ஜோ!

(தோழர் சேகர் – பாஸ்கரன்)

சுடரும் தீப்பந்தமாய் எழுந்து, தன் புரட்சிப் பணியை முடிந்தவரை முன்னெடுத்துப், பல உள்ளங்களில் சிந்தனைச் சுடரேற்றிவிட்டு, காலச் சக்கரத்தின் சுழற்சின் தவிர்க்கமுடியாத இயற்கை விதியோடு இணைந்து நிரந்தர ஓய்வெடுத்துக்கொண்ட அன்புத் தோழன் ஜோவுக்கு இதயம் கனிந்த நன்றியறிதலோடு பிரியாவிடையளிப்போம் தோழர்களே!


எண்பதுகளின் ஆரம்பத்தில் கொழும்பில், கொள்ளுப்பிட்டி காலி வீதியிலமைந்திருந்த மேர்ஜ் எனும் நீதிக்கும் சமத்துவத்துவத்துக்குமான இயக்கத்தின் காரியாலயத்தில் அவர் அவ் அமைப்பின் தொண்டர்களோடுசேர்ந்து ஏதோ ஒரு பாடலைப் பாடியபடி சந்தோஷமான மனிதராக அவரைக் கண்டேன். அப்போது அவர்தான் மேர்ஜ் அமைப்பின் தலைவராக இருந்ததாக ஞாபகம். கடுமை நிறைந்த புரட்சியின் எதிர்கால நெடும் பயணம் பற்றிய தீவிர எண்ணங்கள் யாவும் அவரைக் கண்ட மாத்திரத்தில் மெழுகென உருகிப்போக, மகிழ்ச்சியை அள்ளிக் கைகளில் தருகின்ற, கவலையற்ற மனிதராக அவர் புன்னகைத்து நின்றார். “வாங்க தோழர், நலமா?” என்று, தமிழரையும் விஞ்சிய செந்தமிழில், கனிவுடன் அழைத்து அன்புததும்பப் பார்த்து நலம் விசாரித்தபோது, சிவந்த அழகான அந்தப் விசாலமான முகத்தில் அகல விரிந்திருந்த பெரிய விழிகளில் அன்பு நிறைந்திருந்ததை நான் கண்டேன்.

இந்த இனிய மனிதரோடான பிணைப்பு பின்னாட்களில் உயிருடன் இணைந்த உறவாகப் பிணையும் என்று அன்று தெரிந்திருக்கவில்லை. இனவாதம் உச்சக் கொப்பில் நின்று, தமிழ்பேசும் மக்கள்சார்பாகக் குரலெழுப்பும் சிங்களவரைத் “துரோகி” என முத்திரை குத்திய அந்தக் காலத்தில், – இடதுசாரிக் கட்சிகள் மென்று விழுங்கிக்கொண்டு இனப்பிரச்சினைபற்றி நிலைப்பாடெடுக்க முடியாது தத்தளித்துக்கொண்டிருந்தபோது- தலைநகரிலிருந்துகொண்டே “ஈழம் பிரிந்து போவதற்கு உரிமை உண்டு” என்று துணிந்து கூறிய ஒருசில சிங்கள முற்போக்குவாதிகளுக்குள் அவர் ஒரு முன்னோடியாவார்.

சமூக மாற்றம் கருத்துக்களால் மட்டும் நிகழாது, அதற்காகச் செயற்பட்டு ஆகவேண்டும் என்று கருதி, விகப்ப கண்டாயம என்ற அமைப்பைத் தன் கருத்தொத்த சக தோழர்களுடன் நிறுவி, பின்னர் அதிலிருந்த முன்னணித் தோழர்களுடன் சேர்ந்து பி.ஆர்.எஃப் (பீப்பிள் ரெவுலூஷனரி ஃபுரொண்ட் – (மக்கள் புரட்சிகர முன்னணி) எனும் ஆயுதப் புரட்சிக்கான அமைப்பை உருவாக்கும் முயற்சியில் டயான் திலகரத்னா, புல்சாரா, கமல், ராம் மாணிக்கலிங்கம், முத்துலிங்கம், சிறில், மற்றும் இன்னும் பல தோழர்களுடன் இணைந்து இறங்கியவர்.

அதற்கான ஆயுதப் பயிற்சிக்கும் புரட்சிகரக் கூட்டுக்குமாக தோழர் பத்மநாபாவுடன் கரம்கோர்த்தவர். அவரும் அவரது அமைப்பினரும் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு, கண்டி போன்ற இடங்களுக்கு வந்து எமக்கான பல கருத்தரங்குகளை நடத்தினர், பொதுமக்கள் விளிப்புணர்வுக் கூட்டங்களில் உரையாற்றனர்.

83 கலவரங்களின் பின்னர் சிலகாலம் தோழர் ஜோவும் தோழர் கமலும் யாழ்ப்பாணம் வந்து மானிப்பாயில் எனது வீட்டில் தங்கியிருந்த நினைவுகள் இன்னும் பசுமையானவை. அவருடன் மார்க்ஸிய முன்னேடிகளைத் தாண்டி, நவ மார்க்ஸிச வாதிகள் மற்றும் அவர்களது கருத்துக்களை அக்காலத்திலேயே பகிர்ந்துகொள்ளக்கூடிய வாய்ப்பாக எனக்கு அது அமைந்தது. உலகப் புரட்சிகளின் சுவைநிறைந்த கதைகள் பலவற்றை அவரது அழகாக இனிய செந்தமிழில் எடுத்துக் கூறுவார். புரட்சியென்பது ஒரு நேர்கோடாக கற்பிதம் கொண்டிருந்த எமக்கு, அது திருப்பங்கள் நிறைந்ததென்பதைப் புரியவைத்தார்.

அவரிடம் மலையகத் தமிழ் மக்கள் நாடுகடத்தப்பட்ட அவலத்தை சித்திரிக்கும் ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டுமென்ற ஒரு கனவு இருந்தது. அதற்கான திரைக்கதையை அவர் மனதினுள் தீட்டி வைத்திருந்து என்னிடம் பகிர்ந்துகொண்டிருந்தார். கோட்டே ரெயில் நிலையத்தில், 70களில் ஒலித்த அழுகுரல்களை அவர் காட்சிகளாக எனக்குச் சித்திரித்தார். இந்தியாவுக்கு நாடுகடத்தும் மன்னார் துறைமுகத்தில் கஸ்டம் ஆபீசர் பிரித்துப் பார்த்த ஒரு மலையகக் கிழவரின் பொதியில் தான் வாழ்ந்த மண் இருந்த கதையைக் கேட்டு தான் துயர் கொண்ட சம்பவத்தை அதில் சேர்க்கவேண்டுமெனக் கூறியிருந்தார். (என்னால் முடிந்தால் அக் கதையை ஒருநாள் திரைப்படமாக்குவேன் – அக் கதையில் வித்திட்ட திரைக்கதையொன்றை ஏற்கெனவே தீட்டியும் வைத்துள்ளேன்.)

பிற்காலத்தில் அவர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டிருந்த காலங்களில் நான் அவரைச் சிறைக்குச் சென்று பார்த்து, உணவளித்து வந்திருந்தேன். என்னைப் பார்ந்து ஏன் முகம் வாடியிருக்கிறீர்கள், என்று அப்போதும் புன்னகையோடுதான் விசாரிப்பார்.

அருமையான மனிதர். அவர் தோழர் பத்மநாபாவின் வேண்டுகோலுக்கு இணங்கி முதலாவது வடக்கு-கிழக்கு மாகாண சபையில் அமைச்சராகவும் செயற்பட்டிருந்தார். தமிழ், முஸ்லிம், சிங்கள அமைச்சர்களைக் கொண்ட பல்லின அமைச்சரவையாக நாபாவால் அமைக்கப்பட்ட அந்த சபை, தமிழ் மக்கள் தரப்பிலிருந்து எடுத்துக்காட்டப்பட்ட இன ஐக்கியத்துக்கான முன்னுதாரணமாக அமைந்ததானது ஒரு வரலாற்றுப் பதிவு. அதில் ஜோவும் பிரசன்னமாகியிருந்தமை சாலப்பொருத்தமானது.

நிறையவே எழுதுவதற்கு இருந்தாலும், நிறுத்திக்கொள்கிறேன். என்ன, நாம் உருவாக்கிய ஒரு விருட்சத்தின் இலைகள் ஒவ்வொன்றாக உதிர்ந்துகொண்டிருக்கின்றன. கையறு நிலையில் நிற்பதைத்தவிர என்ன செய்ய முடிகிறது? கடலும் காலமும் பிரித்துவைத்த தூரத்திலிருந்து மனம் கனதியில் தவிக்கிறது.