ஜெனீவா பயணங்கள்……..!

(சாகரன்)

இப்போது எல்லாம் ஜெனிவாவிற்கு பயணமாதல் என்பது 1970 களில் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக பயணமானார் என்று தினகரன் பத்திரிகையில் வரும் விளம்பரச் செய்திகள் போல் ஆகிவிட்டது. இலங்கை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அரசியல் உரிமை மறுப்புக்கள் என்பனவற்றிற்கு தீர்வைப் பெறும் நடவடிக்கைக்காக பயணம் என்பதை விட ஒரு வகையில் பிரபல்யம் தேடும், பொழுதுபோக்கும் செயற்பாடுகளை ஒத்ததாகவே இப் பயணங்கள் அமைகின்றன என்பது வருத்தத்திற்குரியது. இலங்கையில் நடைபெற்றது இனப்பாகுபாடும், இதனைத் தொடர்ந்த இன ஒழிப்பும் என்பதை நிரூபிக்கும் ஆதாரங்களுக்கு நாம் 1958 தொடக்கம் நடைபெற்று வந்த கலவரம் தொடக்கம் இறுதியாக நடைபெற்ற 1983 வரையிலான கலவரங்கள் வரை ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவவதன் மூலமே இலங்கையில் தமிழ் பேசும் சிறுபான்மையின் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாக பாகுபடுதப்பட்டார்கள், இதனைத் தொடர்ந்து இல்லாமல் செய்வதற்கான செயற்பாடுகளில் பேரினவாத அரசுகள் முயன்றன என்பதை நிரூபிக்க முடியும். கூடவே தமிழ் பேசும் மக்களுக்கான தொடர்சியான பாரம்பரிய பிரதேசம் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் இல்லாது ஒழிக்கப்டுவதையும், உரிமைகள் வழங்குவதில் பெரும்பான்மை மக்களை முதன்மைப்படுத்தி பாகுபாடுகள் காட்டப்பட்டு வருவதையும் புள்ளிவிபரங்களுடன் காட்ட வேண்டும். இதற்கு பலம் சேர்க்க மட்டும் பிரபல்யப்படுத்தப்பட்ட முள்ளிவாய்கால் படுகொலையை சேர்க்கலாம். மாறாக முள்ளிவாய்காலில் மட்டும் தொங்கி நின்றால் யுத்தம் இருதரப்பினரால் புரியப்பட்ட போது மரணங்கள் நிகழும் என்ற கோதாவில் இன ஒழிப்பு, இனப்பாகுபாடு என்பவை அடிபட்டே போகும். மேலும் புலிகளை அழித்து இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர இலங்கை அரசிற்கு அமெரிக்கா உட்பட சர்வதேசமும் அன்று பக்க பலமாக இருந்த நிலையில் பக்க பலமாக நின்றவர்களே இந்த யுத்தம் இனப்பாகுபாட்டின் அடிப்படையில் நடாத்தப்பட்டது என்பதில் ஒத்துவருவார்களா? அல்லது இதனைத் சீர்தூக்கிப் பார்பார்களா? என்பது ஐயமே. எனவே 60 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் அரசாங்கங்கள் நடாத்திய திட்டமிட்ட கலவரங்களையும், சலுகை மறுப்புக்களையும், உரிமை மறுப்புக்களையும், எழுதப்பட்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப் பட்டதையும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துச் செல்லுங்கள் வெற்றி எமதே. மாறாக உசுப்பேத்த அல்லது பழிவாங்க மட்டும் முள்ளிவாய்காலை மட்டும் தூக்கிபிடித்தால் ஜெனிவா பயணம் 2009 ம் ஆண்டு மே மாதத்தில் புலம்பெயர் தேசம் எங்கும் பிரபாகரன் படத்துடனும், புலிக் கொடியுடனும் வீதிகளில் மக்களை இறக்கி கூச்சல் இட்டும் பிரபாகரனக் காப்பாற்ற முடியாமல் போனது போலவே அமைந்து விடும். பிரபாகரனை நேசித்தவர்களின் வலி என்பதை விட இலங்கையில் வாழும் உரிமை மறுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் உரிமை முக்கியமானது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.