மழை நீர் வடிந்தாலும்.. வடியாத சாதி சாக்கடை..

இந்த பேரிடரில் சாதியை முன்னிறுத்தி பேசக்கூடாதுதான். ஆனால் சென்னையில் கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் உள்ளனர். அவர்களில் ஒரு லட்சம் பேர், அவ்வளவு ஏன் பத்தாயிரம் பேர் இந்த சென்னை மாநகரத்தை சுத்தம் செய்ய வந்திருக்க கூடாதா..? எல்லா பகுதிகளிலிருந்தும் அருந்ததிய சமூகத்து மக்களை மட்டும் அழைத்துள்ளனர். பள்ளியில் படிக்கும் அவர்களின் பிள்ளைகளை வேறு கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை ஒரு குறிப்பிட்ட தொழிலை, செய்ய சொல்லி கட்டாயப்படுத்துவது ஈனச்செயலாகும். மற்ற சமூகத்திலிருந்து ஏன் துப்புரவு பணிக்கு ஆட்களை அழைக்கவில்லை? ஆமாம், இந்த ஸ்வச் பாரத்//கிளீன் இந்தியா திட்டத்திற்கு போஸ் கொடுத்தவர்களை எல்லாம் அழைத்து ஏன் சுத்தம் செய்ய கூடாது?

அதிலும் பல ஆதிக்க சாதி வெறியர்கள், இது ஒன்றே அருந்ததியருக்கான சிறந்த வேலை வாய்ப்பு என்பது போல் பிதற்றுகிறார்கள். இவனுங்க எல்லாம் நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களா என இவர்களை படைத்த கடவுளுக்கே சந்தேகம் வரும். மற்ற நாடுகள் மனிதர்களை வைத்து செய்யகூடாது என்று மெஷின்களை நாடும் ஒரு பணியில் மனிதர்களை திணிப்பது தான் நாகரிக இந்திய பண்பாடா?

அதிலும் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்திருக்கும் துப்புரவு பணியாளர்களை பேருந்துகளில் கூட்டி வந்தால் என்ன? குப்பைகளைப் போன்று அவர்கள் பணிபுரியும் லாரிகளிலேயே சென்னைக்கு கூட்டிவந்தது சரியா..? மேலும், அவர்களுக்கான முன்னெச்சரிகை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. செப்டிக் ஆகி சீவு பிடித்தால் தடுப்பதற்காக மருந்து எதுவும் இல்லை. இந்த சாதி வெறி அரசியலுக்கு பார்ப்பணியம் திராவிடம் தமிழ் தேசியம் என்ற பேதமெல்லாம் இல்லை என்பதே உண்மை.