வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் தொழிலாளர்கள் சார்பான ஆய்வுகள் அவசியம் – மலையக சமூக நடவடிக்கை குழு

1951ஆம் ஆண்டு 14 அம்சக் உடன்டிக்கையில் உள்ள தொழிலாளர்களை தோட்ட நிர்வாகம் தொழிலார்களை வேலையில் இருந்து நீக்குவதை தடுப்பதற்கான எற்பாடுகள் இருந்துள்ளன. எனினும் 2003ஆம் ஆண்டு செய்துக் கொள்ளப்பட்ட பெருந்தோட்டத் தொழிற்துறைக்கான பிரதான கூட்டு ஒப்பந்தத்தில் ஏற்பாடுகள் தொழிலாளர்களை தோட்டத் துறைமார் தொழில் இருந்து நீக்குவதனை தடுப்பதற்கான விசேட ஏற்பாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அத்துடன் தொழிற்சங்கங்களின் செயற்பாடுகளை தோட்ட முகாமை முடக்குவதனை தடுப்பதற்கான ஏற்பாடுகளை தடுப்பதற்கான விசேட ஒழுங்குப்படுத்தல் முறைகளை கொண்டிக்காமை மிகவும் பலவீனமான அம்சம். எனவே இதனையும் ஏனைய விடயங்களையும் கருத்திற்கொண்டு தற்போதுள்ள கூட்டு ஒப்பந்தம் எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்பட வேண்டும். இவ்வாறு மலையக சமூக நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த ‘பெருந்தோட்டத் தொழிற்துறையின் எதிர்காலமும் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளும்’ என்ற கருத்தரங்கில் உரையாற்றிய அக்குழுவின் உறுப்பினர் சுகுமாரன் விஜயகுமார் குறிப்பிட்டார்.

நடவடிக்கை குழு உறுப்பினர் இரா. சந்திரமோகனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான நிகழ்வில் ‘கூட்டு ஒப்பந்தமும் தோட்டத் தொழிலாளர்களும்’ என்ற தலைப்பில் கருத்துரையாற்றிய அவர் மேலும் குறிப்பிடுகையில் கூட்டு ஒப்பந்தம் என்பது சமகாலத்தில் உள்ள மூலதனமைய தொழில் உறவுகளை ஒழுங்குப்படுத்துவதில் தொழிலாளர்களுக்கான பங்கினை உறுதிப்படுத்தக்கூடிய பங்களிப்பை வழங்ககூடிய ஒப்பீட்டளவில் ஒரு முற்போக்கான அம்சமாகும். இலங்கையில் தனியார் வங்கிகள் மற்றும் வர்த்தக தொழிற்துறைகளில் நிலவும் கூட்டு ஒப்பந்தங்கள் அத்துறையில் உள்ள தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்வதில் முன்னுதாரணமாக இருக்கின்றன. எனினும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம் அவ்வாறு இல்லாமல் இருக்கின்றமை கவனிக்கத்தக்கது என்றார்.

தொடர்ந்து தனது உரையில் 1918ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டில் கைச்சாடப்பட்டுள்ள சம்பள கூட்டு ஒப்பந்தங்களில் உள்ள ஏற்பாடுகள் தொழிலாளர்களுக்கு எதிரான பல அம்சங்களை கொண்டிருப்பதனை சுட்டிக்காட்னார். குறிப்பாக மாத சம்பளத்திற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படாமை, சம்பள சூத்திரத்தில் அடிப்படை சம்பளத்தை ஏனைய கொடுப்புகளோடு ஒப்பிடுகையில் இடைவெளி குறிப்பிடத்;தக்களவு குறைவாக இருக்கின்றமை, வாழ்கைச் செலவு உயர்வு புள்ளிக்கு ஏற்ப சம்பள அதிகரிப்பினை உறுதி செய்யும் அம்சங்களை சம்பள சூத்திரம் கொண்டிராமை, சம்பள அதிகரிப்பு அல்லது திருத்தம் ஒவ்வொரு வருடமும் இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் இன்மை, சம்பள திருத்தம் அல்லது அதிகரிப்பு 2 வருடங்களுக்கு ஒருமுறை நிலவி வந்த நடைமுறை 2016ஆம் ஆண்டு கைச்சாத்திட்ட கூட்டு ஒப்பந்தத்தில் கால வரையறையற்தாக ஆக்கப்பட்டுள்ளமை என்பவற்றை எடுத்துக் கூறிய இந்த குறைபாடுகளை நீக்க வேண்டிய பொறுப்பு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்களுக்கு இருக்கின்றமையை அவர் சுட்டிக்காட்டியதுடன், சம்பள முறையில் ஒப்பீட்டு ரீதியில் உள்ள கம்பனி சார்பு தொழிலாளர் விரோத அம்சங்களையும் பாராளுமன்ற சட்டமொன்றினூடாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு பெறுவதில் உள்ள சிக்கல்களையும் எடுத்துக்கூறினார்;.

வெளியாள் உற்பத்தி முறைமையனது (Out grower system) அடுத்து செய்யப்படும் கூட்டு ஒப்பந்த்தினூடாக அமுல்படுத்துவதற்கு கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கங்கள் ஏற்று ஒப்பமிட்டுள்ள நிலையில், முன்னோடித்திட்டமாக வெளியாள் உற்பத்தி முறை அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ள தோட்டங்களில் தொழிலாளர்கள் மிகவும் பாரதூரமாக பாதிக்கப்பட்டுள்ளமை பத்திரிக்கைகளில் செய்திகளாக வெளிவந்துள்ளன. எனவே, இது தொடர்பில் மக்கள் சார்பாக நின்று ஆய்வுகள் செய்ப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

இக்கருத்தரங்கில் ‘கூட்டுப் பேரப் பேச்சும் நீதி மன்றங்களின் தலையீடும்’ என்ற தலைப்பிலே மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ.தம்பையா கருத்துரை வழக்கினார். கூட்டு ஒப்பந்தம் என்பது தொழிற்சட்டத்தின் ஒரு குறை நிரப்பேயன்றி (Supplementary) தொழிற் சட்டத்திற்கான பதிலீடாக (Substitute) அமைய முடியாது. எனவே, கூட்டு ஒப்பந்தங்கள் தொழிற்சட்டங்களை மீறுவதாக இருக்கும் போது அதற்கு நீதிமன்றத்தினூடாக நியாயம் கேட்பதற்கான உரிமை உண்டு என குறிப்பிட்டார். கூட்டு ஒப்பந்த்தில் கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் அல்லது தொழிற் வழங்குநர் கூட்டு ஒப்பந்தில் உள்ள விடயங்கள் முறையாக அமுல்படுத்தவில்லை என்பதை தொழில் ஆணையாளருக்கு முறையிடுமிடத்து அவர் நடுத்தீர்ப்பாயம் (Arbitration Board) ஒன்றை நியமித்து அமைத்து அதில் விசாரிக்கப்பட்டு நடுத்தீர்ப்பு வழங்கப்படும். சார்பாக நடுத்தீர்ப்பை பெற்ற தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்தக்கோரியும் அல்லது தீர்ப்பில் அதிருப்தியுற்ற தரப்பு குறித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டாமென கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும். அதேபோல் கூட்டு ஒப்பந்தத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாக அதில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் அல்லது தொழில் வழங்குனர் தொழில் அமைச்சருக்கு முறையிட்டு அவர் அதனை விசாரணை செய்து தீர்ப்பளிக்க கைத்தொழில் நீதிமன்றத்திற்கு (Industrial Court) வழங்கலாம். இங்கும் சார்பாக தீர்ப்பை பெற்ற தரப்பு தீர்ப்பை நடைமுறைப்படுத்தக்கோரி அல்லது தீர்ப்பில் அதிருப்தியுற்ற தரப்பு குறித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டாமென மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை வழக்கினை தாக்கல் செய்ய வேண்டும். கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கத்தின் உறுப்பினரகள் அத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் தரப்பாக இல்லாத சங்கங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை வழக்கிட முடியும். இவ்வாறான எழுத்தாணை விண்ணப்பங்கள் பொது மக்கள் அக்கறைக்கரியவை என்ற காரணத்தின் அடிப்படையில் எந்த பிரஜையினாலும் செய்யமுடியும் என குறிப்பிட்டார்.

தற்போது பெருந்தோட்ட கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒரு தனிப்பட்ட முயற்சியல்ல ஒரு கூட்டு நடவடிக்கையாகும். மலையக மக்களின் தொழில் உரிமைகளை உறுதி செய்வதற்கான நீதிமன்றத்துடனான போராட்டம் என்ற வகையில் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகும். நீதி மன்ற தீர்ப்பு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் தற்போது பெருந்தோட்டத் தொழிற்துறையும் தொழிலாளர்களின் எதிர்காலமும் பாரிய நெருக்கடிக்கும் சவாலுக்கும் உட்பட்டுள்ளது. எனவே, வழக்கு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தொழிலாளர்களும் ஏனைய துறைசார்ந்தவர்களும் முன்வர வேண்டும். அத்தோடு பெருந்தோட்டத் தொழிற்துறைக்கு மாற்றாக தொழிற்துறைகள் வரும் வரை அதனை பாதுகாக்கவும் தொழிலாளர்களின் உரிமைகளை உறுதி செய்ய பொதுவான ஒத்துழைப்பு நடவடிக்கைகள் மக்கள் சார்பாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம் என்பதை அவர் வலியுறுத்தினார்.

கருத்துரைகளின் பின்னர் கலந்துரையாடல் சட்டத்தரணி நேரு கருணாகரனின் வழிநடத்தலில் இடம்பெற்றதுடன் பங்குபற்றிய இருந்த தொழிலாளர்கள் கூட்டு ஒப்பந்தம் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து கொண்டதுடன், அடுத்த கூட்டு ஒப்பந்தத்தினூடாக நடைமுறைப்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ள வெளியால் உற்பத்தி முறை தொழிலாளர்களுக்கு நன்மையை பெற்றுத்தருமா என்பது தொடர்பில் ஆக்கபூர்வமான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன. இதன் போது கருத்து தெரிவித்த நேரு கருணாகரன் வெளியாள் உற்பத்தி முறை தொடர்பாகவும் கூட்டு ஒப்பந்தம் தொடர்பாகவும் மக்கள் சார்பாக இருந்து ஆய்வுகள் முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது என குறிப்பிட்டார்.