பாகக் கொண்டாடுவர். ஏனெனில், இது தமிழ் இனத்தின் மரபு வழி வந்த ஒரு பண்டிகை நிகழ்வாகும் என்பது அவர்களின் மனங்களில் ஆழமாகப் பதிந்திருந்தது.

முன்னர் சித்திரைப் புதுவருடம் போன்ற பண்டிகைக் காலம் வந்தாலே ஒரு வாரத்துக்கு முன்னரே யாழ்.குடாநாட்டின் கிராமங்கள் அனைத்தும் விழாக் கோலம் பூண்டு விடும். வயது – பால் வேறுபாடின்றி அனைவரும் மன, உறவு ரீதியாக ஒன்றுபட்டுப் புத்தாண்டை வரவேற்பதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவார்கள். சுற்றுப் புறச் சூழலைத் துப்பரவு செய்தல், வீடு கழுவுதல், பல வகையான பலகாரங்கள் சுடுதல் எனப் புத்தாண்டை வரவேற்பதற்கான வேலைகள் இடம்பெறும்.

கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை நீ பெரிது…. நான் பெரிது ….என்ற பேதங்களை வளர்க்கவில்லை. விட்டுக் கொடுப்பு, சகிப்புத் தன்மை, புரிந்துணர்வு போன்ற நற்பண்புகளையே வளர்த்தது . இந்த உணர்வு ரீதியான மனநிலை கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் இயல்பாகவே இருந்த காரணத்தால் பண்டிகைக் கால மகிழ்ச்சிக்கு எப்போதும் பஞ்சமிருக்கவில்லை.சித்திரைப் புத்தாண்டு உதயமான பின்னர் தொடர்ந்து இரு வாரங்களுக்கு ஒரே கொண்டாட்டங்கள் தான்.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களான உஞ்சலாட்டம்,பட்டமேற்றுதல், போர்த் தேங்காய் அடித்தல், கிளித்தட்டு போன்ற நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டை ஒட்டிய காலப் பகுதியில் முன்னைய காலத்தில் இடம்பெற்று வந்ததாக மூதாதையர்கள் சொல்கின்றனர். ஊஞ்சலாட்டம் என்பது கிராமத்தின் பொதுவான இடத்தில் வளர்ந்து காணப்படும் வேப்பமரங்களில் குடும்பத்தவர்கள்,உறவினர், நண்பர்கள் ஒன்று சேர்ந்து துலாக் கயிறு மற்றும் பலகையாலான நீளமான உதை ஊஞ்சல் கட்டி ஆடிப் பாடி மகிழ்வார்கள்.

அடுத்ததாகப் பட்டமேற்றும் நிகழ்வு ஒரு திருவிழாவாகவே நடைபெறும். குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஒன்று கூடிப் பொதுவானதொரு இடத்தில் பல்வேறு உருவங்களிலும், வண்ணங்களிலும் தாம் உருவாக்கிய பட்டங்களை வானில் பறக்க விட்டு அவை காற்றில் அசைந்தாடும் அழகைக் கண்டு மகிழ்வடைந்தனர். பருவப் பெயர்ச்சிக் காலநிலை பட்டம் பறக்க விடுவதற்குச் சாதகமான சூழலை ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது.

போர்த் தேங்காய் அடித்தலும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுப் போட்டி நிகழ்வாக நடைபெறும். இந்த விளையாட்டுக்கெனத் தென்மராட்சிப் பிரதேசத்தில் பிரத்தியேகமாக வளர்க்கப்பட்ட தென்னை மரங்களிலிருந்து தேங்காய்கள் பெறப்பட்டன. இந்தப் போர்த் தேங்காய்கள் சாதாரண தேங்காய்களை விட அதிகளவு பணத்திற்கு விற்கப்பட்டன. இந்தத் தேங்காய்கள் வன்மைத் தன்மை கூடியதாகவும் காணப்பட்டது.

ஊரிலேயுள்ள பொதுவான மைதானத்தில் போர்த் தேங்காய் உடைக்கும் விளையாட்டுப் போட்டி நிகழ்வு நடைபெறும். இந்த விளையாட்டு விளையாட ஆர்வமுள்ளவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்பப் பிரிக்கப்பட்டு இடம்பெறும். குறிக்கப்பட்ட வட்டம் ஒன்றிற்குள் உருட்டுக் காய் எனச் சொல்லப்படும் போர்த் தேங்காய் வைக்கப்படும். வட்டத்திற்கு வெளியே குறிப்பிட்ட சில தூர இடைவெளியில் நின்று அந்தப் போர்த் தேங்காயை வேறொரு போர்த் தேங்காயால் உடைக்க வேண்டும்.

இந்த விளையாட்டிற்கு நிபந்தனைகள் சிலவும் விதிக்கப்படும். குறிப்பிட்ட எண்ணிக்கையான குத்தில் போர்த் தேங்காயை உடைக்க வேண்டும். கைகளில் வைத்து உடைக்கும் தேங்காய்க்கு முடி இருக்கக் கூடாது. இளையோர் முதல் முதியோர் வரை இந்த விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். இந்த விளையாட்டு யாழ். குடாநாட்டின் வலிகாமம் பிரதேசத்தில் அதிகளவில் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

எமது மண்ணில் கிளித்தட்டைத் தேசிய விளையாட்டாகப் பார்த்த ஒரு காலமிருந்தது. அந்தக் காலங்களில் வலிகாமம் பிரதேசத்தின் கிராமங்கள் தோறும் சுருட்டுத் தொழிலையே தமது வாழ்வாதாரமாக நம்பி வாழ்ந்த பல குடும்பங்கள் இருந்தன. வலிகாமத்தின் வசாவிளான், குரும்பசிட்டி, குப்பிளான், புன்னாலைக்கட்டுவன், ஈவினை ஆகிய கிராமங்களில் சுருட்டுத் தொழில்கள் இடம்பெற்று வந்த நிலையில் சுருட்டுக் கொட்டில்களில் வேலை செய்பவர்கள் ஓய்வு வேளைகளில் கிளித்தட்டு விளையாட்டில் ஈடுபட்டனர்.

சித்திரைப் புதுவருடத்தை ஒட்டிக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுக் கிளித்தட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டன. குழுக்களின் தலைவர்களின் பெயர்களாலேயே அணிகள் அழைக்கப்பட்டன. கிளித்தட்டு விளையாட்டைக் கண்டு களிக்க ஒரு பெரும் ரசிக பட்டாளமே இருந்தது. வசாவிளான் பகுதியைச் சேர்ந்த சுளுத்தான் எனச் சக நண்பர்களால் அன்புடன் அழைக்கப்படும் பொன்னுத்துரை என்பவர் கிளித்தட்டு விளையாட்டில் தேர்ச்சி மிக்க ஒருவராகக் காணப்பட்டார். கிளித்தட்டு விளையாட்டு மாத்திரமல்ல வலிகாமம் பிரதேசத்தில் உதைபந்தாட்டப் போட்டிகளும் நடைபெற்றன.

இந்தப் போட்டிகள் வருடம் தோறும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் மைதானத்தில் பெரும் எடுப்பில் நடைபெற்றதாகவும், இதில் அதிகளவான ரசிக கூட்டம் ஒவ்வொரு தடவையும் கலந்து கொண்டதாகவும் தெரிய வருகிறது.

சித்திரைப் புத்தாண்டை ஒட்டி இடம்பெறுகின்ற ஊஞ்சலாட்டம், போர்த் தேங்காய் உடைத்தல் ஆகிய விளையாட்டுக்கள் யாழ்.குடாநாட்டில் தற்போது இடம்பெறுவதே இல்லை எனலாம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுத் தமிழர்களின் பாரம்பரியக் கலை வடிவங்களான கும்மி, கோலாட்டம், குதிரையாட்டம், மயிலாட்டம் , ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்வுகளும் கிராமம் தோறும் சிறப்பான வகையில் இடம்பெற்று வந்தன. இந்தக் கலை வடிவங்கள் தற்காலத்தில் அருகி வருவது கண்கூடு.

அந்தக் காலங்களில் அநேகமாக அனைத்துக் கிராமங்களிலும் விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் காணப்பட்ட நிலையில் தொழிலிடங்களில் சித்திரைப் புதுவருடத்தின் கைவிசேட நிகழ்வை ஒரு விழாவாகவே கொண்டாடும் வழக்கமிருந்தது. சித்திரைப் புதுவருடமன்று குறிப்பிட்ட கூலித் தொழிலாளிக்கு புது வேட்டி , சால்வைகள் வழங்குவதுடன் தொழிலாளியின் குடும்பத்துக்கும் புத்தாடைகள் வழங்குவது மரபாகவிருந்தது. பெரியோர்களின் கைகளால் புதுவருடமன்று கைவிசேடம் வாங்குவதால் தொழில் வளம் பெறும் . பணம் பெருகும் என்பது பலரதும் நம்பிக்கையாகவுள்ளது.

இந்த நம்பிக்கை இன்று வரை காணப்படுவதால் ஒரு சிலர் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சிலரிடம் கைவிசேடம் வாங்குவதை விசேடமாகக் கருதுகின்றனர்.

இதன் காரணமாக அவர்கள் எங்கிருந்தாலும் தேடிச் சென்று கைவிசேடம் பெற்ற பின்னரே மன ஆறுதலடைகின்றனர். பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்ட நாள் மற்றும் நேர காலப் பகுதியில் மாத்திரமே கைவிசேடம் வாங்கித் தமது கொடுக்கல் வாங்கல்களை ஆரம்பிக்கும் வழக்கம் யாழ்.

குடாநாட்டில் முன்னைய காலங்களில் ஒரு சம்பிராதயமாக இருந்தது. ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும் வருடம் பிறக்கும் நாளுக்கும், கைவிசேடம் பெற்றுக் கொள்ள உகந்த நாளுக்கும் சில நாட்கள் இடைவெளிகள் காணப்படுவதால் புதுவருடம் பிறக்கும் நேரத்திலேயே கைவிசேடம் பரிமாறிக் கொள்ளும் போக்கு அதிகரித்துள்ளது.

சித்திரைப் புதுவருடத்தை முன்னிட்டு அரியதுரம், பால் றொட்டி ,பயற்றம் பணியாரம், அச்சுப் பலகாரம், முறுக்கு ஆகிய பலகார வகைகளையும்,ஆலங்காய்ப் புட்டு,வெங்காயப் பொங்கல்,கூழ் போன்ற உணவு வகைகளையும் தயாரிப்பார்கள்.

சீடை எனப்படும் பலகாரம் உளுத்தம் மாவுடன், சீனிப் பணியாரத்தையும் கலந்து உருட்டி வாழைத் தடலிற்குள் வைத்து அமுக்கிய பின்னர் ஒரு வித அடையாளம் உருவாகும். அதனைப் பொரித்து எடுத்தால் அதனைச் சீடைப் பலகாரம் என அழைப்பர். தற்போது இந்தப் பலகாரத்தை எம்மவர்கள் சிப்பிப் பலகாரம் எனச் சொல்லுவர்.உளுத்தம் மாவுடன் தேங்காய்ப் பால் காய்ச்சி, சீனி, மிளகாய், சீரகம் இட்டு ஆலங்காய்ப் புட்டினை உருண்டையாகச் செய்வார்கள். அதன் பின்னர் புட்டினை எண்ணெயில் இட்டு வறுத்தெடுப்பார்கள் . இந்தப் புட்டின் சுவை எம்மில் பலருக்கும் தெரியாது.

வெங்காயப் பொங்கல் அரிசியுடன் வெங்காயம்,மஞ்சள்,சீரகம், மிளகு சேர்த்து அரைத்து இந்தப் பொங்கலைப் பொங்குவார்கள்.

மருத்துவ முறையுடன் இணைந்த வகையில் தயாரிக்கப்படும் இவ் வகையான உணவுகளால் தான் எமது முன்னோர்கள் திடகாத்திரமாக வாழ்ந்தார்கள் என நம்பப்படுகிறது. அதுமட்டுமன்றி சித்திரைப் புதுவருடத்தை அண்டிய காலப் பகுதியில் அதிக வெப்பமான காலநிலை காணப்படுவதால் ஒடியல் மா, பலாக் கொட்டை, பயற்றங்காய், சிறிதளவு அரிசி, மிளகு உள்ளிட்டவை இட்டுப் பெரும் கிடாரத்தில் கூழ் காய்ச்சுவார்கள். காய்ச்சிய கூழைத் தமது உறவுகளுடன் பகிர்ந்து குடிப்பார்கள்.

பண்டிகைக் காலங்களில் இவ்வாறான மரபு காணப்பட்ட காரணத்தால் உறவுகள் பலப்படுவதற்கான ஏது நிலைகள் உருவாகின. ஆனால், இன்றைய வாழ்க்கைச் சூழலில் இளம் தலைமுறையைச் சேர்ந்த எமது ஊர்த் தாய்மார்கள் எத்தனை பேர் சித்திரைப் புத்தாண்டுக்கு இவ்வாறான உணவு வகைகளைத் தயாரிக்கிறார்கள்? விற்பனை நிலையங்களில் உணவு வகைகளைக் கொள்வனவு செய்து தன் கணவர், பிள்ளைகளுக்கும், வீடு தேடிச் செல்லும் உறவினர்கள், நண்பர்களுக்கும் வழங்குகிறார்கள் . சிலர் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

தற்போதைய கால கட்டத்தில் சினிமா, கைத்தொலைபேசி , இணையத்தளம், சமூக வலைத்தளங்களின் அதிகரித்த பாவனைக்குள் நாம் எமது வாழ்க்கையைத் தொலைத்து விட்டிருக்கின்றோம். இதன் காரணமாக பண்டிகை நிகழ்வுகளின் போது எமது உறவினர், நண்பர்களுக்கு வாழ்த்துக்களையும், பண்டிகைக் கால மகிழ்ச்சியையும் ஆத்மார்த்த ரீதியாகப் பகிர்ந்து கொள்வதில் கூட நாம் பின்னிற்கின்றோம். இதனால், தற்காலத்தில் உறவுகளுக்கிடையிலான இடைவெளிகள் அதிகரித்துள்ளன.

தொழில் நிமித்தம் மற்றும் திருமணமாகித் தூர இடங்களில் வசிக்கும் உறவுகள் ஒன்று சேர்ந்து புத்தாண்டைக் கொண்டாட முடியாத துர்ப்பாக்கியமான நிலை பல்வேறு காரணிகளால் ஏற்பட்டுள்ளது. இன்று நாம் பணத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை உறவுகளுக்குக் கொடுப்பதில்லை. உறவுகள் எமது உணர்வுகள் என்பதை நாம் உணர்ந்து புரிந்துணர்வுடன் செயற்பட்டால் எந்நாளும் எமக்குப் பண்டிகைக் காலம் தான்.

21 ஆம் நூற்றாண்டின் கணணி யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் விஞ்ஞானம்-தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புக்கள் எனப் புதுமையான உலகத்தையே விரும்புகிறோம். புதுமைகள் புகுத்தப்படாதிருக்காவிட்டால் இந்த உலகம் தோன்றியவாறே இருந்திருக்கும்.

இதனால் நாம் வளர்ச்சியடையாத சமூகமாகவே வாழ்ந்திருப்போம். புதுமைகள் தான் எம் வாழ்வை நாள்தோறும் புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன. எனவே, புதுமைகள் வரவேற்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், பழமையையும் நாம் போற்ற வேண்டும் . எமது பாரம்பரியத்தின் வழிகாட்டல் எம் வாழ்வைச நிச்சயம் செம்மைப்படுத்தும்.வளப்படுத்தும்.

செல்வநாயகம் ரவிசாந்த்
யாழ்ப்பாணம்.