புதிய அமைச்சர்கள் பழைய எதிர்பார்க்கைகள்!?

வடக்கு மாகாண சபை நீயா நானா நிகழ்ச்சி முடிவுக்கு வந்தபின் இரண்டு அமைச்சர்கள் தமது இராஜினாமா கடிதங்களை முதல் அமைச்சர் வசம் கையளித்து அமைதி காக்கின்றனர். இடையில் யாரை புதிய அமைச்சர்களாக நியமிப்பது என்ற கலந்துரையாடல் தமிழ் அரசு கட்சி காரியாலயத்தில் இடம் பெற்றதாகவும் அதில் திரு ஆணல்ட் அவர்களை கல்வி அமைச்சராக நியமிக்க பெரும் ஆதரவும்   அதே வேளை எதிரணியில் திருமதி அனந்தி  அவர்களையும் அமைச்சராக்கும் அழுத்தமும் வந்ததாம்.

உறுதிப்படுத்த முடியாத செய்தி என்றாலும் புகையை பார்த்து நெருப்பு இருந்ததை அறிந்து பலரும் பலவித பதிவுகளை முகநூலில் பதிவிட்டனர். அதில் ஒருவர் அனந்தி வந்தால் ஆபத்து என அபாய சங்கு ஊதினார். இன்னொருவர் செம்மறிகளுக்கு அமைச்சு பதவி என பின்னூட்டம் போட்டார். அவர்கள் அவ்வாறு செய்த உள்நோக்கம் புரியவில்லை. ஏதோ வாய்க்கால் வரப்பு தகராறு என்றால் விட்டு விடலாம். இதுவோ அரசியல் மற்றும் நிர்வாகம் சார்ந்தது என்பதால் ஆராயப்பட வேண்டிய நிலை.

ஆணல்ட் அவர்கள் ஆரம்பம் முதலே சுமந்திரனின் செம்பு என ஒரு அணியினர் பகிரங்கமாக அவரை நையாண்டி பண்ணுவது வழமை. முதல்வருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவரின் பங்களிப்பும் இருந்தது. தன்னை தமிழ் அரசு கட்சி சார்பாகவே நிலை நிறுத்தும் அவர் சுமந்திரன் மற்றும் மாவைக்கு விசுவாசமாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. மாகாண சபை விவாதங்களில் போது அவர் முன்வைக்கும் விடயங்கள் காத்திரமானவை. இருந்தும் அவர் பக்கசார்பானவர் என்றும்,

சுமந்திரன் வழிநடத்தலில் சயந்தன் மற்றும் வேறும் சில உறுப்பினர்களுடன் இணைந்து முதல்வருக்கு எதிரான நிலைப்பாட்டில் அவர் செயல்ப்படுவதாக பரவலான குற்றசாட்டு எதிர் அணியினரால் முன் வைக்கப்படுகிறது. இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த எதிரணி என்பது தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு வென்ற கூட்டு அணியின் உறுப்பினர்கள் என்பதே. வீடு இரண்டானால் சயிக்கிளுக்கு வாசி என்பதை ஹர்த்தாலும் வவுனியா தள்ளுமுள்ளும் நிரூபித்தது.

இலவுகாத்த கிளிகள் நிலை அவர்களுக்கு வந்ததும் புதிய பிரச்சனை தமிழ் அரசு கட்சி காரியாலத்தில் கலந்துரையாடப்பட்டது. இது ஒரு விதி விலக்கான செயல். மந்திரிசபையை தெரிவு செய்யும் பூரண அதிகாரம் முதல் அமைச்சருக்கே உண்டு. அதுபற்றி கட்சி முதல்வருடன் கலந்து பேசலாம் சிபாரிசு செய்யலாம். தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரு கட்சி அல்ல. அது நான்கு கட்சிகளின் கூட்டு. எனவே  எப்படி தமிழ் அரசு கட்சி மட்டும் முடிவை எடுக்க முடியும்?. அதை முதல்வர் ஏன் ஏற்க்கவேண்டும்?.

ஏற்கனவே தமிழ் அரசு கட்சி தான் முதல்வருக்கு எதிராக களம் இறங்கியது. ஏனையவை அவருக்கு அதரவாக குரல் எழுப்பின. இறுதியில் முதல்வர் கரம் ஓங்கியது. பிரச்சனை பெரிதானால் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியும் ஆட்டம்காணும் என்ற புரளியும் எழுந்தது. தமிழர் மானம் காக்க மத தலைவர் மத்தியஸ்த்தம் வகிக்கும் அளவுக்கு அரசியல் தலைமை நிலை குலைந்தது. நிலைமை சீராகும் என்ற போது ஆணல்ட் கல்வி அமைச்சர் என்ற புயல் மாட்டின் வீதியில் மையம் கொண்டது.

முந்திக்கொண்டார் முதல்வர். தன் தெரிவை ஆளுநருக்கு அனுப்பி தனது தம்பிக்கு மந்திரி பதவி கேட்டார் என அன்று மேடையில் கூறியதை மறந்து, செஞ்சோற்று கடன் தீர்க்க தன்னை பதவியில் நீடிக்க உதவிய சுரேஸ் பிரேமசந்திரன் தம்பியான சர்வேஸ்வரனை மாகாண கல்வி அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்தார். அன்று தகுதிக்கு பதவி கொடுத்தபோதும் சர்வேஸ்வரன் கலாநிதி.ஆனால்  அன்று முதல்வருக்கு அவர் தகுதியில்லா கல்லா நிதி. இன்று பதவிக்கு ஆபத்வாந்தனானதால் கலாநிதி.

மாட்டின் வீதியில் மையம் கொண்ட புயல் சேதாரம் ஏதும் இன்றி பாசையூர் பக்கமாக கரைகடந்து சென்று விட்டது. வலு கலாதியான அரசியல் சதுரங்கம். எப்படியாவது முதல்வருக்கு குடைச்சல் கொடுக்க அமைச்சர் அவையில் நுழைக்க இருந்தவரை முதல்வர் அவசர நிலையை கவனத்தில் கொண்டு தற்காலிக அமைச்சர்களாக இவர்களை நியமிப்பதாக தன்னை நியாயப்படுத்தி கொண்டார்.   மிகுதி காலம் முடியும் வரை இன்னொரு அமைச்சரவை மாற்றம் வரும் போல தோன்றவில்லை.

காரணம் நியமனம் பெற்ற இருவரும் முதல்வருக்கு ஆதரவாக செயல்ப்பட்ட எதிரணியில் இருப்பவர். மற்றும் போராட்ட இயக்கங்களுடன் நேரடி தொடர்புபட்டவர்கள். அவர்கள் சார்ந்த அமைப்புகளின் செயல் பாடுகள் பற்றிய நேரடி அனுபவம் உள்ளவர்கள். குறுகிய காலம் என்றாலும் தங்கள் செயல்பாடு பற்றிய சாதகமான பெயரை எடுப்பதில் முனைப்பு காட்டுபவர்கள். காரணம் அவர்கள் தமது ஓய்வு காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. தம் இளவயதில் இயக்கங்களுடன் தம்மை இணைத்தவர்கள்.

அதனால் மனத்தளவில் அவர்களுக்கு மக்கள் பற்றிய புரிதல் மற்றும் நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்கின்ற நெருக்குதல் நிறையவே இருக்கும். கல்வி சார்ந்த துறைக்கு பொறுப்பானவர் அந்த துறை சார்ந்த நிர்வாக அனுபவம் இல்லாதவர் என்ற போதும் அவரிடம் போராட்ட கால அரசியல் பார்வையும் தான் கல்வி கற்ற சென்னை மாநில கல்லூரி மற்றும் டெல்லி ஜவர்ஹலால் நேரு பல்கலைக்கழக பட்டறிவு உண்டு. மகளிர் விவகாரம் பற்றிய நடைமுறை சிக்கலை புரிந்தவர் புதிய மகளிர் அமைச்சர்.

எனவே இருவரின் குறுகிய கால செயல்ப்பாடும் அவர்களை நிரந்தர நீடிப்புக்கு இட்டுச்செல்வதாகவே இருக்கும். இருவருமே தங்கள் அரசியல் எதிர்காலத்துக்கு அத்திவாரமாக இந்த அமைச்சு பதவிகளை தக்கவாறு பயன்படுத்த அதிகாரிகளின் மீதான தேவையற்ற அரசியல் அதிகாரங்கள் பயன்படுத்தல் என்ற நிலைக்கு செல்லாமல் அவர்களின் ஆலோசனைப்படி தாம் எதிர்பார்க்கும் தமது துறைசார்ந்த செயல்ப்பாட்டை ஊக்குவித்தால் அவர்கள் நினைத்த மக்கள் பயனடையும் இலக்கை அடைய முடியும்.

அரசியலும் நிர்வாகமும் இரட்டை குதிரைகளாக ஒரு திசையில் பயணிக்க முற்படுகையில் ஊழல் மற்றும் நிர்வாக துஸ்பிரயோகம் ஏற்ப்பட வாய்ப்பு இல்லாது போகும். அரசியல் நோக்கில் பதவிக்கு வரும் எவரும் தான் சார்ந்தவர் நலன்களை கவனிக்க முற்படும்போது தான் அதிகாரிகளும் தாம் சார்ந்த செயல்களை செய்யும் சந்தர்ப்பம் ஏற்ப்படுகிறது. மாறாக அரசியல் தலைமை நேர்மையுடன் செயல்ப்பட்டால் ஊழல் மற்றும் அதிகார துஸ்பிரயோகம் நிதி வீண் விரயம் நிச்சயம் தடுக்கப்படும்.

புதிய அமைச்சர்களிடம் பொதுவான எதிர்பார்க்கை ஊழல் அற்ற அதிகார துஸ்பிரயோகம் அற்ற, வீண் நிதி விரயம் நிர்வாக தலைமையை மட்டுமே. திறம்பட செயல்ப்பட கூடிய நிர்வாக அதிகாரிகளை ஊக்குவித்து பகிரப்பட்ட அதிகாரங்களை இயன்றவரை விரைவாக அமுல்ப்படுத்தி சீரான நிர்வாக கட்டமைப்பை தொடர் கண்காணிப்பின் மூலம் நடைமுறைப்படுத்த தமக்கு கிடைத்த தந்த தற்காலிக பதவிகளை புதியவர்கள் பயன்படுத்துவார்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை காலத்திலும் சரி விடுதலை புலிகளின் காலத்திலும் சரி அவர்களின் செயல்பாட்டில் ஊழல், நிர்வாக சீர்கேடு, அதிகார துஸ்பிரயோகம், நிதி வீண் விரயம் போன்ற விடயங்கள் இன்று விஸ்வரூபம் எடுத்திருப்பது போல இடம்பெறவில்லை. ஆனால் மக்களால் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவு செய்யப்பட்ட சபை இன்று முழு நாடுமே பரிகாசிக்கும் அளவுக்கு தலை குனிந்து நிற்கிறது. புதிய அமைச்சர்கள் பழைய பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் அவல நிலை.

இருந்தும் இளையவரான இவர்களிடம் நிறையவே எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களால் முடியும் என்ற நம்பிக்கை அவர்கள் சார்ந்த அமைப்புகளால் ஏற்ப்படுகிறது. காரணம் ஒன்றே ஒன்றுதான். அது அந்த அமைப்புகள் தோன்றியதற்கான காரணம் மட்டுமே. தங்கள் மக்களின் நிலைகண்டு மாற்றம் வேண்டி போராட்டம் மட்டுமே வழி என புறப்பட்டு மக்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த தியாகிகள் மற்றும் மாவீரர்கள் இருந்த பாசறையில் இவர்கள் பாடம் படித்தவர்கள். சோடை போக மாட்டார்கள்.

– ராம் –