போய் வாருங்கள் ஜோ!….

இலங்கையில் தோழர் வரதராஜபெருமாள் தலைமையில் அமைந்த வடகிழக்கு மாகாண அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தவர் தோழர் ஜோ செனவிரத்ன. இவர் பிறப்பால் சிங்களவர். எண்ணத்தால் ஒரு சர்வதேசியவாதி. இடதுசாரிக் கொள்கைகளில்
நாட்டம் பெற்று தொழிற்சங்க இயக்கத்தில்
தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர். பின்னாளில் பத்மநாபா தலைமையிலான  ஈபிஆர்எல்எப் இயக்கத்துடன் இணைந்து
தீவிர அரசியல் செயல்பாடுகளில் களம் கண்டவர். இவர் ஓர் எழுத்தாளரும், பத்திரிகையாளரும்கூட. ஓஷோ குறித்த இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை என்கிறார்கள்.
1988 அல்லது 89?
சரியாக நினைவில் இல்லை.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் – ICP –
மாநில மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்திருந்தார் அமைச்சர் ஜோ.

ஜீவாமுழக்கம் அரசியல் வார இதழுக்காக அவரை நேர்காணல் செய்யும் பொறுப்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்தது.

நான் கேள்வி கேட்கத் தொடங்கினேன்.

பதில் சொல்லத் தொடங்கியவர், சட்டென்று நிறுத்தி,

“ஒரு சந்தேகம். எனது பதிலை நீங்கள்
தாளில் பதிவு செய்யவில்லையா?”

“இல்லை தோழர். மனதில் இருத்திக் கொள்வேன்….”

“விடுபடக்கூடாதில்லையா? குறிப்பாவது எடுத்துக் கொள்ளலாமில்லையா ?”

“தேவையில்லை தோழர். நேர்காணலின்போது
பேப்பர் பேனா வைத்துக்கொள்வது பழக்கமில்லை!”

(ஆணவம்!)

அவர் என்ன செய்வார் பாவம்.

ஏறக்குறைய இரண்டுமணி நேர நேர்காணல் முடிந்தது. முடிந்து கிளம்பும்போது அவர் சொன்னார் :

“ஒரு வேண்டுகோள்! இந்தப் பேட்டியை வெளியிடும்முன் நான் ஒருமுறை படித்தபிறகே
நீங்கள் பிரசுரிக்கவேண்டும். நான் நாளை மறுநாள் இலங்கை சென்றுவிடுவேன். அதற்குமுன்னால்
அதை நான் முழுவதுமாகப் படித்துப் பார்க்க விரும்புகிறேன்…”

புன்னகையுடன் ஆமோதித்தேன்.

மறுநாள் காலை முழு நேர்காணலின் எழுத்து வடிவத்தையும் அவரிடம் கொடுத்தபோது அவர்
பார்த்தப் பார்வையின் பொருள் எனக்கு விளங்கவேயில்லை.

மாநாட்டு இடைவேளையில் என்னை அழைத்து கைகுலுக்கிய அமைச்சர் “ஒரு திருத்தமுமில்லை தோழரே .அப்படியே வெளியிட்டுவிடுங்கள்…” என்று சிரித்தவர் ஓர் அன்புப் பரிசையும் தந்துவிட்டுச் சென்றார்.

மறுநாள் ஒரு தோழர் சொன்னார்….

“ரதன். ஒருமுறை உங்களை அமைச்சர்
இலங்கை அழைத்து வரச் சொல்லியிருக்கிறார்!”

அந்த நேர்காணல் ஜீவாமுழக்கத்தில் வெளியாகி
அதன் வாசகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றது.
___________________________________________________

தோழர் ஜோ செனவி ரத்ன
நேற்று இறந்துவிட்டார் என்கிற செய்தியை
இஸ்கப் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பாஸ்கரன் நள்ளிரவு வாட்ஸாப்பில் தெரிவித்தபோது
மிகுந்த வருத்தம் கொண்டேன்.

ஏழை எளியோரிடம் பாகுபாடு பேதம் பார்க்காது பழகி அவர்களுக்காக உழைக்க முன்வந்த
அந்த ‘உயர்ந்த மனித’னுக்கு
முகநூல் நண்பர்களோடு இணைந்து
ஆழ்ந்த இரங்கலை மொழிகிறேன்.

“வரலாறு நெடுகிலும் உங்களைப் போன்றோரின் வியர்வைத் துளிகள்தாம்
மானிடத்தின் செம்மைப்பாதைக்கு
உரமாய் வீழ்ந்திருக்கின்றன. அதற்கான நன்றி உங்களுக்கே உரித்தாகும்.

போய் வாருங்கள் ஜோ!”

(Rathan Chandrasekar)