பிலிப்பைன்ஸ் – சீன பொருளாதார உறவு

(ஜனகன் முத்துக்குமார்)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிலிப்பைன்ஸ், பிராந்திய வல்லரசான சீனாவின் தென் சீனக் கடல் எல்லை தொடர்பான ஆக்கிரமிப்புக்கு எதிராக, டேவிட் எதிர் கோலியாத் பாணியிலான வழக்கைதத் தொடுத்திருந்த போதிலும், பிலிப்பைன்ஸ் – சீன உறவானது அண்மைக்காலத்தில் சுமூகமான நிலையை அடைந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. அவ்வாறாக பிலிப்பைன்ஸ் தனது எதிர்ப்புக் கொள்கைகளைத் தளர்த்துவதற்கும் சீனாவுடன் இணைந்து போதலுக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதில் சீனாவுடனான பொருளாதாரத் தொடர்புகளின் வகிபாகம் முக்கியமென பிலிப்பைன்ஸ் உணர்ந்தமையே காரணமாகும் என, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிலிப்பைன்ஸ், ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியாக மிகவும் பலம் வாய்ந்த சீனா, அவுஸ்திரேலிய, இந்தோனேஷியா, ஜப்பான் போன்ற நாடுகளால் சூழப்பட்ட சிறிய தீவு நாடாகும். அதன் பொருளாதாரம், பாதுகாப்பு, இராணுவ உதவிகள் என்பன, அதன் முன்னாள் காலனித்துவ நாடான அமெரிக்கா மற்றும் அதனது நேசநாடுகளின் சர்வதேச வியாபார மற்றும் பாதுகாப்பு உதவிகள் மூலம் கடந்த காலங்களில் ஈடுசெய்யப்பட்டிருந்தாலும், பிலிப்பைன்ஸ், வேலைவாய்ப்பைக் கண்டறிவதற்கான ஒரு பெரிய மக்கள் தொகையை உள்ளடக்கியிருப்பதும், மற்றும் அவசரகால உள்கட்டமைப்புத் திட்டங்களை மேம்படுத்துவதில் போதிய நிதித்தேவைப்பாடுகள் காணப்படுகின்றமை எனப்பட்ட காரணங்கள், வெறுமனே அமெரிக்கா, மற்றும் நேச நாடுகளின் அடிப்படை உதவிகளால் மட்டும் ஈடுசெய்ய முடியாதவையாகும்.

இதன் காரணமாக பிலிப்பைன்ஸ், சீனாவுக்கான தனது இறுக்கப்போக்கைத் தளர்த்தியுள்ளமையைக் காணலாம். தென்சீனக் கடல் விவகாரம், சீனாவின் ஆதிக்கம் மற்றும் பிராந்தியக் கொள்கைகளுக்கு முரணான சீனா செயற்படுதல் என்பன, பிலிப்பைன்ஸ் வெளிவிவகாரக் கொள்கைகளுக்கு முரணான அமைகின்ற நிலையிலும், மணிலா இப்போது, பெய்ஜிங்கில் இருந்து முதலீட்டைப் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதை, அண்மைய சீனா – பிலிப்பைன்ஸ் அரச உயர்மட்ட சந்திப்புகள் உறுதிசெய்கின்றன. பிலிப்பைன்ஸ் நிதி அமைச்சர் கார்லோஸ் டோம்பினியூஸ், சிங்கப்பூரில் இது பற்றிக் கருத்துரைக்கையில் “இந்த நேரத்தில் இரு நாடுகளும் (சீனா மற்றும் பிலிப்பைன்ஸ்) முரண்பாடுகளைத் தவிர்த்து, இரு தரப்பு நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது மிக முக்கியம்” எனவும், “ஆயினும் நாங்கள் தென்சீனக் கடல் தொடர்பில் சீனாவின் ஆக்கிரமிப்புக்கு எதிரான போக்கைக் கைவிடவில்லை” எனவும் கூறியிருந்தார்.

பிலிப்பைன்ஸில் சீன முதலீடு 42 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ளதாக, 2014ஆம் ஆண்டு முதலீடு தொடர்பான அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஆயினும், இது ஜனாதிபதி றொட்ரிகோ டுட்டேர்ட்டேயின் “பிலிப்பைன்ஸைக் கட்டியெழுப்புதல்” தொடர்பான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையாக உள்ள 180 பில்லியன் அமெரிக்க டொலர்களில், மிகவும் குறைவான பகுதியே ஆகும். இந்நிலையிலேயே ஆறு வருட காலத்துக்கான 200 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கடன்தொகையை, சீனாவானது, பிலிப்பைஸுக்கு வழங்குவதற்கு சம்மதித்தமையானது, குறித்த பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் செயலாக பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க – பிலிப்பைன்ஸ் உறவானது, பரிஸ் ஒப்பந்தம் அடிப்படையில் ஸ்பெயின் தனது காலனித்துவத்தை, அமெரிக்காவுக்கு 20 மில்லியன் டொலர்களுக்கு வழங்கியதைத் தொடர்ந்து உருவானது. தொடர்ந்து ஆசியான் (ASEAN) அமைப்பில் பிலிப்பைன்ஸ் உறுப்புரிமை பெற்றதைத் தொடர்ந்தும், ஆசியானானது சீனாவின் பொருளாதார வல்லரசாண்மை அல்லது பொருளாதார ஆக்கிரமிப்புக்கு எதிரான வடிவம் பெற்றதை தொடர்ந்தும், அமெரிக்க – பிலிப்பைன்ஸ் மற்றும் ஆசியாவின் உறுப்புரிமை நாடுகளுக்கிடையிலான பொருளாதாரத் தொடர்புகள் வலுப்பெற்றிருந்தன. ஆயினும் சீனாவின், பிராந்திய வளர்ச்சி மற்றும் சர்வதேச வியாபாரத்தை விருத்திசெய்தல் தொடர்பான கொள்கைகள், பிராந்திய நாடுகளுக்கான தொடர்ச்சியான பொருளாதார உதவிகள், சீனாவின் கடன் வழங்குதல் தொடர்பான மென்மையான போக்கு மற்றும் சீனா குறித்த பொருளாதார உறவு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில், குறிப்பாக மனித உரிமைகள் மற்றும் சிறுபான்மையினரது பாதுகாப்பும் உரிமைகளும் தொடர்பான விடயங்களில் தலையிடாத்தன்மை என்பன, பிலிப்பைன்ஸ், சீனாவுடனான மென்மைப்போக்கை கையாள வழிவகுத்ததெனலாம்.

மறுபுறம், ஆசியான் மற்றும் பிலிப்பைன்ஸ் இடையில் பிலிப்பைன்ஸ் மனித உரிமைகளை மதிக்காத தன்மையில், அது தொடர்பாக கண்டனப்போக்கைக் கையாளுதல், பிலிப்பைன்ஸ், தனது உறுப்புரிமையையும் தாண்டி தனது இறைமை மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக சீனாவுடன் இணைந்து செயற்படுவதை ஊக்குவித்தது. மேலதிகமாக தற்போதைய அமெரிக்க நிறைவேற்றுத்துறையின் தெளிவற்ற வெளிவிவகாரக் கொள்கைகள், அமெரிக்காவின் நீண்டகால உறவைத் தாண்டி பிலிப்பைன்ஸ், பொருளாதார மற்றும் பாதுகாப்புத் தொடர்பான உதவிகளை வழங்குவதில் அமெரிக்க இராஜாங்கச் செயலகம் கொண்டுள்ள அசமந்தப்போக்கு என்பனவும், வேகமாக மாற்றமடைந்துவரும் பூகோளவியல் அரசியலில் பிலிப்பைன்ஸ் தனது நிலைமையைப் பேணுவதற்கு, சீனாவுடனான உறவை மேலதிக கருவியாகப் பயன்படுத்த ஏதுவான காரணியாக அமைந்ததெனலாம்.