புல்லுச் சாகாமல் நடந்ததும், புலிகளுக்கு இரையாகிப் போனதும்!

(எஸ்.எம்.எம்.பஷீர்)

“இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.”   ( குறள்)

திருகோணமலை மாவட்ட மறைந்த முன்னாள் துறைமுகங்கள் கப்பற்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ஈ எச்.எம் . மஹ்ரூப் 20 வருடங்கள் , தனது மரணம் வரை நாடாளுமன்ற அங்கத்தவராக இருந்தவர், அமைச்சர் பதவி வகித்தவர். அவர் தமது பிரதேச மக்களுக்கு ஆற்றிய பல்வேறு பணிகளில் கல்வி சார்ந்து அவர் ஆற்றிய பணிகள் குறித்து நூல் ஒன்று வெளியிடும் வைபவம் இன்று காலை மூதூரில்  இடம்பெறப் போவதாக ஒரு செய்தி கண்ணில் பட்டது.

திருகோணமலை மாவட்ட  மக்களுக்கு இன மத பாகுபாடின்றி சேவையாற்றியவர் மஹ்ரூப் என்பதை அவரின் மரணச் சடங்கின் பொழுது கலந்து கொண்ட சுமார் 30,000 மக்களின் (சிங்கள , தமிழ் மக்கள் உட்பட) பிரசன்னமே சான்றாகும் .

கிண்ணியாவை சொந்த ஊராக கொண்ட இவரின் சகோதரர் முஹம்மது அலியும் ஒரு முன்னாள் நாடளுமன்ற உறுப்பினராகவிருந்தவர் என்பதும் இவர்களின் குடும்பமே ஒரு அட்டகாசமில்லாத ஆர்ப்பாட்டமற்ற அரசியல் குடும்பம் என்று சிலாகித்துப் பேசப்படுபவர்கள்.

கிண்ணியா , மூதூர் தோப்பூர் உள்ளடங்கலான திருகோணமலை மாவட்ட மக்களின் அரசியல் வரலாற்றுடன் பாரம்பரியமாக பின்னிப் பிணைந்த ஒரு மனிதனின் ஞாபகார்த்தமாக , அதிலும் அவரின் 16வது நினைவு (!) தினத்தினை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்வில் அவரை ஒரு தடவை எதோச்சையாக சந்தித்த  நினைவுகளுடன் அவரின் மரணத்தையும் என்னால் நினைவு கூறாமலிருக்க முடியவில்லை.

துரதிஷ்டவசமாக சுமார் 30 வருடகால தமிழ் ஆயதப் போராட்ட காலத்தில் தமிழ் ஆயுததாரிகளினால் , குறிப்பாக புலிகளால் வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட முஸ்லிம் பொது மக்கள் ஒரு புறமிருக்க,  முஸ்லிம்களின் சமூக அரசியல் நலன் சார்பில் அக்கறையுடன் செயற்பட்ட  அரசியல்வாதிகளும் அறிவு ஜீவிகளும் புலிகளால் மறுபுறத்தில் கொல்லப்பட்டனர்.

அந்த இனப் படுகொலையாட்டம் (killing spree) முஸ்லிம் சமூகத்திற்காக துணிந்து குரல் கொடுத்த பலரையும் விட்டு வைக்கவில்லை. ஒவ்வொரு ஊரிலும் முஸ்லிம் தலைவர்கள் புத்தி ஜீவிகள் . அரச உயர் பதவியாளர்கள் என பலர் திட்டமிட்ட வகையில் புலிகளால் பலி எடுக்கப்பட்டனர்.

அப்படித்தான் இந்த மஹ்ரூபும்  புலிகளின் நர மாமிச வேட்டையில் பலியாகிப் போனார். இவரை எல்லோரும் இவரின் அரசியல் பணியில் காணப்படும் தயக்கங்கள்  , தாமதங்கள் குறித்து விமர்சித்தாலும் இவரின் நற்பண்புகள் குறித்து சான்று வழங்கினர். மென்மையாகப் பேசுவதே இவரின் மேன்மையாக இருந்தது. 1990 களின் ஆரம்பத்தில் இவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பு தங்கும் விடுதியில் தற்செயலாக சமூகப் பிர்ச்சினை குறித்து சந்திக்க நேரிட்ட பொழுது எவ்வித பந்தாவோ , அட்டகாசமோவின்றி  ஒரு அமைச்சரை ,  ஒரு முஸ்லிம் அரசியல்வாதியை , ஒரு இடதுசாரி அரசியல்வாதியை போல சந்திக்க நேரிட்டது எனக்கு ஆச்சரியமாகவே  இருந்தது. ஆனால் எனக்கு அந்த மனிதர் பற்றி மேலதிகமாக சந்தித்து அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஜூலை மாதம் 1997 திருகோணமலை மாவட்டத்தில் 46  முஸ்லிம் மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் புலிகள் கடத்திச் சென்று இரண்டு நாட்களின் பின் அவர்களில்  23 பேரை புலிகள் , (அவர்களின் படகுகளை திருப்பிக் கொடுக்காமல் ) மாத்திரம் விடுவித்தனர். அத்துடன்  எஞ்சியோரை விடுவிக்க தலா ஒரு லட்சம் ரூபாய் கப்பம் கோரினர்.

ஆனால் அதற்கு முன்பாக ஜூன் மாதம் 1997  புலிகள் கடத்திய முஸ்லிம்  மீனவர்களில் 39 பேரில் ஏழு பேரை மாத்திரம் விடுவித்தனர் என்பதுடன் ஏனையோரை விடுவிக்க இராணுவம் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் புலி உறுப்பினர்கள் ஐவரை விடுவிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மஹ்ரூப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்களின் குடும்பங்களைப் பார்க்கவே 20ம் திகதி சென்று கொண்டிருந்தார். அதனை அறிந்து கொண்ட புலிகள் இலகுவாக அவரை குறி வைத்தனர்.

மஹ்ரூப் 20ம் திகதி ஜூலை 1997ல் அவர் நிலாவெலிக்கு செல்லும் பாதையில் வைத்து ஆறாம் மைல் கல்லில் அவருடன் பிரயாணம் செய்த ஐவருடன் அதிலும் ஒரு நாலு வயது குழந்தை உட்பட  அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த ஈனக் கொலை நடந்த இரு வாரங்களுக்கு முன்னரே புலிகள் திருகோணமலை மாவட்ட தமிழர் விடுத்தக் கூட்டணி எம்.பீ யான அருணாச்சலம் தங்கத்துரையை புலிகள் கொன்றனர். அந்த கொலையிலும் பலர் அவருடன் சேர்த்து புலிகளால் கொல்லப்பட்டனர். புலிகளின் பயங்கரவாதத்தின் கொடுமைகளை அவ்வப்போது தமிழர்களில் மிதவாத அரசியவாதிகளும் , நேர்மையான புத்தி ஜீவிகளும் அனுபவித்தனர். மறைந்த தங்கத்துரை புலிகளால் கொல்லப்பட்ட  மூதூர் எம்.எல். ஏ. மஜீதின் நண்பர் என்பதும் அவரும் தனிப்பட்ட வகையில் முஸ்லிம் சிங்கள மக்களுக்குள்ளும்  நன் மதிப்புப் பெற்றவர். மஹ்ரூபும் பல்லின மக்களின் நன் மதிப்பைப் பெற்றவர்.

ஆனால் அவரை புலிகள் கொன்ற பொழுது மிகுந்த வேதனையாக இருந்தது, இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம் என்ற ஆதங்கம் மனதில் குடி கொண்டது. அந்த ஆதங்கம் இறுதியாய் காவல்துறை உயர் அதிகாரி  மருதமுனை எஸ். ஜமால்தீனை புலிகள் கொல்லும் வரை இருந்தது.

இன்று அவரின் கல்விப் பணிக்காக அவரின் நினைவு தினத்தில் நடத்தப்படும் நிகழ்வு , புலிகளின் வெறியாட்டத்தின் விளைவுகளாய் இரத்தம் சிந்திய தமது மக்கள் குறித்த அக்கறை கொண்ட அரசியல் நாகரீகம் படைத்த நல்ல மனிதர்கள் பலரை நினைவு கூறும் ஒரு துன்பம் இழையோடிய நாளாகவும் அமைகிறது. தனது சமூகத்துக்கு போதிய பாதுகாப்பில்லை புலிகளிடமிருந்து தமது மக்களைப் பாதுகாக்க முடியவில்லை என்ற குறைபாட்டை அவர் ஒரு பத்திரிக்கையாளருக்கு வெளிப்படுத்திய சில நாட்களின் பின்னர் புலிகளால் கொல்லப்பட்டார். என்பதுடன் முரண் நகையாக பின்னாளில் புலிகளால் கொல்லப்பட் இன்னுமொரு தமிழ் தலைவரான  ஜார்ஜ் பெர்னாண்டோ புள்ளே மக்ரூபின் உடல் அடக்கம் செய்யப்படும் நிகழ்வில் கலந்து கொள்ள ( சுதந்திரக் கட்சி அரச நாடாளுமன்றக் குழுவிற்கு ) தலைமை தாங்கி கிண்ணியா வந்திருந்தார்.  அவரே இறுதியாக புலிகளால் கொல்லப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகும்(2008).