றியோ ஒலிம்பிக்: யாருக்காக?

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

விளையாட்டு அனைத்து வேறுபாடுகளையும் புறந்தள்ளி மக்களை இணைக்கிறது என்று சொல்வர். விளையாட்டுக்கு அவ்வாறான ஒரு பெறுமதி ஒரு காலத்தில் இருந்தது. இன்று நிலைமை மாறிவிட்டது. விளையாட்டை வணிகம் தின்று விழுங்கியதன் எச்சத்தையே, நாம் விளையாட்டாகப் பார்க்கப்பணிக்கப்பட்டுள்ளோம். விளையாட்டு அதன் அடிப்படை விழுமியங்களை இழந்து விட்டது. விளையாட்டுகளின் நோக்கங்களும் மாறிவிட்டன. இன்று உலகமயமான வணிகமே விளையாட்டை உலகெங்கும் கொண்டு செல்கிறது; பிரபலமாக்குகிறது; வருவாய் பெறுகிறது. ஒலிம்பிக் இதற்கு விலக்கல்ல!

இவ்வாரம் பிரேஸிலின் றியோ டி ஜெனிரோ நகரில் 2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. அடுத்து வரும் மூன்று வாரம்களுக்கு ஒலிம்பிக் திருவிழாவை உலகெங்கும் ஊடகங்கள் கொண்டாடும். ஆனால் இப்போட்டிகள் தொடங்க முன்பே அதையொட்டிய பல அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி விட்டன. அவை அனைத்தையும் மறைக்குமாறு ஊடக ஒலி,ஒளியில் ஒலிம்பிக் போட்டிகள் அரங்கேறுகின்றன.

றியோ ஒலிம்பிக்கின் ஆரம்ப நிகழ்வே அதற்கான அடிப்படைகளை உருவாக்கியது. போட்டிகளை நடாத்தும் நாட்டின் சார்பாகப் போட்டிகளைத் தொடக்கி வைக்க வந்த பிரேஸிலின் இடைக்கால ஜனாதிபதி மைக்கல் டீமர் உரையாற்ற எழுந்தபோது அரங்கை நிறைத்த கூச்சல், பிரேஸிலிய மக்கள் அவரை எவ்வளவு வெறுக்கின்றனர் என்பதைக் கூறியது. இப்போட்டிகளை பிரேஸிலிற்குக் கொண்டுவந்த முன்னாள் ஜனாதிபதியான லூலா டி சில்வாவும் இன்னமும் சட்டரீதியான ஜனாதிபதியான டீவ்மா ரூசுவ்வும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. முக்கியமான உயர்மட்ட பிரேஸிலிய அரசியல் தலைவர்கள் பலர் அதைப் புறக்கணித்தனர். இவை பிரேஸிலின் உள்நாட்டு அரசியல் நெருக்கடியை வெளிப்படுத்தியிருந்தன. இருந்தபோதிலும் அவை ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை. அதற்கு முன், ஒலிம்பிக் தீபம் பிரேஸிலை வலம்வந்தபோது அதைத் தடுக்கும்முகமாக பிரேஸிலிய மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்களோ எதிர்ப்பு நடவடிக்கைகளோ கவனம் பெறவில்லை. பலத்த பாதுகாப்பின் நடுவிலேயே ஒலிம்பிக் தீபம் பிரேஸிலை வலம்வந்தது.

இம்முறைதான் முதன்முதலாக ஒலிம்பிக் போட்டிகள் தென்அமெரிக்கக் கண்டத்தில் நடக்கிறது. 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கை நடாத்தும் நாடாக பிரேஸில் 2009 ஆம் ஆண்டு தெரிவானபோது மகிழ்ச்சியின் உச்சத்தில் ஒருநாள் பொது விடுமுறை அளிக்கப்பட்டது. உலகப் புகழ்பெற்ற ‘‘கோப்பகபான” கடற்கரையில் கொண்டாட்டங்கள் தொடங்கின. ஏழு ஆண்டுகள் கடந்த பின், அரைவாசிக்கும் மேற்பட்ட பிரேஸிலியர்கள் பிரேஸிலிற்கு ஒலிம்பிக் தேவையில்லை எனக் கருதுகிறார்கள். இன்னொருபுறம் கட்டுமானப் பிரச்சினைகள், சுத்தமான நீரின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளால் போட்டி ஏற்பாடுகள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளன.

பிரேஸிலின் பொருளாதாரம் பாரிய நெருக்கடியை எதிர்நோக்குகிறது. 20 சதவீதத்தை அண்மித்துள்ள வேலையின்மை, 30 வீதத்தால் குறைவடைந்த ஏற்றுமதிகள், சர்வதேசச் சந்தையில் பிரதான ஏற்றுமதியான இரும்பின் விலையில் 75 வீத வீழ்ச்சி எனப் பல்வேறு வகைகளில் மோசமான பொருளாதார நிலையில் பிரேஸில் உள்ளது. இவற்றின் அடிப்படையில் ஒலிம்பிக் யாருக்கானது என்ற கேள்வி எழுகின்றது.

1985 இல் பிரேஸிலில் இராணுவ ஆட்சி முடிந்த பின் பிரேஸில் மெதுமெதுவாக உலக நிதி மூலதனத்துடன் தன்னை இணைத்தது. உலகின் முக்கியமான பொருளாதார அற்புதங்களில் ஒன்றென உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் 1990 களில் பிரேஸிலைப் புகழ்ந்தன. பிரிக்ஸ் கூட்டமைப்பின் உருவாக்கம் உலகின் முதனிலைப் பொருளாதாரங்களில் ஒன்றாக பிரேஸிலை அடையாளப்படுத்த உதவியது. மிகையான பொருளாதார வளர்ச்சியும் உலக அரங்கில் முக்கியமான பொருளாதார சக்தியாக மாறியமையும் வெற்றி அற்புதக் கதைகளாகவும் பிற மூன்றாம் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் முன்வைக்கப்பட்டன. பிரேஸிலின் பொருளாதார வளர்ச்சியும் உலக அரங்கில் அதன் இடமும் “பிரேஸிலின் அற்புதம்” என்று புகழப்பட்டு பல மூன்றாம் உலக நாடுகளுக்கு வளர்ச்சிக்கான மாதிரியாகக் காட்டப்பட்டது. ஆனால் பிரேஸிலின் சாதனை 50 பில்லியனர்களையும் 1,500 மில்லியனர்களையும் உருவாக்கியமை மட்டுமே.

நாட்டின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் வறுமைக் கோட்டுக்குக் கீழிருக்கும் போது 2014 ஆம் ஆண்டு கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்தை நடாத்தி மில்லியன் கணக்கில் செலவழித்த பிரேஸில் இப்போது அதனிலும் மிகப்பெரிய தொகையைச் செலவு செய்து ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது ஏன்?

விளையாட்டுக்கள், இன்று திரைப்படங்கள் போலவும் தொலைக்காட்சிகளில் வரும் பல்வேறு பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் போலாகி விட்டன. விளையாட்டு வீரர்கள் நடிகர்கள் போலவும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பல்வேறு பிரபலங்கள் போலவும் ஆகிவிட்டனர். அவர்களது அன்றாட வாழ்க்கை பற்றிய அரட்டைகளும் தமக்குத் தொடர்போ அனுபவமோ அறிவோ அற்ற அலுவல்களில் கூட அவர்களது கருத்துக்கள் செய்திகளாகவும் சிறப்புக் கட்டுரைகளாகவும் கருத்துரைகளாகவும் வருகின்றன. ஊடகத் துறையின் சீரழிவு விளையாட்டுத் துறையின் சீரழிவுடன் தன்னை நெருக்கமாகப் பின்னிப் பிணைத்துள்ளது.

முதலாளித்துவத்தின் வருகை விளையாட்டுகளுக்கு ஒரு வணிகப் பெறுமதியை வழங்கியது. இதை விளங்க வேண்டுமாயின் விளையாட்டுகளைப் புனிதப்படுத்தியதும் ஒரு கிரேக்க பண்பாட்டுச் சின்னமாக உருவான ஒலிம்பிக் போட்டிகள் மீளுருவாகி ஓர் உலக விளையாட்டுப் போட்டியான பின், தேசிய அரசியல், மேலாதிக்க வல்லரசு அரசியல் போட்டிகளின் ஒரு களமாகி, கடந்த இரு தசாப்தங்களுள் மிக மோசமான வணிக நோக்கத்தையுடைய நிகழ்வாகச் சீரழிந்துள்ளதைக் கவனிக்கலாம். இது பிரபலமான சகல விளையாட்டுத் துறைகளுக்கும் பொருந்தும். இன்று விளையாட்டின் தரத்தையும் இரசிகர்களின் தொகையையும் அதன் வணிகப் பெறுமதி தீர்மானிக்கிறது.

கனவான்களின் விளையாட்டாக நீண்ட காலமாக இருந்துவந்த கிரிக்கெட் இன்று ஒருபுறம் தேசியவாத, இனவாத உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு களமாகவும் அதற்கும் மேலாகச் சூதாட்டத்துக்கு உட்பட்டு ஊழல்களும் குற்றச் செயல்களும் மலிந்த ஒரு துறையாகவும் மாறி உள்ளது. உருவான நாளிலிருந்தே தொழிலாளி வர்க்க விளையாட்டாக விருத்தி பெற்ற கால்பந்தாட்டம் நீண்ட காலமாகவே சூதாட்டத்துடன் தொடர்புடையதாகி, இன்று, விளையாட்டு முடிவுகளையும் சூதாட்டத் துறை தீர்மானிக்க முனையும் அளவுக்குக் குதிரைப் பந்தயம் போலாகி விட்டது. இதன் பின்னணியில் இதைச் சுற்றிய வணிகமும் அதை மையப்படுத்திய விளம்பரங்களும் அரங்கேறுகின்றன.

இம்முறை ஒலிம்பிக் போட்டிகளில் கல்லா கட்டுவது எப்படியென்று ஒருபுறமும் அரசியல் ரீதியாக எதிரி நாடுகளைப் பலவீனப்படுத்துவது எப்படியென்று இன்னொரு புறமும் விடயங்கள் அரங்கேறின. பிரதான ரஷ்ய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்துகளைப் பயன்படுத்துகிறார்கள். எனவே அவர்களின் பங்குபற்றலைத் தடுக்கவேண்டும் என்ற கோரிக்கையைச் சில மேற்குலக நாடுகள் முன்வைத்ததை அடுத்து ரஷ்ய வீரர்கள் ஒலிம்பிக்கில் பங்குபெறுவதை முற்றாகத் தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து, ஊடக வெளியில் முக்கிய பேசுபொருளாகியது. இப்போது சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ரஷ்ய வீரர்களின் பங்குபற்றலைத் தடைசெய்துள்ளது. தடகளப் போட்டிகளிலும் பாரம்தூக்கல் ஆகியவற்றிலும் முழுமையான தடையும் ஏனையவற்றில் பகுதித் தடையும் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் இம்முறை எந்தவொரு ரஷ்ய தடகள வீர வீராங்கனையும் ஒலிம்பிக்கில் பங்குபெற இயலாது. கடந்த ஒலிம்பிக்கில் ரஷ்யா தடகளப் போட்டிகளில் ஏழு தங்கம் உள்ளடங்கலாகப் 16 பதக்கங்களை வென்றிருந்தது.

இதில் கவனிக்கத்தக்க ஒரு விடயம் என்னவென்றால், தடிஊன்றிப் பாய்தலில் உலக சாதனையை ஏற்படுத்திய ரஷ்ய வீராங்கனை ஜெலீனா இசம்பயேவா கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக முதனிலை வீரராக உள்ளார். இதுவரை அவர் தடைசெய்யப்பட்ட ஊக்க மருந்தெதையும் பயன்படுத்தியதாக ஒரு குற்றச்சாட்டும் இல்லை. ஆனால் அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாது. அதேவேளை, ஊக்கமருந்து பயன்படுத்தியது நிரூபிக்கப்பட்டு தடைக்குட்பட்ட அமெரிக்க தடகள வீரர் ஜஸ்டின் கற்லின் இம்முறை ஒலிம்பிக்கில் பங்கேற்கிறார்.

மிக நீண்டகாலமாகப் பதக்கப் பட்டியலில் முதனிலை வகித்த அமெரிக்காவுக்குக் கடந்த நான்கு ஒலிம்பிக் போட்டிகள் பெரும் சவாலாகின. 2008 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் சீனா அமெரிக்காவை மிஞ்சிப் பதக்கப் பட்டியலில் முதலிடத்துக்கு வந்தது. ரஷ்யா மூன்றாவது இடம் பெற்றது. இவை அமெரிக்காவின் ஆதிக்கம் பல விளையாட்டுக்களில் குறைவதைக் கோடிட்டுக் காட்டியது. இம்முறை ரஷ்ய வீரர்களின் தடை அமெரிக்காவுக்கு வாய்ப்பாயுள்ளது.

ஓலிம்பிக்கில் பங்கேற்கும் பாலஸ்தீன வீரர்களின் போட்டிக்குப் பயன்படுத்தும் உடைகளை இஸ்ரேலிய சுங்கத்தினர் தடுத்து வைத்துள்ளனர். இந்த உடைகள் இல்லாமலேயே ஆரம்ப நிகழ்வில் பலஸ்தீனப் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களது உடைகளை மீளப் பெற சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கச் சில நாட்கள் முன் எடுத்த புகைப்படமொன்று பிரேஸிலின் நிகழ்நிலையைத் தெளிவாகப் பிரதிபலித்தது. ஜொலிக்கும் ஒலிம்பிக் பதாதைகள் மத்தியில் வீதியோரத்தில் முதிய பெண்ணொருவர் படுத்துறங்கும் காட்சி ஊடகங்களின் கவனத்தைப் பெறவில்லை.

வறுமையையும் செழிப்பையும் பிரிப்பதற்காக றியோ டி ஜெனிரோவின் சேரிகள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன. ஏனைய வறிய பகுதிகளைச் சுவரெழுப்பி முற்றாக மறைத்தனர். இப்போது றியோ நகரம் எழில் கொஞ்சும், உல்லாசம் நாடும் சம்பா நடன மாதரின் சொர்க்காபுரியாக விருந்தினர்களுக்குக் காட்சியளிக்கிறது. இதுவே ஊடகங்கள் வழியாகக் காட்டப்படுகிறது. இதை இயலுமாக்கச் சிந்திய இரத்தமும் உறிஞ்சிய உழைப்பும் வீடிழந்த இலட்சக் கணக்கானோரும் வாழ்வாதாரம் இழந்த, மேலும் பல இலட்சம் பேரும் எவரது கண்களுக்கும் தெரிய மாட்டாது.

இனிவரும் நாட்களில் புகழ்பெற்ற மரக்கானா விளையாட்டரங்கில் உசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஓடத் தயாராகையில் அரங்கை அமைதி நிறைத்திருக்கையில் இலட்சோபலட்சம் பிரேஸிலியர்களின் அவலம்மிகும் ஈனக்குரல்கள் எவருடைய காதுகளிலும் விழாது. முக்கியமானது ஏதெனின், உசைன் போல்ட் வென்றாரா? இல்லையா? என்பதுதான்.