‘மலையக மக்கள் முன்னணியை விட்டுக்கொடுக்க மாட்டேன்’

தமிழ்மிரருக்கு அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே, அவர் இதனைக் கூறினார்.

செவ்வியின் முழு விவரம் வருமாறு,

கேள்வி: நீங்கள் அரசியல்வாதியாக வேண்டும் என்று யார் தீர்மானித்தது, உங்களது அரசியல் பிரவேசம் எப்படி அமைந்தது?

எனது தந்தை உயிருடன் இருந்தபோது, அரசியலில் என்னை அறிமுகப்படுத்தவில்லை. அவர் மறைவை எண்ணி, “அண்ணா!” என்றழைத்து மக்கள் வடித்த கண்ணீருமே, எனக்கு அரசியல் எண்ணத்தை ஏற்படுத்தியது. அரசியல்வாதியாக இருப்பவர்களை, “தலைவா”, “ஐயா” என்று அழைப்பது வழங்கம். எனினும், “அண்ணா” என்று அவரை மக்கள் அழைத்ததால், அரசியலையும் தாண்டி மக்களுக்கு அவர் எதையோ செய்திருக்கின்றார். அது எவ்வாறான அரசியல் என நான் தேடிப்பார்க்க ஆரம்பித்தேன். அதன் பின்னர்தான், மலையக மக்கள் முன்னணியின் அமைப்பு, கொள்கை, ஆதரவாளர்கள், எனது தந்தை மலையக மக்கள் மீது கொண்டிருந்த அன்பு, அதனால் செய்த சேவைகள் என அனைத்தையும் புரிந்துகொண்டேன். அதற்குப் பின்னரே, அரசியலில் நான் கால்பதிக்க வேண்டும் என நினைத்தேன்.

கேள்வி: நீங்கள் சுயேச்சையாக போட்டியிட வேண்டிய தேவை ஏன் எழுந்தது?

கட்சியில் நான் ஆசனத்தை எதிர்பார்த்திருந்தேன். தந்தையின் மண்வெட்டிச் சின்னத்தில் முதன் முறையாகக் கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. ஆசையும் இருந்தது. ஆனால், அதற்கான வாய்ப்புக் கிட்டவில்லை. ஏனென்றால், தற்போதைய தலைவர், தேசிய கட்சியுடன் இணைந்து கேட்கின்றார். எனவே, எனக்கான ஆசனத்தைத் தர மறுத்ததால், சுயேச்சையாகக் களமிறங்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

கேள்வி: அமரர் சந்திரசேகரனை, தந்தையாகவன்றி ஒரு தலைவராக நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

தந்தையைப் பின்பற்றி நான் வந்திருந்தாலும்கூட, அவரை மாபெரும் அரசியல் தலைவர் என்றுதான் நான் கூறுவேன். மக்களுக்காக அவர் செய்த சேவைகளும் தொலைநோக்குப் பார்வையும், எனக்கு அவரைப் பார்த்து வியப்பை உண்டாக்குகின்றது. எத்தனையோ அரசியல் தலைமைகள் இருந்தாலும்கூட, அவர் எந்தவொரு செயலையும் தொலைநோக்குப் பார்வையுடன் செய்கின்ற தலைவராக இருந்திருக்கின்றார். அவருடைய போராட்டங்கள் நிறைய உரிமைசார் போராட்டங்களாக இருந்தாலும், அனைத்திலும் தொலைநோக்குப் பார்வையை அவதானிக்கலாம். அந்தத் தொலைநோக்குப் பார்வையால் தான் அவரை நான் மாபெரும் தலைவர் என்று கூறுவேன்.

கேள்வி: உங்கள் தந்தைக்கு இருந்த செல்வாக்கு, உங்களுக்கும் கிடைக்குமென எதிர்பார்கின்றீர்களா?

செல்வாக்கு என்பதைவிட, மக்கள் ஆதரவு முக்கியம். தங்களுக்குச் சேவை செய்பவர்களையே மக்கள் ஆதரிப்பார்கள். தந்தையை மக்கள் எவ்வாறு ஆதரித்தார்களோ, அதைப்போல மக்களுக்கான சேவைகளை நான் செய்யும் பட்சத்தில், என்னையும் அவர்கள் ஆதரிப்பார்கள் என நம்புகின்றேன்.

கேள்வி: மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வேலுசாமி இராதாகிருஷ்ணனும், பிரதான வேட்பாளராக நுவரெலியாவில் களமிறங்கியுள்ளார். பலம்வாய்ந்த ஓர் அணியில் அவர் களமிறங்கியுள்ள பின்புலத்தில், எவ்வாறு சவால்களை வெற்றிகொள்ளப் போகின்றீர்கள்?

பலம்வாய்ந்த அரசியல் பின்னணி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து உள்ளது. தேசிய கட்சி என்பதால் நீங்கள் அவ்வாறு கூறலாம். எனினும், மலையகத்தைப் பொறுத்தவரை, எமக்கென்று தனித்துவம் உள்ளது. எவ்வளவு பெரிய கட்சியில் களமிறங்கியிருந்தாலும்கூட, கொள்கை என்பது முக்கியம். ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் அரசியல் தலைவருக்கும், ஒரு கொள்கை இருக்கும். சில வருடங்களுக்கு முன்னர், முன்னாள் பிரதமரின் அணியில் போட்டியிட்டு, சம்பளப் பிரச்சினைக்கு அவர்களே தடையாக இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, பின்னர் அந்த அணியில் இருந்து பிரிந்துவந்துப் புதிய அணியில் போட்டியிடுகின்றார்.

யாராக இருந்தாலும், ஒரு கொள்கைசார் அரசியல் இருக்க வேண்டும். ஒருவருடன் இணைந்திருக்கின்றோம். அவருடைய கொள்கை எங்களுக்குப் பிடிக்கவில்லை. இவருடன் வந்தோம் என்பது வேறுகதை. இவர்தான் தடுத்தார் என்றால், அங்கு ஏன் இருந்தீர்கள்? புதியவரும் ஒரு காலத்தில் வெறுத்துப்போய் விடுவார். எனவே, திடமான கொள்கை வேண்டும். மக்களுக்குச் சேவை செய்தால், மக்கள் வாக்களிப்பார்கள். ஆனால், எதுவுமே செய்யவில்லை என்பதுதான் உண்மை.

கேள்வி: வளர்ந்துவரும் அரசியல்வாதியாக அதிலும் ஒரு பெண்ணாக, நீங்கள் அரசியலில் முகங்கொடுக்கும் சவால்கள் எவ்வாறு அமைந்துள்ளன?

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், சமமான சவால்களே அரசியலில் வரும். மலையகத்தைப் பொறுத்தவரை பொதுவாக அரசியல் தலைமை ஒருவர் முன்னால் இருந்து வழிநடத்த வேண்டும். அவ்வாறான ஒருவர் எம் பின்னால் இல்லாவிட்டால் சவால்கள் நிறையவே இருக்கும். எனது தந்தை இன்று உயிருடன் இல்லை. எனவே, எப்படி நேரடியாக நாடாளுமன்றத்து வரமுடியும், ஏன் மகாணசபையில் கேட்கவில்லை. ஏன் இந்த அவசரம் என்று பல கேள்விகள் எதிர்த்தரப்பில் இருந்து வருகின்றன. எனினும், இதற்கெல்லாம் முகங்கொடுக்க நான் தயாராகவே இருக்கின்றேன். மக்களுக்குச் சேவை செய்யவேண்டும் என்ற நோக்கம் என்னிடம் இருப்பதால், இவ்வாறான சவால்கள் தொடர்பில் எந்தவித அச்சமும் இல்லை. பெண் என்பதால் குணாம்சங்கள் தொடர்பில் குறைகளைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட விடயங்களை நான் பொருட்படுத்துவதில்லை.

கேள்வி: மலையக அரசியலில் பெண்களின் தலைமைத்துவம் போதுமானளவு இல்லை. இதற்கான காரணம் என்னவாக இருக்கும்?

மலையகத்தில் ஏதாவது ஓர் அரசியல் தலைமையின் வழிகாட்டலின் கீழ்தான், மகாண சபையிலோ பிரதேச சபையிலோ பெண் தலைமைத்துவங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆகவே, அவர் அந்த அரசியல் தலைமையின் பிடிக்குள்தான் இருக்கின்றார். அவர் என்ன சொல்கின்றாரோ, அதைத்தான் செய்யவேண்டும், அவருடைய கொள்கை, வழிகாட்டலைத்தான் கடைப்பிடிக்க வேண்டியநிலை காணப்படுகின்றது. அதனால், இவருக்கென்ற ஒரு தனித்துவம் இல்லை. பெண்களுக்கு ஏதாவது உதவிகளைச் செய்யவேண்டும் என்று இவர் நினைத்தாலும், அதற்கு அரசியல் தலைமை அனுமதி வழங்கினால் மாத்திரமே செய்ய முடியும். எனவேதான், பெண் பிரதிநிதித்துவம் குறைந்துகொண்டு போகின்றது. அத்துடன், பெண் பிரதிநிதித்துவம் வெளிக்கொண்டு வரமுடியாத நிலையும் ஏற்படுகின்றது.

கேள்வி: தோட்டத் தொழிலாளர்களுக்குத் தனி வீடுகள் உங்கள் தந்தையின் காலத்திலேயே முதல் தடவையாக அமைக்கப்பட்டன. இன்று தனி வீட்டுத் திட்டம் என்பது எந்தளவில் மலையகத்தில் உள்ளது?

1994ஆம் ஆண்டில் எனது தந்தை தனிவீட்டுத் திட்டத்தை ஆரம்பித்தார். தனிவீட்டுத் திட்டம் ஆரம்பித்ததும் கட்டப்பட்டதும், இலங்கை அரசாங்கத்தின் நிதியில் ஆகும். அவர், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளைக் கட்டிக்கொடுத்துள்ளார். தனி வீட்டுக் கொள்கை என்பதுதான் அவருடைய எண்ணப்பாடாக இருந்தது. வீடு கட்டப்படும்போது, அதற்கு அருகில் விவசாய நிலம் இருக்க வேண்டும். அந்த ஊரில் பாடசாலை, நூலகம், கலாசார மண்டபம், நல்ல பாதை வசதிகள் இருக்க வேண்டும் என, கிராமங்களை அமைக்கும் நோக்கத்தைத்தான் அவர் கொண்டிருந்தார்.

தந்தை இறந்த பின்னர், இந்திய வீடமைப்புத் திட்டத்தில் நான்காயிரம் வீடுகள் கட்டப்பட்டனவென அறிகின்றேன். கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கையின் வேகமும் குறைவு. அத்துடன், கட்சி சார்ப்பாகவே வழங்கப்பட்டது. தேவையுள்ளவர்களுக்குக் கொடுக்கப்படவில்லை. இன்னும் 1 இலட்சம் வீடுகள் தேவைப்படுகின்றன.

நான்கு சுவர்களை அமைத்துக் கூரையை போட்டுவிட்டால், அது தனி வீட்டுத்திட்டம் என்றாகிவிடாது. தனிவீட்டில் வசிப்பவர் தனது சொந்தக் காலில் நிற்பதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. கொரோனா பாதிப்பின் போது, எனது தந்தை காலத்தில் அமைக்கப்பட்ட வீடுகளுக்கு அருகில் உள்ள தோட்டங்களில், அங்குள்ள மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். இவ்வாறான வாய்ப்பு இப்போதைய தனி வீட்டுத் திட்டத்தில் இல்லை. எனவே, தனி வீட்டுத் திட்டம் சரியாக அமல்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: மலையக மக்களின் பிரச்சினைகளை நீங்கள் வேட்பாளராக அடையாளம் கண்டுள்ளீர்களா?

தோட்டத் தொழிலாளர்கள், பல்வேறு பிரச்சினைகளில் இருக்கின்றனர். கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் போது, இரு தரப்பிலும் சம்பளப் பிரச்சினையை மாத்திரம் மய்யப்படுத்தி, போராட்டங்கள், உண்ணாவிரதங்கள் நடத்தப்படும். இன்று சம்பள விடயத்தை அரசியலாக்கி விட்டனர். தேர்தல் வாக்குறுதியாக மாற்றிவிட்டனர்.

இயற்கை அனர்த்தங்கள், காட்டு மிருகங்களின் தொல்லைகள், குளவி, அட்டைகளின் தொல்லைகளால், இன்று தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தொழில்புரியும் நேரத்தில் இவ்வாறான பாதிப்புகளைச் சந்தித்தாலும் கூட, ஒருநாள் சம்பளம் மாத்திரமே வழங்கப்படும். அவர் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு வழக்கு தொடர்ந்துதான் நீதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுகின்றது. நட்டஈட்டுத் தொகையை நிர்வாகம் முன்வந்து தரும் நிலைமை அங்கு இல்லை. தொழில் பாதுகாப்பு, கர்ப்பிணிகளுக்கான நிவாரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் பிரச்சினைகள் உள்ளன. முன்னர் வழங்கப்பட்ட பல்வேறு சலுகைகள் இப்போது நிறுத்தப்பட்டுள்ளன.

கேள்வி: மலையகத்தில் தொழிற்சங்கங்களின் நிலை என்ன,சம்பள பிரச்சினை – கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் உங்களுடைய நிலைப்பாடு என்ன?

32க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மலையகத்தில் உள்ளன. ஏற்கெனவே கூறியதைப் போன்று, சம்பளம் என்ற ஒரு விடயம் மாத்திரமே கதைக்கப்படும். அதற்கும் ஒரு சரியான தீர்வு பெறப்படாது. மக்களின் பிரச்சினைகள், தேவைகளை உரிய இடங்களுக்குச் சரியாகக் கொண்டுசேர்ப்பதும் இல்லை. கூட்டு ஒப்பந்தம், இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கைச்சாத்திடப்பட வேண்டும். ஆனால், ஒவ்வொரு முறையும் அது பேச்சுவார்த்தையின்போது, பிற்போடப்பட்டு வருகின்றது. போராட்டங்களின் பின்பும் கோரிய தொகை கிடைக்கும் என்பதில் உத்தரவாதம் இல்லை. தொழிற்சங்கள் இதற்கான அழுத்தங்களைக் கொடுப்பது இல்லை. தொழிற்சங்கங்கள் ஒன்றாக இணைந்து சம்பளப் பிரச்சினைக்காகப் போராடினால், நிச்சயம் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், அப்படி நடக்காது. விலைவாசிக்கு ஏற்பட சம்பள நிர்ணயத்தைக் கொண்டுவர வேண்டும் என்பது தொடர்பில் எவரும் கதைப்பதாக இல்லை. சம்பள நிர்ணய சபை என்ற ஒன்றை உருவாக்கி, நாடாளுமன்றத்தின் ஊடாக அதற்கு நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பதே எனது தந்தையின் நோக்கம். அதனை நானும் ஏற்று அதற்காகப் பாடுபடுவேன்.

கேள்வி: மலையகத்தின் இளம் தலைமுறை, கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தொழில்புரியும் நிலைமை காணப்படுகின்றது. இவர்களது நிலையை மாற்றுவதற்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?

மலையகத்தில் அவரவர் பிரதேசங்களில் எந்தவிதத் தொழில் வாய்ப்புகளும் இல்லை. இளைஞர், யுவதிகள் என்னைச் சந்திக்க வரும்போது, இங்கேயே வேலைவாய்ப்பு இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றுதான் கூறுவார்கள். எனினும், அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேலைவாய்ப்பு மய்யங்களோ ஆடைத் தொழிற்சாலைகளோ, வேறு தொழிற்சாலைகளோ மிகவும் குறைவாகவே உள்ளன. எனவே, அவர்களுக்கான வேலைவாய்ப்பு மய்யங்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது முதலாவது திட்டமாக இருக்கும்.

அரசியல்வாதிகள் மலையகத்தில் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்திருந்தால், மலையக இளைஞர், யுவதிகள் இவ்வாறு துன்பப்படும் நிலை தோன்றியிருக்காது. முதியவர்கள்கூட கொழும்பில் வந்து வேலைசெய்ய வேண்டியநிலை காணப்படுகின்றது.

கேள்வி: கொரோன வைரஸ் ஊரடங்கு காலத்தில், அதிகளவான இளைஞர்கள் ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர். அவர்களுக்குச் சுயதொழிலில் ஈடுபட தரிசு நிலங்களை வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டது. அது நடைமுறையில் உள்ளதா, தோட்ட நிர்வாகங்கள் அதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளனவா?

அந்தத் திட்டத்தை அமல்படுத்த எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, அதை நடைமுறைப்படுத்தவும் முடியாது என்பதுதான் சட்டத்தரணியாக நான் கூறும் நிதர்சனம். அனைத்துக் காணிகளும், தோட்ட நிர்வாகத்தின் காணிகள். தரிசு நிலங்களில் விவசாயம் செய்யுமாறு கூறியபோது, எமது இளைஞர்கள் அதைச் செய்தார்கள். எனினும், பயிர்கள் விளைந்து வந்தபோது, தோட்ட நிர்வாகங்கள் அதனை அகற்றிவிட்டுச் சென்று விடுவார்கள். கேட்டால், இது நிர்வாகத்துக்குச் சொந்தமான இடம் என்று கூறுவார்கள்.

சட்டத்தின்படி அதுதான் உண்மையும்கூட. 200 – 300 வருடங்களுக்கு முன்னர் நாம் வந்திருக்கலாம், 30 வருடங்கள் கூட ஒரு காணியில் நீங்கள் விவசாயம் செய்திருக்கலாம். ஆனால், காணியின் உரிமை இல்லை. சம்பளப் பிரச்சினையுடன் காணி பிரச்சினைக்கும் போராடித் தீர்வைப் பெற்றிருக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை என்பது முக்கியமானதாகும்.

கேள்வி: அரசாங்கத்தின் ஒரு தரப்புதான் உங்களைத் தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிட வைத்துள்ளதென, பரவலான குற்றச்சாட்டுள்ளதே?

அவ்வாறு கூறுபவர்களுக்குப் பின்னால், நிறைய பின்புலங்கள் இருக்கலாம். ஆனால், நான் சுயேட்சையாகத்தான் கேட்கின்றேன். மலையகத்தில் ஒருவர் இவ்வாறு சுயேட்சையாக நிற்பதை நம்ப முடியாதவர்களால் தான் இவ்வாறு கூறுகின்றனர். பின்புலங்களுடன் போட்டியிட்டு அரசாங்கங்கள் மாறும் போது தாவல்களை மேற்கொள்வது, அவ்வாறு கூறுபவர்களுக்கு வேண்டுமென்றால் இயல்பாக இருக்கலாம். சந்திரசேகரனின் மகளாகிய எனது குணம் அவ்வாறானது இல்லை. எனது பின்புலம் என்றால் எனது தந்தையும் மக்களும் மாத்திரம்தான்.

கேள்வி: நீங்கள் வெற்றிபெறும் பட்சத்தில், அரசாங்கத்துடன் இணைந்துப் பயணிப்பீர்களா?

எமது மக்களின் கோரிக்கைகளை நான் முன்வைப்பேன். 1994ஆம் ஆண்டில் எனது தந்தை பேரம் பேசும் சக்தியைக் கொண்டு எவ்வாறு ஆட்சியமைக்க உதவி செய்தாரோ, அதைப்போல நானும் பேரம் பேசும் சக்தியைக் காட்டுவேன். எமது மக்களின் கோரிக்கையை ஏற்று யார் அதை நடைமுறைப்படுத்த முன்வருகின்றாரோ, அவருக்கு எனது ஆதரவை வழங்குவேன்.

கேள்வி: பொதுத் தேர்தலில் பிரதானமாக மலையக மக்கள் சார்ந்து நீங்கள் முன்வைக்கவுள்ள விடயங்கள் என்ன?

காணியுரிமை, இளைஞர் – யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, பெண்களுக்கான சுயதொழில், பெண்கள் சுயதொழிலில் ஈடுபட்டு உற்பத்தி செய்யும் பொருள்களுக்கான சந்தை வாய்ப்பை உருவாக்குவது உள்ளிட்ட விடயங்களை முன்வைப்பேன்.

அத்துடன், எமது இளைஞர் – யுவதிகள் பல துறைகளில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் உள்ளனர். அவர்களுக்கான வாய்ப்பு மற்றும் நிதியுதவித் திட்டங்களை வழங்கவேண்டும். விளையாட்டுத் துறையில் சிறந்த திறமைகளைக் கொண்டவர்கள் மலையகத்தில் உள்ளனர். அவர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அங்கு உருவாக்கப்படவில்லை. எனவே, விளையாட்டுத்துறை ஊக்குவிப்பு, மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்துவது, அதற்கான வசதிகளை உருவாக்குவது உள்ளிட்ட பல விடயங்கள் உள்ளன.

கேள்வி: மலையக அரசியலில் தொடர்ச்சியாக குடும்ப ஆதிக்கம் உள்ளது. நீங்களும் ஓர் அரசியல் குடும்ப வாரிசாக வந்துள்ளீர்கள். இது தொடர்பில்?

தந்தையைப் பின்பற்றி, மகளாக நான் அரசியலுக்கு வரவில்லை. தலைவனைப் பின்பற்றி தொண்டனாகவே இந்த அரசியலுக்கு வந்திருக்கின்றேன்.

கேள்வி: எதிர்காலத்தில் உங்கள் அரசியல் பயணம், மலையக மக்கள் முன்னணியுடன் இணைந்ததாக அமையுமா அல்லது தனி வழியா?

மலையக மக்கள் முன்னணி எனது தந்தையின் கட்சி, தந்தையாலும் அவரது ஆதரவாளர்களாலும், ஆரம்பிக்கப்பட்ட கட்சி. ஆகவே, பிரதிச் செயலாளர் நாயகம் என்ற ஒரு பதவிதான் என்னையும் கட்சியையும் பிணைத்துக் கொண்டிருக்கின்றது என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். பதவி இல்லாவிட்டால் நான் கட்சியின் உறுப்பினர் இல்லை என்றாகிவிடாது.

நான் கருவில் இருந்தபோது இந்த கட்சி உருவானது. இது, எனது கருவிலேயே விதைக்கப்பட்ட கட்சி. ஆகவே, ஒருபோதும் இதை நான் விட்டுக்கொடுக்கவே மாட்டேன். அதேபோன்று, வெற்றிபெற்ற அடுத்த நிமிடம், மலையக மக்கள் முன்னணி எனது கைகளுக்கு வரும். மலையக மக்கள் முன்னணியை மீண்டும் சரியான முறையில் எனது தந்தையின் கொள்கைக்கு ஏற்றவாறு மீளக் கட்டியெழுப்புவேன்.