பலிக்கடாக்களாகும் அரசியல் கைதிகள்

(கே. சஞ்சயன்)

அநுராதபுர சிறைச்சாலையில், மூன்று தமிழ் அரசியல் கைதிகள் நடாத்தி வரும், தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை அடுத்து, தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம், மீண்டும் தீவிர கவனிப்புக்குரிய விவகாரமாக மாறியிருக்கிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில், அரசியல் கைதிகள் விவகாரம், காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், காணிகள் விடுவிப்பு விவகாரம் என்பன, அவ்வப்போது சில சம்பவங்கள், போராட்டங்களால் உச்ச கவனிப்புக்குரியதாக மாறுவதும், பின்னர் அது தணிக்கப்படுவதும் அல்லது தணிந்து போவதும் வழக்கமாகியுள்ளன.

அந்தவகையில், இப்போது மூன்று வாரங்களாக, தமிழ் அரசியல் கைதிகள் நடத்தி வருகின்ற உண்ணாவிரதப் போராட்டத்தினால், அரசியல் கைதிகளின் விடுதலை, அவர்களுக்கான பொதுமன்னிப்பை வலியுறுத்தியும், தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளைத் தென்பகுதிக்கு மாற்றுவதைக் கண்டித்தும், மீண்டும் போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை உள்ளிட்ட அமைப்புகளும், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளும் அழைப்பு விடுத்திருக்கின்றன.

அரசியல் கைதிகளின் விவகாரம் உள்ளிட்ட, தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைளை, தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தமக்கான அரசியலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஒரு போதும் தயங்கியதில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்கி, தமிழ் மக்கள் பேரவை வரை அந்த நிலையில் இருந்து மாறவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, அனைத்துத் தரப்பினரும் குரல் கொடுத்தாலும், அதைச் சாத்தியமாக்கியவர்கள் தாங்களே என்று உரிமை கொண்டாடுவதில், அனைவருக்கு இடையேயும் போட்டி நிலவுவதுடன், அடுத்தவர் மீது பழிபோடுவதற்கும் பின்நிற்பதில்லை.

வடக்கில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையைப் பார்த்தால், இந்த விவகாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் அரசாங்கத்துடன் சேர்த்து குற்றவாளியாக்கி, இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்கு, மிகக் கவனமாகச் சொற்கள் கையாளப்பட்டிருப்பதை அவதானிக்க முடியும்.

ஏற்கெனவே, சில போராட்டங்களின் போதும் இதே அணுகுமுறை கையாளப்பட்டது. எல்லாத் தரப்புகளும் ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டிய, செயற்பட வேண்டிய தருணங்களில், அரசியல் பேதங்களை வெளிப்படுத்தி, பிரிந்து நிற்கின்ற அல்லது பிரித்து வைக்கின்ற செயற்பாடுகள் தமிழர் அரசியலில் மேலோங்கி வருகிறது.

அநுராதபுர சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று அரசியல் கைதிகள், தம்மை விடுவிக்குமாறு கோரி, இந்தப் போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.

அவர்கள் கோருவது, கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக, வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடாத்தப்பட்டு வந்த விசாரணைகளை, தொடர்ந்து அங்கேயே முன்னெடுக்க வேண்டும் என்பதைத்தான்.

சாட்சிகளின் பாதுகாப்பைக் காரணம் காட்டி, இவர்களின் வழக்குகளை, அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றியிருந்தார் சட்டமா அதிபர். அதற்கு எதிராகத்தான் அரசியல் கைதிகள், உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கின்றனர்.

இவர்களின் வழக்குகள் அநுராதபுர சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்னால், உள்நோக்கம் இருக்கிறது என்ற சந்தேகம் அரசியல் கைதிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இருக்கிறது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது சாட்சிகளுக்குப் பாதுகாப்பில்லை என்று தென்பகுதிக்கு மாற்றப்பட்ட வழக்குகளில், தமிழ் மக்களுக்கு சரியான நீதி கிடைக்கவில்லை என்பது, இந்தச் சந்தேகத்துக்கு முக்கிய அடிப்படை.

அதைவிட, அநுராதபுர மேல் நீதிமன்றத்தில் வழக்கை மீண்டும் விசாரிப்பதானால், புதிய விசாரணைகளே நடாத்தப்படும்; அதற்குக் காலம் வீணடிக்கப்படும். அநுராதபுர நீதிமன்றத்தில், சிங்களத்தில் வழக்கு நடத்தப்படுவதால் மொழிப் பிரச்சினையும் ஏற்படும்.
இதனால்தான், தமது வழக்குகளைத் தொடர்ந்தும் வவனியா நீதிமன்றத்திலேயே விசாரிக்க வேண்டும் என்கின்றனர் அரசியல் கைதிகள்.

ஆனால், சட்டமா அதிபர் திணைக்களமோ, வவுனியா நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை; அவர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுகிறது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் இந்தப் போக்கு, நீதித்துறை சுதந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்ளும் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லையென்றால், அதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது ஒரு நீதிமன்றத்தில் கடப்பாடு. அதைச் செய்திருக்கலாம். தேவைப்பட்டால் பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றுக் கொடுத்திருக்கலாம்.

அதேவேளை, சாட்சிகளுக்கு யாரால் அச்சுறுத்தல், யாரால் பாதுகாப்பு இல்லை, இதற்காக மீண்டும் சட்டமா அதிபர் திணைக்களம் புலிப்பூச்சாண்டி காட்டப் போகிறதா? போன்ற கேள்விகள் எழுகின்றன.

போர் முடிந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. முழுமையாகப் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் இராணுவம், பொலிஸ், அரசாங்கம் எல்லாமே கூறுகின்ற நிலையில், யாரால் பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதை சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியே ஆக வேண்டும்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பது, சாதாரண விடயமல்ல. முக்கியமாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை. அதை விட்டுவிட்டு, ஓடி ஒளிய வேண்டிய பிரச்சினையல்ல. வழக்குகளை இடம்மாற்றுவது, பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஓடி ஒளிவதற்குச் சமமானது.

இங்கு பாதுகாப்பு என்பது பிரச்சினைக்குரிய விடயமல்ல; எப்படியாவது வழக்குகளை அநுராதபுர நீதிமன்றத்துக்கு மாற்றி, வழக்குகளை இழுத்தடித்து, தண்டிப்பதுதான் உள்நோக்கமாகத் தெரிகிறது.

சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்று, இப்போது வவுனியாவில் இருந்து அநுராதபுர நீதிமன்றத்துக்கு வழக்குகளை மாற்றிய சட்டமா அதிபர் திணைக்களம், திருகோணமலை குமாரபுரத்தில் 26 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சாட்சிகளின் பாதுகாப்பைப் பற்றி கருத்தில் கொள்ளவில்லை.

போர்ச் சூழலில் கூட, சாட்சிகளின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல், குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தினரின் பாதுகாப்புக்காக என்று காரணம் கூறி, வழக்கு அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டது.

அந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சரியான நீதி வழங்கப்படவில்லை. அதுபோன்ற நிலை, மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது.

வவுனியா நீதிமன்றத்தில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு இல்லை என்பதும் அநுராதபுரத்தில் அது கிடைக்கும் என்பதும், வடக்கிலும் தெற்கிலும் இருவேறு நீதி முறைகள், பாதுகாப்பு முறைகள் இருப்பதாகவே அர்த்தப்படுத்தும் என்பதையும் சட்டமா அதிபர் திணைக்களம் கவனத்தில் கொள்ளவில்லை.

அதேவேளை, அரசியல் கைதிகள் விவகாரத்தில், அரசாங்கம் தீர்க்கமான ஒரு நடவடிக்கையை எடுத்திருக்கலாம். அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, தெளிவான ஒரு முடிவை அரசியல் ரீதியாக அறிவித்திருக்கலாம். ஆனால், அரசாங்கம் இந்தப் பிரச்சினையில் முன்னுக்குப் பின் முரணாகவே செயற்பட்டு வருகிறது.

வழக்குகளை இடம்மாற்றும் நடவடிக்கை நிறுத்தப்படும் என்று ஜனாதிபதி வாக்குறுதி அளித்திருந்த போதும், அது நிறைவேற்றப்படவில்லை.

இந்த விவகாரம் தீவிரமடைந்து, பிரச்சினைகளுக்குக் காரணம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் நடவடிக்கைகளே ஆகும் என்று, கடந்த புதன்கிழமை அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.

சட்டமா அதிபர் திணைக்களத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு மறைமுக பனிப்போர் நடந்து வருவது உண்மைதான். அதனால், அரசாங்கமும் கூட, சட்டமா அதிபர் திணைக்களத்தில் அதிக தலையீடுகளைச் செய்யத் தயங்குகிறது.

ஆனாலும், அரசியல் கைதிகள் விவகாரத்தில், ஜனாதிபதியும் அரசாங்கமும் தீர்க்கமான முடிவுகளை எடுக்காவிடின், அது ஒட்டுமொத்த நல்லிணக்க முயற்சிகளையும் புரட்டிப் போட்டு விடும் ஆபத்து இருப்பதை மறந்து விட முடியாது.

செவ்வாயன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து, அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பியபோது, அதுபற்றித் தனக்குத் தெரியாது என்று ஜனாதிபதி, பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே தாம், வழக்குகளை இடம்மாற்றக் கூடாது என்று சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அறிவுறுத்தியதாகவும் ஜனாதிபதி கூறியதாக, மனோ கணேசன் கூறியிருக்கிறார்.

அரசியல் கைதிகளின் போராட்டம் பற்றி, ஊடகங்களில் செய்திகள் வெளியாகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைப்புகளும் ஜனாதிபதிக்கு கடிதங்களை அனுப்புகின்றனர்.

நாடாளுமன்றத்திலும் இந்தப் பிரச்சினையை எழுப்பி உரைகள் ஆற்றப்பட்டன.
ஆனாலும், தனக்கு ஒன்றுமே தெரியாது என்று ஜனாதிபதி கூறியிருந்தால், அவருக்குத் தெரியாமல் இன்னும் எவ்வளவு சம்பவங்கள் நாட்டில் நடக்கின்றன என்று தெரியவில்லை.

பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூறாமல் நழுவிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ளப்படும் வார்த்தைதான் “ஒன்றும் தெரியாது”; அது ஜனாதிபதியின் வாயில் இருந்தும் வந்திருக்கிறது.

ஜனாதிபதிக்கு உண்மையிலேயே ஒன்றும் தெரியாமல் இருந்தால், அதற்கு அவரைச் சுற்றியிருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு மாத்திரமன்றி, பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் பங்கு இருப்பதை மறுக்க முடியாது.

தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற நோக்கம் அரசாங்கத்திடம் இல்லை. இந்த விடயத்தை சட்டமா அதிபர் திணைக்களமும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

அதேவேளை, இந்தப் பிரச்சினையை ஒன்றுபட்டுத் தீர்ப்பதற்கு உள்ள வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தமிழர் தரப்பிலும் பலவீன நிலையே வெளிப்படுத்தப்படுகிறது. இவையெல்லாம் அரசியல் கைதிகளுக்கு எதிரான வியூகங்களுக்கு சாதகமாக்கப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில் எல்லா தரப்பினரதும் பொறுப்பீனங்கள், அரசியல் நலன்களுக்கு, தமிழ் அரசியல் கைதிகள் பலிக்கடாக்களாகி நிற்கின்றனர்.