முள்ளில் விழுந்த சேலை

2009ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர், இப்படியொரு கோரத்தை யாரும் இலங்கையில் காணவில்லை. ஏன், போர் நடந்த காலங்களில் கூட, பொதுமக்களையும் வெளிநாட்டவர்களையும் இலக்கு வைத்து இப்படியொரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று மஹிந்த ராஜபக்‌ஷவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

யாராலும் ஜீரணிக்க முடியாதளவுக்கு, இந்தக் குண்டுத் தாக்குதல்கள் கோரம் நிறைந்தவையாக இருந்தன. இதன் பின்னணி, மிகவும் ஆபத்தானது.

தேசிய தௌஹீத் ஜமாத் என்ற உள்ளூர் அமைப்பே, இதனை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், அந்த அமைப்பை, ஐ.எஸ் அமைப்பே வழிநடத்தியிருக்கிறது என்பது, வெளியிடப்பட்டுள்ள ஒளிப்படங்களில் இருந்தும், வீடியோக்களில் இருந்தும் உறுதியாகி இருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம், இப்போது, இலங்கைக்கு மிகமோசமான அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த அடிப்படைவாதம், எந்தளவுக்குக் கோர முகத்துடன் செயற்பட்டிருந்ததோ, அதைவிட மோசமான கோரமுகத்தை, இந்த இஸ்லாமிய அடிப்படைவாதம் காட்டியிருக்கிறது.

இந்தத் தாக்குதல்களுக்கு அடிப்படைக் காரணியாக இருந்தவர் என்றும், தலைமையேற்றவர் என்றும் நம்பப்படுகின்ற, சஹரான் ஹாசிமின் பிரசார வீடியோக்களில், வெளிப்படுத்தப்படுகின்ற இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துகள், இஸ்லாமியர் அல்லாதவர்கள் கொன்று குவிக்கப்பட வேண்டும் என்ற வெறித்தனம், ஆபத்தின் உச்சத்தை வெளிப்படுத்துகின்றன.

வெடித்துச் சிதறிய தற்கொலைக் குண்டுதாரிகளுடன் இந்த அடிப்படைவாதம் ஓய்ந்து விடும் என்றில்லை. ஏனென்றால், இது கிழக்கிலும் ஏனைய பகுதிகளிலும் சில ஆண்டுகளில் ஆழமாக வேர் விட்டிருக்கிறது; சர்வதேச தொடர்புகளின் மூலம், பயிற்சிகளும், தொழில்நுட்ப உதவிகளும், வெடிபொருட்களும் இவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அதுமாத்திரமன்றி, சர்வதேச அளவில் இஸ்லாமிய அடிப்படைவாத, தீவிரவாதச் செயல்களில் ஈடுபடும் தரப்புகளின் வழிநடத்தல்களும் இருந்திருக்கின்றன.

அமெரிக்காவில் செப்ரெம்பர் 11 தாக்குதலின் மூலம், இஸ்லாமிய அடிப்படைவாதம் எந்தளவுக்கு சர்வதேச கவனத்தை ஈர்த்ததோ, அதனைப் போன்றதொரு, சர்வதேச கவனத்தை இந்தத் தாக்குதல்களும் ஈர்த்திருக்கின்றன.

மிகப்பெரிய நரவேட்டையாடியிருக்கும் அடிப்படைவாதிகளுக்கு, இது ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது.

இப்படியொரு வெற்றியைப் பெற்ற இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு, இதுபோன்ற பல வெற்றிகளைச் சுவைக்கும் ஆர்வம் மிகும் என்பதிலும் சந்தேகமில்லை.

இதுதான், இப்போது இலங்கைத் தீவுக்கு இருக்கின்ற மிகப்பெரிய அச்சுறுத்தல்.

இந்த விவகாரத்தை சுருங்கச் சொல்வதாயின், ‘முள் மீது விழுந்த சேலை’ என்று கூறலாம். முள்மீது விழுந்த சேலையைப் பக்குவதாக எடுக்கத் தவறினால், அது கிழிந்து போகும்; அதனைக் கிழியாமல் எடுப்பதும் சுலபமில்லை.

இலங்கைத் தீவில் முஸ்லிம் அடிப்படைவாதம், 1990இலேயே கிழக்கில் வேர்விட ஆரம்பித்து விட்டது. அதை வேரூன்றி வளர விட்டதில், அரசாங்கத்துக்கும், அரச புலனாய்வு அமைப்புகளுக்கும் தொடர்புகள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்து வந்தன.

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு, அவர்களிடம் இருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவதற்காக, முதலில் ஜிகாத் எனப்படும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு பயன்படுத்தப்பட்டது. இராணுவத்தினருடன் இணைந்து இந்த அமைப்புகள் செயற்பட்டதாகப் பல்வேறு தகவல்களும் உள்ளன. அவ்வாறான அமைப்புகளை உருவாக்கியவர்கள், இப்போது அரசியலில் உயர் பதவிகளில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.

தமிழர்களிடம் இருந்து முஸ்லிம்களைத் தனிமைப்படுத்துவத்காகவே, முதலில் இஸ்லாமிய அடிப்படைவாதம் கிழக்கில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், போரின் முடிவுக்குப் பின்னர், பௌத்த அடிப்படைவாதம், வலுப்பெறத் தொடங்கிய போது, முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பாதிக்கப்பட்டனர்.

அத்துடன், சர்வதேச அளவில் அல்கொய்டா, ஐ.எஸ் அமைப்புகளின் வளர்ச்சியும் கிழக்கிலும் ஏனைய சில பகுதிகளிலும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் பலமடைவதற்கு வழிவகுத்தது.

காத்தான்குடி பகுதியில் இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை அரசியல்வாதிகள் பலரும் ஆதரித்து வந்தனர். அரசியல்வாதிகளின் பாதுகாப்புக்குள் இஸ்லாமிய அடிப்படைவாதிகள், மறைத்துக் கொண்டு, செயற்பட்டிருக்கின்றனர்.

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளின் தோற்றமும் வளர்ச்சியும் இப்போது இலங்கைத் தீவின் எதிர்காலம், அமைதிக்கு மாத்திரமன்றி உலகத்துக்கே மிகப்பெரிய சவாலாக மாறியிருக்கிறது.

ஈராக், சிரியா போன்ற மத்திய கிழக்கில் பரவியிருந்த ஐ.எஸ் சாம்ராஜ்யம், அண்மையில் சரிக்கப்பட்ட போதும், இலங்கை போன்ற புதிய தளங்களில் அதன் வேர்கள் பரவத் தொடங்கி இருக்கின்றன.

இலங்கையில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளையும் தீவிரவாதிகளையும் முற்றாகக் களையெடுப்பதில் பெறப்படும் வெற்றி தான், நாட்டின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் வேர்களை முற்றாக அகற்றுவது என்பது மிகவும் சிக்கலான பிரச்சினையாக இருக்கப் போகிறது.

விடுதலைப் புலிகளையே, அவர்களின் புலனாய்வு கட்டமைப்புகளையே அழித்த அரச படையினருக்கு இது ஒன்றும் பெரிய வேலையில்லை என்று பலர் கூறுகின்றனர். அவ்வாறு கூறுவது சுலபமானது.

ஆனால், விடுதலைப் புலிகளை அழித்த போது கையாண்ட அதே உத்தியை இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிராகப் பயன்படுத்த முடியாத நிலையில் இலங்கை அரசாங்கம் இருக்கிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் முஸ்லிம்களை சந்தேகத்துடன் பார்க்க வேண்டாம் என்று விடுத்துள்ள கோரிக்கைகள் யதார்த்தமானவை. முஸ்லிம்கள் அனைவரையும் சந்தேகத்துடன் பார்ப்பதும், தீவிரவாதியாக இருப்பாரோ என்று சந்தேகிப்பதும், தான் மிகப்பெரிய பிரச்சினையாக மாறியிருக்கிறது.

அப்பாவி முஸ்லிம்களை இஸ்லாமிய அடிப்படைவாதிகளில் இருந்து எப்படி வேறுபடுத்திக் கொள்வது; கண்டறிவது; களையெடுப்பது தான் சிக்கலான விடயம்.

இந்த விடயத்தில் கொஞ்சம் பிசிறு ஏற்பட்டால் கூட, அது ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் திசை திருப்பி விடும்.

முதலில் தனிநாட்டுக் கோரிக்கையை தமிழர்களில் குறைந்தளவிலானோரே ஆதரித்தனர் என்றும், 1983 ஜூலை கலவரத்துக்குப் பின்னரே நிலைமை தலைகீழாக மாறியது என்பதையும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த இடத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதிலிருந்தே, முஸ்லிம்களை பகைத்துக் கொள்ளாத வகையில், அவர்களின் கோபத்தையும் சாபத்தையும் பெற்றுக் கொள்ளாத வகையில் இஸ்லாமிய அடிப்படைவாதத்துக்கு எதிரான போரை முன்னெடுக்கவே அரசாங்கம் விரும்புகிறது என்பது தெளிவாகிறது.

இது தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய காலமாகவும் இருப்பதால் முஸ்லிம்களின் ஆதரவு என்பது தேர்தல்களிலும் ஆட்சியமைப்பதற்கும் முக்கியமானது என்பதால், அவர்களைப் பகைத்துக் கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை. முஸ்லிம்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்வதன் மூலம், அரசியல் ரீதியான பாதிப்புகள் எற்பட்டு விடக்கூடாது என்று அரசாங்கத் தரப்பு எதிர்பார்த்தாலும், அடிப்படைவாதத்தை ஒடுக்குவதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதற்குத் தயங்காது.

இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முஸ்லிம்களிடம் இருந்து பிரித்து, தனிமைப்படுத்துவது தான் இப்போதைக்கு முக்கியமானது. அடிப்படைவாத அமைப்புகள், பலவும் சமூக சேவைகள் என்ற போர்வைக்குள், இருந்து கொண்டு அரசியல்வாதிகள் பலரையும் தமது தேவைக்காகப்ட பயன்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்தக்கட்டத்தில் அத்தகைய அரசியல்வாதிகள், விழித்துக் கொள்ளாவிடின், அவர்களும் அடிப்படைவாதச் சகதிக்குள் மூழ்கிப்போகும் நிலையே ஏற்படும்.

சிறியதோர் அடிப்படைவாதக் குழுவே தாக்குதலை நடத்தியிருக்கிறது என்ற போதும், அது மிகப்பலமான தொடர்புகளைக் கொண்டிருந்திருக்கிறது என்பது உறுதியாகி இருக்கிறது. எனவே, இந்த அடிப்படைவாத முள்ளில் இருந்து இலங்கைத் தீவை பாதுகாப்பாக வெளியில் எடுப்பது என்பது மிகக் கடினமானது.

முஸ்லிம்களைக் காயப்படுத்தாமல், இதன் வேர்களை அகற்றுவதற்கான நவீன உத்திகளைக் கண்டறிந்து கையாள வேண்டிய நிலைமைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கிறது. உரிய நேரத்தில் கிடைத்த முன்னெச்சரிக்கைகளைத் தவற விட்டதற்காக, தாமதமாகவே விழித்துக் கொண்டதற்கான தண்டனையாகவே அரசாங்கத்துக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மாத்திரமன்றி, பௌத்த அடிப்படை வாதத்துக்கும் கூட, முடிவுகட்ட வேண்டிய தருணம் இப்போது வந்திருக்கிறது.

இந்த வாய்ப்பு நழுவ விடப்படுமானால், அடிப்படைவாதிகள் இலங்கைத் தீவை, குருதி கொப்பளிக்கும் நிலமாகவே மாற்றி விடுவார்கள்.