எம்மவர் பயணம் எவடம் எவடம் ? பு(லி)ளியடி பு(லி)ளியடி தானா ? (இறுதி)

(மாதவன் சஞ்சயன்)

பிரித்தானியா சுதந்திரம் தந்த பின் தொடர்ந்து வந்த அரசுகளின், தமிழர் ஏற்றுக்கொள்ள முடியாத நடவடிக்கைகள் தான் முரண்பாட்டின் ஆரம்பம். இரு தரப்பு தலைவர்களும் தமது வாக்கு அரசியலை செய்து இன விரோதத்தை வளர்த்து விட்டனர். அதே வேளை பெரும்பான்மை இனத்துள்ளும் பொருளாதார ஏற்றத்தாழ்வு புகையத்தொடங்கி அது 1971ல் படித்தவேலையற்ற தென்னிலங்கை இளைஞர்களின் ஆயுத புரட்சிக்கு வித்திட்டது. அதே காலத்தில் கொண்டு வரப்பட்ட தரப்படுத்தல் முறை தமது படிப்பை, தம் எதிர்காலத்தை பாதிக்கும் செயல் என்ற பயம் யாழ் மாவட்ட மாணவரை, அரசை எதிர்த்துப் போராட தூண்டியது.

தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட இனக் கலவரம் கொண்டு அடக்கும் அரசுகளின் செயல் இளைஞர்களை ஆயுதம் ஏந்தும் நிலைக்கு தள்ளியது. ஆரம்பத்தில் புலிகள் மட்டுமே சுத்த ராணுவ கண்ணோட்டம் கொண்டவர்களாக இருந்தனர். தாம் மக்களுக்காக போராடி தனி நாடு பெறுவோம் என்ற அவர்களின் போக்குக்கு மாறாக தமிழ் பேசும் மக்களை அரசியல் மயப்படுத்தி, அணிதிரட்டி அவர்களின் உரிமையை அவர்களே பெறும் மக்கள் போராட்டம் தான் வெல்லும் என்பது ஏனைய போராட்ட தலைமைகளின் நிலைப்பாடு. ஆனால் 1983 கலவரம் அதனை மாற்றி அனைவரையும் ஆயுதங்களின் பக்கம் பலவந்தமாக தள்ளியது.

அந்த திடீர் மாற்றம் மக்களை பார்வையாளராக்கி ஆயுதம் ஏந்தியவர்கள் சொல்படி நடக்க வேண்டியவர்களாக மக்களை மாற்றியது. 1986ல் புலிகள் டெலோவை தாக்கும் வரை ஏனைய தலைமைகள் அரசியல் பிரிவுகள் மூலம் மக்களுடன் நல்லுறவை பேணி வந்த போதும் அவர்களுள்ளும் இருந்த ஆயுத பிரிவுகள் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டன. புலிகளின் சகோதரப் படுகொலை ஆரம்பித்ததும் மக்களும் இரு பிரிவினராக பிரிக்கப்பட்டு 1. புலி ஆதரவாளர். 2. புலி எதிர்ப்பாளர் என அடாவடி நடவடிக்கைகள் தொடங்கின. புலி எதிர்ப்பாளர் புலிகளால் 1987முற்பகுதி வரை யும் பின் 1990 முதலும் தண்டிக்கப்பட புலி ஆதரவாளர்கள் 1987 பிற்பகுதி முதல் ஏனையவர்களால் தண்டிக்கப் பட்டனர். எதிரியிடமிருந்து தம்மை காப்பர் என நம்பிய மக்கள் நம்மவரின் ஆயுத அடக்கு முறைக்குள் அகப்பட்டு அல்லல் பட்டனர்.

தெருவில் போட்டு எரிக்கப் பட்ட எம்போராளிகள் முதல் கந்தன் கருணையும், அசோக்ஹோட்டல் முன் உள்ள வீடும் போல பல வீடுகள், இரகசிய வதை முகாங்கள், அவற்றுக்கு வாய் இருந்தால் ஆயிரம் கதை சொல்லும், எம்மவர் புரிந்த அராஜகங்கள் பற்றி. இன்று இறுதி யுத்த குற்றங்கள் பற்றி சர்வதேசத்திடம் விசாரணை கேட்டு நிற்கும் எமக்கு, அவர்களால் நிறை வேற்றப்படும் என எதிர் பார்க்கப்படும் வரைபில் உள்ள ஒரு விடையம் பல உண்மைகளை வெளிக்கொண்டு வர உதவும் என்பது மகிழ்ச்சியானதே. காரணம் அரச தரப்பு மட்டுமல்ல எம்மவரும் செய்த அத்துமீறல்களும் விசாரிக்க படவேண்டும் என கூறப்பட்டிருப்பதில் அது தனியே புலிகளை மட்டுமல்ல புலியடி பயணித்த ஏனையவர்களையும் தான் விசாரிக்கும் என்பது உண்மை.

புலியிசத்தை வரித்துக்கொண்ட ஏனையவரும் வரிசையாக விசாரணை வலைக்குள் வந்து தான் ஆகவேண்டும். இந்திய படை பிரசன்னத்தின் போது செயல்பட்ட கறுப்பாடுகள், பின் 1990 முதல் கொழும்பில் எதிரியுடன் இணைந்தும் தம் செயலை தொடர்ந்தனர். அதே காலப்பகுதியில் ஜனநாயகத்துக்கு திரும்பியதாக கூறி வந்தவர்களும் தம் பணத்தேவைக்காக கொழும்பில் நடத்திய கடத்தல், தடுத்து வைப்பு, அடித்து துன்புறுத்தல் நடவடிக்கையால் கேட்ட அலறல் சத்தம் பற்றி அயலவர்கள் கொடுத்த முறைப்பாடுகள் அரச அனுசரணையால் விசாரிக்கப்படா விட்டாலும் அவை இன்னமும் பதிவில் உண்டு. அவர்கள் பாவித்த அந்த மாடி வீடு மட்டும் தான் இப்போது அவர்களிடம் இல்லை. எனவே விசாரணையின் போது விடாது கருப்பு நிலைதான் ஏற்படும்.

புலிகள் மட்டுமல்ல அவர்கள் பாணியில் தாமும் நடந்து பல அராஜகங்களை புரிந்தவர்கள், இன்று எந்தப் போர்வையை போற்றினாலும் அவர்களின் கடந்தகால செயல்களை மூடி மறைக்க முடியாது. நம்பகமான விசாரணையில் சாட்சி சொல்ல, ஆதாரத்துடன் பலர் காத்திருக்கிறார்கள். செய்யாத குற்றசாட்டில் இருந்து தான் காலம் இவர்களை விடுதலை செய்யும். ஊர் பார்த்த அநியாயங்கள் ( உண்மைகள்) வெளிப்பட்டு இவர்களுக்கு எதிராக மாறும். உண்மை அறித்தவர்கள் சாட்சி சொல்வர். சஜின் வாஸ் குணவர்த்தன கூட மகிந்தவை மாட்டிவிடும் காலம் இது.

புலிகளின் அனுசரணையில் புனிதராகி பல விடயங்கள் மறக்கடிக்கப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் என்ற போர்வையில் பாராளுமன்றம் சென்றவர்கள் கூட முன்பு செய்த பாதக செயலுக்கு பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். வித்தியாதரன் தன்னிடம் உள்ள ஆதாரங்களை சென்ற தேர்தலில் கோடிட்டு காட்டினார். விசாரணை என்று வந்தால் அதை அவர் கொடுக்கத்தான் வேண்டும். விடுதலைப் போர் என்ற பெயரில் சில சுயநல தலைமைகள் புதைத்தவை கிளறப்படும். குற்றவாளி கூண்டில் அவர்களும் ஏற்றப்படுவர். சர்வதேச விசாரணை கேட்பவர் உள்ளூர் விசாரணையில் மாட்டுவார்.

நெடுந்தீவின் ஏ ஜி ஏ முதல் யாழ் நிமலராஜன் வரை பல விடயங்களில் சம்மந்தப்பட்டவர் உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் விசாரணை வலை அங்கும் விரியும். சுவிஸ் நாட்டில் மட்டுமல்ல லண்டன் பிரான்ஸ் ஜெர்மன் கனடா என பாசக்கயிறு வீசப்படும். காலமாற்றதின் போது மட்டும் வந்து கூடிப்பிரியும் கூளக்கடாக்கள் கூட காதோடு காதாக பல உண்மைகளை கக்கித் திரிகின்றன. கல் ஏறி விழுந்தால் கலையும் காகங்கள் விசாரணை வந்தால் ? அற்ற குளத்து பறவைகள் வேறு என்ன செய்ய முடியும் ? தப்பி பிழைக்கவே செய்யும். தாம் தப்ப செய்ய சொன்னவரை காட்டிக் கொடுக்கும்.

தராக்கி, நடேசன் இருவரும் புலியடி பயணிகள். எழுத்தை ஆயுதமாக ஆகியவர்கள். அதை வைத்து புலியிசத்தை வளர்த்தவர்கள். பத்திரிகையாளர் என்ற போர்வை போர்த்திய புலிகள். ஆனால் அவர்களின் கொலைகளை நியாயப்படுத்த முடியாது. அவர்கள் துப்பாக்கிகளால் தண்டிக்க படவேண்டியவர்கள் அல்ல. சந்தர்ப்ப சூழ்நிலைகள், தம் இருப்பை தக்க வைத்தல் என்பன அவர்களை புலியடி பயணிகளாக மாற்றி இருக்கலாம். தராக்கி சிவராம் ஆரம்பகால புளட்டின் ஓரத்துநாடு (தஞ்சாவூர் ) சித்திரவதை முகாமின் சூத்திரதாரி. நடேசன் வடக்கு கிழக்கு மாகாண சபை தகவல் திணைக்காள இயக்குனர்.

இருவருமே பத்திரிகையாளர் என்ற போர்வையில் பல பாதக செயல்களுக்கு துணை போனவர்கள். தான் வளர்ந்த முகாமின் தோழர்களால் மாதிவல பகுதியில் உடலமாக போடப்பட்டவர் சிவராம். முன்பு தான் போற்றி புகழ்ந்த யுத்த நாயகரின் கட்டளைப்படி வாவிக் கரையில் சுடப்பட்டவர் நடேசன். இவர்கள் வினை விதைத்து வினை அறுத்தாலும் கொலை கொலை தான். நீதியின் முன் கொலையாளிகள் நிறுத்தப்பட வேண்டும். அதற்க்கான காலம், வசதி, வாய்ப்பு வரும் போது அதை நாம் பயன் படுத்த வேண்டும்.

எனது நீண்ட பயணத்தில் நான் தேடும் ஆதாரங்கள் என்னால் ஆவணப்படுத்தப் பட்டு சாட்சியமாக வைக்கப்படும். காரைநகரில் மட்டுமல்ல கதிர்காமத்திலும் உண்மை அறிந்தவர் இருக்கிறார்கள். நெடுந்தீவு முதல் வடக்கு கிழக்கு மட்டுமல்ல, தெற்கும் உண்மைகளை வெளிக்கொண்டு வரும். விடுதலைப் போர் என்ற பெயரில் சில சுயநல தலைமைகளின் செயலால் தலை குனிந்த எம் ஈழ தமிழ் இனம் தலை நிமிர நாம் இனியாவது இந்த புலியடி பயணிகளை, புலியிசத்தை வரித்து கொண்டவர்களை தோலுரித்து காட்ட வேண்டும். என்னைப் பொறுத்தவரை, கொண்ட கொள்கைக்காய் போராடி மரணித்த, அங்க அவயங்களை இழந்த அனைத்துப் போராளிகளும் போற்றப்பட வேண்டியவர்கள்.

அவர்கள் அனைவரும் மாவீரர் தான். அவர்களுக்கு மாலையிட்டு தீபம் ஏற்ற முடியாவிட்டாலும் எம் மனதில் ஒரு நிமிட அஞ்சலி தினமும் அவர்களுக்கு என்றும் உண்டு. ஆனால் அவர்களை பலிக்கடா ஆக்கி இன்று தம் சுயநல கும்பலுடன் பவனி வரும் அத்தனை புல்லுரிவிகளும் அம்பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே என் நோக்கம். எம் மக்களிடம் கொள்ளையடித்த, கொலை செய்த, பணத்துக்காக எம்மவரை கடத்தியவர், எம் இனத்தின் தலைமை தங்கள் தான் என் கூறும் நிலைமை மாறுவதற்கு, வரும் சர்வதேச/ உள்ளக விசாரணை தரும் சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும். உண்மைகளை உரத்துச் சொல்வோம் எம் இனத்தின் நன்மை கருதி.

– விரைவில் பல அம்பலங்கள் அரங்கேறும் –