தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

புலிகள் அழிந்துவிட்டார்கள். இனிக் குண்டுகள் வெடிக்காது. தந்தை செல்வா சொன்னாராம் இனித் தமிழ் மக்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்று. ஆனால் கூட்டமிப்பு இருக்கும்வரை தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. வடக்கின் வசந்தத்தை ஆரம்பித்தவர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. மகிந்த அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைகளை எதிர்த்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. காப்பற் வீதிகள் , பாலங்கள், கட்டிடங்கள், ரயில் சேவை தேவை இல்லையென வடக்கின் வசந்தத்தை கூட்டமைப்பினர் எதிர்த்தது யாவருக்கும் தெரியும்.

மகிந்த அரசினால் ஏ 9 பாதை புனரமைக்கப்பட்டு தடையின்றி குடாநாட்டுக்கு பொதுமக்கள் பயணம் செய்யும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. குடாநாட்டு மக்களுக்கு 24 மணிநேர மின்சாரம் மீண்டும் கொண்டுவரப்பட்டது. மின்சாரம் இல்லாத பகுதிகளுக்கு மின்சாரம் பெற்றுக்கொடுக்கப்பட்டது. பூநகரியில் பாலம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. ஆஸ்பத்திரிகள், பாடசாலைகள் ,ஆலயங்கள் புனரமைக்கப்பட்டன. புலிகளால் தகர்க்கப்பட்ட குளங்கள் பாலங்கள் புனரமைக்கப்பட்டது. கிளிநொச்சியில் பல்கலைக்கழக விவசாயபீடம் திறக்கப்பட்டது.

25 வருடங்களாக புலிகளால் நிர்மூலமாக்கப்பட்ட யாழ் கொழும்பு ரயில்சேவை புனரமைக்கப்பட்டு மீண்டும் காங்கேசன் துறைவரை ரயில்சேவை ஆரம்பிக்கப்பட்டது. வடக்கிற்கு ரயில் தேவ் இல்லையென்றார்கள். ஆனால் ரயில் பிரயாணத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ரிக்கற் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறது. காரணம் ரயில் பிரயாணம் செய்வோர் தொகை அதிகரித்துள்ளது. மகிந்தாவின் அபிவிருத்தித் திட்டங்களினால் வடக்கு கிழக்கு மக்கள் நன்மையையே பெற்றுக்கொண்டனர்.

இந்த அபிவிருத்திகளை எதிர்த்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தனது பாராளுமன்ற உரையில் வடக்கின் வசந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது, இதனால் மக்கள் மின்சாரம் பெற்றுக்கொள்ள 25,000 ரூபா செலுத்தவேண்டியுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் மூலம் மக்கள் மின்சாரத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியும். அதனால் மீண்டும் வடக்கின் வசந்தம் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்கும்படி கேட்டிருக்கிறார். சிறிதரன் தனது வேஷ்டியை உரிந்து வீசிவிட்டு இந்தக் கோரிக்கையை விடுக்கலாம்.

மகிந்த அரசினால் தமிழ் மக்கள் நன்மையையே அடைந்துள்ளனர். இதனை இவர்களால் ஒப்புக்கொள்ள முடியாமல் போனது ஏன்? இவர்களிடம் அகப்பட்டிருக்கும் தமிழ் மக்களைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.
(சலசலப்பு)