பலாலியை சிவில் விமான நிலையமாக மாற்ற வேண்டும்

பலாலி விமான நிலையத்தையும் காங்கேசன்துறை துறைமுகத்தையும் மிக விரைவில் சீரமைத்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாற்றியமையுங்கள். இதற்கான நடவடிக்கைகளை உடன் எடுங்கள். இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் யாழ்ப்பாண வணிகர் கழகம் கோரியுள்ளது. இது தொடர்பாக கடிதம் ஒன்றை வணிகர் கழகம் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

கடந்த காலங்களில் உதாசீனம் செய்யப்பட்ட பலாலி விமான நிலையமும் காங்கேசன்துறை துறைமுகமும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சுமுகமான கூட்டாட்சி நிலவும் இந்தக் காலத்தில் அபிவிருத்தி செய்யவேண்டிய தேவையுள்ளது.
பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கு அரசுக்கு அதிக சிரமங்கள் தேவையில்லை.

போர் ஏற்படுவதற்கு முன்பாகவே குறித்த விமான நிலையம் மிகச் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வந்துள்ளது. அபிவிருத்திக்கான நிலப்பரப்பையும் கொண்டுள்ளமை மேலும் வசதியாகவுள்ளது. பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்தால் எமது மக்களுக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை இங்கு குறிப்பிட விரும்புகின்றோம்.

பெருமளவு தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து பல நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் பிள்ளைகள் தொகையும் கணிசமாக அதிகரித்து வெளிநாடுகளில் சுமார் 10 இலட்சத்திற்கும் மேல் தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர் என்று அறியப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு மாகாணத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.

கலாசார ரீதியாகவும் தொடர்ந்து தொடர்புகளைப் பேணி வருகிறார்கள். பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்தால் புலம்பெயர்ந்தவர்கள் பெருமளவு பயண நேரத்தை சேமிக்கக்கூடியதாக இருக்கும். நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவும் இதன் மூலமாக பொருளாதார வளர்ச்சிக்கு யாழ்ப்பாணம் சிறப்பாக முகம் கொடுக்கவும் முடியும் என்று நிச்சயமாகக் கூறமுயும்.

வடக்கு மாகாணத்தில் இதனால் ஏற்படப்போகும் பொருளாதார வளர்ச்சியானது வடக்குகிழக்கு மாகாணங்கள் மட்டுமன்றி வடமத்திய மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெருமளவு பங்கு செலுத்தும் வாய்ப்பும் அதிகமாக தென்படுகிறது.
புலம்பெயர் தமிழ் மக்கள் மட்டுமன்றி ஏனைய உல்லாசப் பயணிகளும் பெருமளவில் வடக்கு மாகாணத்திற்கு வருகின்றனர்.

இங்கு வாழும் மக்களின் கலை, கலாசார விடயங்களில் அவர்கள் அதிகளவு ஆர்வம் கொண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி இந்தப் பிராந்தியத்தின் சுற்றுலாத்துறையின் அபிவிருத்தியுடன் மட்டும் நோக்காது தேசிய பொருளாதாரத்திற்கு நாம் செலுத்தும் பங்கையும் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பையும் நாம் புறந்தள்ளலாகாது.

வடக்குகிழக்கு மாகாணங்களில் வேலையில்லாப் பிரச்சினையால் அவர்கள் விரக்தி நிலையில் இருப்பதனையும் காணமுடிகின்றது. இவ்வாறான இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும்.
வடக்குகிழக்கில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கமும் செயல்திட்டமும் பலாலி விமான நிலையத்தின் மேம்பாட்டுடன் இணைந்ததாகவே இருக்க முடியும்.

புலம்பெயர்ந்த மக்கள், தாங்கள் உண்ணும் உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களையும் இங்கிருந்து மிகவும் விருப்பத்துடன் வாங்கிச் செல்கிறார்கள். பலாலி விமான நிலையம் மூலமாக உள்ளூர் உற்பத்திகள் பெருமளவு ஏற்றுமதியாகும். நாட்டில் புதிதாக ஒரு விமான நிலையத்தைத் திறப்பதாயின் ஆகக் குறைந்தது மூன்று வருடங்களாவது செல்லும். இதுவரை பூரணமான பயனைப் பெற்றுக்கொள்ளாததும் அதிகளவு நன்மைகளை நாட்டுக்கு வழங்கக்கூடியதுமான பலாலி விமான நிலையத்தை நாம் இன்னும் கண்டுகொள்ளாமல் இருப்பது கவலைக்குரியது.

வசதிகளை நாம் துரிதமாகப் பயன்படுத்தினால் ஒரு வருடத்திற்குள்ளாகவே பன்னாட்டுத் தரம் வாய்ந்த பிராந்திய விமான நிலையமாக இதனை அரசினால் தரமுயர்த்த முடியும். இதற்கு உதவ இந்தியா முன்வரும். ஏற்கனவே இந்திய அதிகாரிகளால் இதற்குரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தற்போது பலாலி விமான நிலையம் இரண்டரைக் கிலோ மீற்றர் வரையிலான ஓடுபாதையைக் கொண்டிருந்தாலும் இலகுவாக மூன்றரைக் கிலோ மீற்றராக நீடிப்பதற்குத் தேவையான அரச காணிகளை உடனடியாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது. தனியார் காணிகளையோ, வேறு காணிகளையோ சுவீகரிக்க வேண்டிய தேவை ஏற்படாது.

இந்த விமான நிலையம் பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்தப்படின் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையிலான சிறப்பு விமான நிலையமாகவும் அதிகளவு மக்கள் குடாநாட்டுக்கு நேரடியாக வந்துசெல்லக்கூடியதாகவும் அமையும். நாட்டுக்குத் தேவையான அந்நியச் செலாவணி பெருமளவில் கிடைக்கும்.

பலாலி விமான நிலையம் கடலோடு இணைந்ததாக இருப்பதும் அருகில் காங்கேசன்துறை துறைமுகம் அமைந்திருப்பதும் எமக்கு கிடைக்கப் பெற்ற பெரிய செல்வங்கள். எனவே இத்துறைமுகத்தையும் பலாலி விமான நிலையத்தையும் இனியும் காலம் தாழ்த்தாது துரிதமாக அபிவிருத்தி செய்து மக்களின் பயன்பாட்டுக்கும் பொருளாதார, வர்த்தக தேவைகளுக்கும் பயன்படுத்த அரசு ஆவன செய்யவேண்டும்.

இந்த அபிவிருத்திகளை இனியும் நாம் உதாசீனம் செய்தால் எமது பிராந்தியத்தின் பொருளாதார, வர்த்தக வளர்ச்சியில் தேக்க நிலைமை ஏற்படும். அதிகரித்துச் செல்லும் வேலையில்லாப் பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும்.

இளைஞர்கள் மத்தியில் விரக்தி நிலைமை ஏற்பட்டு அவர்கள் மீண்டும் வெளிநாடுகளை நோக்கிச் செல்ல எத்தனிப்பர். இதனால் நாட்டுக்குத் தேவையான மனித வலுவை நாம் மேலும் மேலும் இழக்க வேண்டி ஏற்படலாம். இதனை பொதுமக்களுக்கான விமான நிலையமாக அபிவிருத்தி செய்யாவிடின், எதிர்காலத்தில் இது இராணுவ மற்றும் விமானப்படையின் விமான நிலையமாக மாற்றமடையும்.

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக நடவடிக்கைக்காகத் திறந்துவிடப்படல் வேண்டும். வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்கள் தற்போது கொழும்புத் துறைமுகம் மூலமே இறக்குமதி, ஏற்றுமதி வர்த்தகம் செய்கின்றார்கள். இதனால் வீண் செலவும் தூரமும் அதிக நாட்களும் செல்கிறது. ஆகவே காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக நடவடிக்கைக்காக திறந்துவிடல் வேண்டும்.

பொருளாதாரத்தில் புத்துணர்ச்சி பெற்ற புதிய பிராந்தியமாக வடபிராந்தியம் எழுச்சிபெற இது எமக்கு ஒரு வாய்ப்பாக கருதுகின்றோம். இதுதொடர்பில் தாங்கள் இலங்கை அரசுடனும் இந்தியத் தலைமை அமைச்சருடனும் உரையாடி விரைவாக நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் எதிர்பார்க்கின்றோம் என்றுள்ளது.

(Thinakkural)