டக்ளஸ் கருணா எதிர்காலம் என்ன ? பகுதி 3

(மாதவன் சஞ்சயன்)

டக்ளஸ் கருணா இடையே பல ஒற்றுமைகள் காணப்பட்டாலும் அவர்கள் ஒன்றாக இணைந்து செயல்ப்பட முடியவில்லை. காரணம் டக்ளசின் குணாம்சம். யாருடன் இணைந்தாலும் நான் தான் தலைவன் என்ற போக்கு. கூட்டமைப்பில் தான் இருந்திருந்தால் நான் தான் தலைமை ஏற்றிருப்பேன் என அடிக்கடி பீத்திக்கொள்வார். தன்னை சுற்றி ஒரு கூட்டத்தை வைத்து சுப்ரபாதம் கேட்டு சுகம் காண்பவர். பிரேமதாச முதல் மகிந்தவரையும் இன்று மைத்திரியுடனும் அவர்களின் மகுடிக்கு ஏற்றவாறு நடந்து கொள்பவர். கருணா போராளி மட்டுமல்ல பல களங்களை கண்டவர், முன்னின்று நடத்தியவர். எனது ஜயசிக்குறு வெற்றிக்கு இவர்தான் காரணம் என பத்திரிகையாளர் மாநாட்டில் பிரபாகரனால் பாராட்டப்பட்டவர். இன்று தான் இருக்கும் கட்சியையே சிங்கள பேரினவாத கட்சி என பேட்டி கொடுக்கும் தைரியம் கொண்டவர். கிழக்கின் அபிவிருத்தியில் இயக்கத்தில் இருந்த போதும் பின் அரசில் இணைந்த போதும் அக்கறைப்பட்டவர். இயக்ககாலத்தில் ஆயித்தியமலையில் அவர் அமைத்த அரிசி ஆலை வன்னிப் புலியை வியக்கவைத்தது.

அரசில் இணைந்து அவர் செய்த செயலில் மட்டக்களப்பு நகருக்கு உன்னிச்சை குள நீரை வவுண தீவில் சுத்திகரித்து அனுப்பும் செயல் மிகவும் பாராட்டத்தக்கது. நீரேரிகளால் பிரிக்கப்பட்டிருந்த படுவான்கரை பிரதேசத்தை வலையிறவு பாலம் முதல் பல பாலங்களால் எழுவான் கரையுடன் இணைத்தமை அவரது முயற்சியால் நடந்தவை. இத்தனை செய்தவர் இயக்க காலத்தில் கதறக் கதற தம் பிள்ளைகளை பிடித்து சென்றவர் என்பதையும் மக்கள் மறக்கவில்லை.

கிழக்கில் கருணாவுக்கு போட்டியாக பிள்ளையான் செயல்பட்டது போல் வடக்கில் டக்ளசுக்கு எதிராக அல்ல அனுசரணையாகவே அசோக் செயல்ப்பட்டார். டக்ளஸ் பல வருடங்கள் அமைச்சராக இருந்தும் தான் சாதித்ததாக பட்டியல் இட முடிந்தது அறிவியல் நகரை மட்டுமே. அச்சுவேலி முதல் காங்கேசன்துறை பரந்தன் ஆனையிறவு வரை அவர் தொட்டதெல்லாம் அரை குறையாகவே இருகின்றது. பசிலின் கடைக்கண் பார்வை கிடைக்காததால் தான் அத்திவாரம் இட்ட இடத்தில் மீண்டும் நரேந்திர மோடி கல்வைத்த காட்சியை நிச்சயம் பார்த்திருப்பார்.

தொட்ட எல்லாவற்றிலும் தன் கட்சிக்கு வரவு என்ன என பார்த்தது மணல் முதல் கஸ்தூரியார் வீதி வண்ணான் குளம் கட்டிட தொகுதி வரை கை நீண்டதால் இணக்க அரசியல் செய்தவர் மக்களின் எதிர்ப்பை சம்பாதித்தார். மகேஸ்வரி பேரில் நிதியம் வரவு. யோகேஸ்வரி மேயர் கூட்டிலும் வரவு. முடிவு 3 ஐ எதிர்பார்த்து இறுதியில் தன்னையாவது தக்கவைக்க வேண்டிய நிலை. 20வது திருத்தம் தொகுதிவாரி தேர்தல் என்றால் பரவலாக கிடைத்த 30 ஆயிரம் எப்படி ஒரு இடத்தில் சேரும் என்ற நிலை புதிய பூதம்..

அமைச்சராக இருந்த போது பனை அபிவிருத்தி சபை முதல் பல்கலை கழகம் வரை ஆளுமை செலுத்தி அது பறிபோனதும் அனைத்தும் கைமாறியது. காரணம் தகுதி அடிப்படை பேணப்படாமை. இங்கு சந்திரகுமாரின் செயல் பற்றி தேசம் நெற் ஜெயபாலன் பேட்டியை குறிப்பிடவேண்டும். தாம் ஆரம்பித்த நிறுவனம் சம்மந்தமாக அவர் செயல்பட்ட விதம் இனி எந்த அரசு வந்தாலும் நின்று நிலைக்கும் படி பொது நோக்கில் செய்தார் என்றார். நல்லூர் தேர் திருவிழா போன என் மனைவி கைத்தொலை பேசியில் கூறிய விடயம் நல்லூர் முன் வீதியில் இருந்த டக்ளஸின் சப்பற உயர கட்டவுட்டை காணவில்லையாம்.

யாழின் சந்தி ஒழுங்கை எல்லாம் வடக்கின் வசந்தம் டக்ளசின் படமாக காட்சிப்படுத்தப்பட பயனாளிகளை விசாரித்தால் பெருமூச்சே பதிலாக வந்தது. கட்டவுட் வைத்த காசுக்கு கறவை மாடு தந்திருந்தால் பால் வித்து பிழைத்திருக்கும் சனம். கோழிக் கூடு வாங்கிய சனம், வீரசிங்கம் மண்டபத்தில் வேலை நியமன பத்திரம் பெற்றவர்கள் என பயனாளிகள் நன்றியுடன் தொகுதிக்கு 2 ஆயிரம், தீவகத்தில் 3 ஆயிரம் சந்திரகுமாரின் 6 ஆயிரம் என ஒரு அமைச்சர், ஒரு குழுக்களின் தலைவர், ஒரு எம் பி பெற்ற மொத்தம் 30 ஆயிரம் அவரை தக்கவைத்தது.

நாட்டின் நிரந்தர ஜனாதிபதி மகிந்த தான் என்ற நினைப்பில் தேசியப்பட்டியல் எம்பியாக தொடரலாம் என்ற கருணாவின் கனவு கலைந்து விட்டது. மகிந்த துதி பாடியதால் தான் மட்டக்களப்பு அவரின் வெற்றிலையை போடவில்லை. இம்முறை வெற்றிலை போட்ட பிள்ளையானையும் மட்டக்களப்பு ஏற்க்கவில்லை. கிழக்கு மாகாண சபையில் தன் கட்சியில் வென்ற பிள்ளையான் வெற்றிலையில் தோற்றார். இது கருணாவுக்கு படிப்பினை. மீண்டுவர அவரை கூட்டமைப்பு ஏற்க்கவேண்டும்.

மாறாக அவர் தனி வழி போக பெருநிதி தேவை. கூடவே பிரதேசவாதம். காரணம் யாழ் தலைமை மீது கடும் விசனத்தில் இருக்கின்றனர் தோற்ற கிழக்கின் வேட்பாளர்கள். செல்வராஜாவுக்கு கிடக்கவேண்டியதை துரைராஜசிங்கத்துக்கு கொடுத்து மாவை செய்த செயல். விலத்தி போகும் எண்ணம் இளைஞர் மத்தியில் துளிர்விட தொடங்கி விட்டது. கிழக்கின் தனித்துவத்தை பேண கிழக்கு மாகாண சபை முதல் அனைத்தும் தம் சுயவிருப்பில் இயங்க வேண்டும் என்பது அருண் தம்பிமுத்து உட்பட பலரின் விருப்பம்.

வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி வடக்கு காட்டும் அக்கறை கிழக்கில் இல்லை. தாம் ஒன்றுபட்டால் கிழக்கு மாகாண சபை அதிகாரத்தை கைப்பற்றலாம் என்ற நம்பிக்கை காணப்படுகிறது. மாகாண மட்டத்தில் பிரதேசவாதம் வேலைசெய்யும் வெல்லலாம் என நம்புகிறனர். கிழக்கில் அவ்வாறு ஒரு கூட்டு அமையுமானால் தமிழரசு கட்சியின் தலைமை சவாலுக்கு உட்படும். கருணா பிள்ளையான் அருண் தம்பிமுத்து உட்பட மண்ணின் மைந்தர்கள் ஒரு கூட்டில் வருவதற்கான வேலை பட்டிருப்பு தொகுதியில் தொடங்கி விட்டது.

தமிழரசு கட்சியால் கழட்டிவிடப்பட்ட செல்லையா ராஜதுரை போலவே புலிகளால் கருணாவும் கழட்டி விடப்பட்டதாகவே நம்பவைக்க படுகிறது. சாம் தம்பிமுத்துவை தோற்க்கடிக்கவே 1989 ல் மட்டக்களப்பில் அமிர்தலிங்கம் போட்டியிட்டதை அருண் தம்பிமுத்து அறிவார். யாழில் தோற்ற அங்கஜனுக்கு தேசிய பட்டியல் கொடுத்து தனக்கு தரவில்லை என்ற ஆதங்கம் பிள்ளையானுக்கு உண்டு. வடக்கை முன்னிலைப் படுத்திய இந்த செயல் நல்லாட்சியில் ஒரு கரும் புள்ளி என குறைப்பட்டு தாம் ஒன்று பட மண்ணின் மைந்தர்கள் முயல்கின்றனர்.

மாவை மீதான வெறுப்பு, தோற்றவர்களின் ஆதங்கம், புதியவர்களின் அரசியல் ஆசை, தனித்துவம் பேண நினைப்பவர் முன் முயற்சி என கிழக்கில் ஒரு பலமான கூட்டணி அமையும் முயற்சி சாத்திய மாகலாம். காரணம் இன்றுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வித்திட்ட தராக்கி சிவராம் மட்டக்களப்பின் மைந்தன். கொக்கட்டிச் சோலையில் கரிகாலன் மூலம் தான் பிரபாகரனின் அனுமதி பெறப்பட்டது. இன்று பிரபாகரன் இல்லை. எனவே கிழக்கு சுயமாக முடிவு எடுக்கலாம்.

தன் முயற்சியில் சோர்வடையாத டக்ளஸ் மந்திரி பதவிக்கு மைத்திரியிடம் நேரடியாகவும் தன் தொடர்புகள் ஊடாகவும் முயன்று கொண்டே இருப்பார். கூட்டமைப்பு எதிர்த்தாலும் உள்ளிருக்கும் சித்தார்த்தன் ஆதரிப்பார். நல்லவேளை பிரேமசந்திரன் வெல்லவில்லை. டக்ளஸ் மந்திரி என்றால் மைத்திரிக்கு தன் அம்மணத்தை காட்டி மயங்கி விழ செய்திருப்பார். இது வரை கட்சி தலைவர் என்பதால் முன்வரிசை ஆசனம் அவருக்கு நிச்சயம். மந்திரி பதவி கிடைக்காவிட்டால் பூவரசு பூக்காதது தொடக்கம் கத்தரி காய்க்காதது வரை கூட்டமைப்பு தான் காரணம் என அறிக்கை விடுவார். – தொடரும் –

(மாதவன் சஞ்சயன்)