வாழ்க்கை

” இல்லை நான் உடலை வருத்தித் தோட்டம் செய்து உழைத்து தான் உங்களை எல்லாம்
வளர்த்து ஆளாக்கினான்.

இப்ப உடம்பில ஒரு வருத்தமும் இல்லாமல் இருக்கிறன். விரும்பினதைச் சாப்பிடுறன்.
என்னை என்ர பாட்டுக்கு விடுங்கோ ” என்றார்.

இந்தாளை ஒன்றும் செய்ய முடியாது என விட்டு விட்டனர்.
இப்படியான மனிதர்கள் தான் நடந்து போகச் சக்தி இருக்கும் போதே இறந்து
போகின்ற நல்ல சாவைக் காண்கின்றனர்.

நாளாந்தம் தேகம் களைக்க வேலை செய்யும் ஒருவருக்கு வியர்வை,மலம்,சலம் ஆகிய
கழிவுகள் உடலில் இருந்து ஒழுங்காக வெளியேறும்.

அவ்வாறான மனிதர்களை நோய்கள் அணுகுவது குறைவு.
உடல் பயிற்சி தரும் விளையாட்டுக்கள், மண்வெட்டி பிடித்து வேலை செய்தல்,
கோடரி கொண்டு விறகு கொத்துதல், பிக்கான் கொண்டு கிடங்கு வெட்டுதல்
எல்லாம் மிகவும் உடற்பயிற்சியைத் தரும் வேலைகள்.

இவற்றை வாராந்தம் சில மணித்தியாலங்கள் கடைப்பிடித்து வரும் மனிதர்கள்
நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள்.

உத்தியோகமும் பார்த்து தோட்டம், வயல் செய்து வாழும் மனிதர்களின்
எண்ணிக்கை சுருங்கி வருகிறது.

தோட்ட நிலங்கள் வயல் நிலங்கள் பல மனிதக் குடியிருப்புகளாகவும்,வணிகக்
கடைத்தொகுதிகளாகவும் மாறும் நிலை தான் இன்று.

ஒரு காலத்தில் பணக்கார வருத்தங்கள் எனப்பட்ட நீரிழிவு, இரத்த அழுத்தம்,
மாரடைப்பு எல்லாம் இன்று யாவருக்கும் பொதுவான வருத்தங்கள் எனும் சொல்லக்
கூடிய வாழ்க்கைச் சுற்றோட்டத்தினுள் வந்து விட்டோம்.

தொற்றுநோய்கள் மனித குலத்திற்கு அச்சுறுத்தல் விடுத்த ஒரு காலம்
இருந்தது. நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் அவற்றுக்கு விடை கொடுத்தது.

நவீன கண்டுபிடிப்புகளால் மனிதன் சொகுசாக வாழும் நிலை வந்தது.
இப்போது தொற்றா நோய்களின் வசப்பட்டு நோயாளியாகிய மனிதர்களின் எண்ணிக்கை
தான் அதிகம்.

சீனி போட்டுத் தேநீர் குடிக்க வழியில்லாமல் இருந்த காலத்தில்
உள்ளங்கையில் சிறிதளவு சீனியை வைத்திருந்து அதை நக்கிக் குடித்த போது
உடல் ஆரோக்கியம் இருந்தது.

அரைவயிறு உணவு, கால்வயிறு தண்ணீர், கால்வயிறு வெறும் வயிறு என்று
கடைப்பிடித்த முன்னோர்களிடம் ஆரோக்கியம் நிறையவே இருந்தது.

கந்தசஸ்டி விரதம் பிடித்துப் பாருங்கள். அருமையான விரதம்.
ஆறு நாள்கள் இரவு ஒருநேர உணவு. வயிறு காய்ந்து உடலில் உள்ள கொழுப்புகள்
கரைந்து தேகம் மெலிந்து புத்துணர்வு பெறும்.

”மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின் ”
என வள்ளுவன் கூறியது போல உண்ட உணவு சமிபாடு அடைந்தமையை அறிந்து
உண்பவரிடம் உடல் ஆரோக்கியம் இருந்தது.
உணவை அளவறிந்து உண்பவரின் உடல் நோயற்று இருந்தது.

உணவை அளவாக உண்டால் உணவை நாம் உண்போம். மூக்குமுட்ட வயிறு நிறைய உண்டால்
உணவு தான் எம்மை உண்ணும் .

உணவு நஞ்சாகி நோய் வந்து பீடிக்கும்.
உலகில் பட்டினியால் இறந்தவர்களை விட அளவுக்கு மீறி உணவு உண்டு நோய் வந்து
இறந்தோர் தொகை தான் அதிகம்.

மால்தூஸ் எனும் மேற்கத்தைய அறிஞர் ” இப்போதுள்ள சனத்தொகையை விட பல மடங்கு
சனத்தொகைக்கு உணவு கொடுக்கக் கூடிய அளவுக்கு உலகில் உணவு வளங்கள் உள்ளது.

ஆனால் அதன் பங்கீடு சரியாக இடம் பெறாமையே பட்டினி நிலைமைக்குக் காரணம் ” என்றார்.

மண்பானை,மண்சட்டி சமையலில் நிறையவே உடல் நலம் இருந்தது.
மண்பானையில் சோறு சமைத்து மிஞ்சிய சோற்றில் இரவு தண்ணீர் விட்டு அதிகாலை
அந்தச் சோற்றுத் தண்ணீரைக் குடிக்கும் பழக்கம் இருந்தது.

அந்தப் பழக்கம் இருந்த காலத்தில் காலைக்கடன்களை இலகுவாகக் கழிக்க முடிந்தது.

நோய்கள் பலவற்றுக்கு மூலகாரணம் மனச் சிக்கல், மலச்சிக்கல்.
இந்த இரண்டு சிக்கலும் இல்லாத மனிதனை நோய்கள் அண்டாது.

இயற்கையில் கிடைத்த இரசாயனம் கலக்காத உணவு வகைகள் எமக்கு நற்சுகத்தைத் தந்தது.
அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும்.

வேகமாக உற்பத்தி செய்ய வேண்டுமென
மனிதர்கள் பேராசைப்பட இரசாயன உலகம் எம்மை ஆக்கிரமித்துக் கொண்டது.
இயற்கையுடன் பகைத்துக் கொண்டோம். செயற்கையுடன் உறவாடினோம்.

புறொய்லர் இறைச்சி உண்டு மனிதரும் புறொய்லர் ஆகிப் போனார்கள்.

விளைவு இயற்கை எம்மைப் பகைத்துக் கொண்டது. புதுப்புது நோய்கள் எம்மசை்
சொந்தம் கொண்டாட நாளாந்தம் 3 வேளையும் 100 கிராம் குளிசை போட்டால் தான்
நடக்கலாம்.

இருக்கலாம். நித்திரை கொள்ளலாமென்ற புதிய வாய்ப்பாட்டு
வாழ்க்கை வசப்பட்டது.

இதிலுள்ள விசித்திரம் என்னவென்றால் புலம்பெயர் தேசங்களில் கடுமையான
உழைப்பாளிகளாக இருந்து அனுப்பும் பணம் இங்கு கடுமையான சோம்பேறிகளை
உருவாக்கி விட்டது .

சோறு சாப்பிட்டு கொகோகோலா குடித்தால் தான் செமிக்குமென்ற புதிய
வாய்ப்பாடுகளும் வந்து விட்டது.

பல்தேசியக் கம்பனிகள் விளம்பர உலகம் எமது பாரம்பரியங்களைப் பிழையென்று
எம்மை நம்ப வைக்கிறது.

எமது பணத்தைச் சுரண்டுகிறது.
சில வருடங்களுக்கு முன்பாக ஓர் பத்திரிகையின் வாரமலரில் ” சுட்டாறிய
தண்ணீர் உடல் நலத்திற்குக் கேடானது.

என்னென்ன வழிகளில் கேடு வருமென்பதை
ஓர் விஞ்ஞானி தனது ஆய்வின் மூலமாகக் கண்டறிந்ததாக ” ஓர் சிறு கட்டுரை
வந்தது.

அதனை வாசிப்போர் சுட்டாறிய தண்ணீரை ஒரு போதும் அருந்தக் கூடாதெனத் தான்
முடிவுக்கு வருவார்கள்.

உண்மை அதுவல்ல. போத்தல் தண்ணீர் எனப்படும் மினரல் வோட்டரை விற்க முற்பட்ட
ஒரு பல்தேசியக் கம்பனிக்கு கிணற்றுத் தண்ணீர், சுட்டாறிய தண்ணீர் யாவும்
தீங்கானது என மக்களை நம்ப வைத்தால் தான் வியாபாரம் எடுபடும்.

அதனால் மக்களால் பெரிதும் வாசிக்கப்படும் குறித்த பத்திரிகையுடன் பல
இலட்சம் ரூபாவுக்கு விளம்பர ஒப்பந்தங்களைச் செய்து கொண்டது.

அந்தப்
பத்திரிகையும் மக்களின் மண்டையைக் கழுவும் வேலையாக இது போன்ற செய்திக்
கட்டுரைகளைப் பிரசுரித்தது.

இன்று போத்தல் தண்ணீர் வைத்திருப்பவர்கள், வைத்திருக்கப்படும் விழாக்கள்
நவ நாகரீகமானதென்ற நிலைப்பாடு வெற்றிகரமாகக் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

தென்னிந்தியத் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் ” உங்களுக்கு உடல்பயிற்சி
செய்ய நேரமில்லையா ? இதோ இந்தப் பால்மாவைக் குடியுங்கள் உடலுக்கு நன்மை
ஏற்படும் ”
என ஒரு விளம்பரம் வந்தது.

பாருங்கள் எவ்வளவு மோசமாக மிகவும் பகிரங்கமாக
ஏமாற்றுகிறார்கள்.
நொருங்கத் தின்றால் நூறாண்டு வாழலாம் என்றனர் மூத்தோர்கள்.

உண்ணும் உணவை வாயில் பற்களால் நன்றாக அரைத்து உண்டால் உணவு நன்றாகச்
சமிபாடு அடையும் என்றார்கள்.

ஆனால் பற்களால் அரைத்துச் சாப்பிட்டால் சத்தம் கேட்கும். அது ஸ்ரைல்
இல்லையெனப் புறக்கணித்து விழுங்கி விழுங்கி உண்பது செமியாக் குணத்தை
உண்டாக்கி நோயைக் கொண்டு வரும்.

உண்டபின் நூறடி உலாவு என்றனர் முன்னோர். அதாவது உணவு உண்ட பின் நூறடி
தூரம் உலாவினால் உணவு வயிற்றில் நன்றாக அரைபட்டுச் சமிபாடு அடையும்.

ஆரோக்கிய வாழ்வு தானாக மலரும்.
தொலைக்காட்சி அல்லது கணனி பார்த்துக் கொண்டே இருந்த இரையில் உணவு உண்டு
அப்படியே கையைக் கழுவிக் கொண்டு இருந்தால் வண்டி தொந்தி விழுந்து நோய்
ஓடி வரும்.

இரவு உணவு உண்டு இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின் நித்திரைக்குப் போவது
தான் உடல் ஆரோக்கியம் என மூத்தோர் வகுத்திருந்தார்கள்.

ஆனால் இரவு உணவு உண்டவுடன் கையைக் கழுவி விட்டு மல்லாந்து நித்திரை
கொண்டால் நோய்கள் தானே தேடி வரும்.
தொப்பை பெருத்து குனிந்து முழங்காலைத் தொட முடியாத மனிதர்கள் தான்
அதிகமாகி வருகின்றனர்.

மண் வீடு, திண்ணை வாழ்வைத் தொலைத்து விட்டோம். பூட்டிய வீட்டினுள்
மின்விசிறிக் காற்றுடனான வாழ்க்கை தான் யாவருக்கும் பொதுவாகி விட்டது.

அதனால் நோய் .நோய்க்கு மருந்து. மருந்தினால் பக்க விளைவு. அதனால் நோய்.
அதற்கு மருந்தெனச் சுற்றோட்டம் தொடர்கிறது.

வருடத்தில் இருநாள் பேதி குடித்து வயிற்றைத் தூய்மைப்படுத்திய வாழ்வைக்
கைவிட்டதும் பலவித நோய்களுக்கு காரணம்.

ஆடிஅமாவாசைக்குக் காத்தோட்டியம் காய் கறிகளுக்குச் சேர்ப்பார்கள். அந்தக்
காய் வயிற்றிலுள்ள பூச்சிகளைக் கொல்லும். ஆரோக்கியம் கிடைக்குமென எமது
முன்னோர் வகுத்துள்ளார்கள்.

உடற்பயிற்சி உள்ள வாழ்க்கை முறையே அவசிய தேவை. கிடைக்கின்ற ஒவ்வொரு
துண்டு நிலத்தையும் வளப்படுத்த வேண்டும்.

நடைப்பயிற்சியாவது செய்து நலம்
பேண வேண்டும். தொற்றா நோய்களற்ற அழகிய உலகைக் கட்டியெழுப்ப எமது முன்னோர்
வாழ்வின் நல்ல பண்புகள் குறித்த விழிப்புணர்வே அவசரத் தேவை.

ஆக்கம் – வேதநாயகம் தபேந்திரன்

நன்றி – எதிரொலி ,19-06-2019 புதன்கிழமை