சரவணபவன் எம்.பியும் அவரது உதயன் பத்திரிகையும்

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் ‘சப்றா பினான்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கிய நிதி நிறுவனம் இந்த சரவணபவனுக்குச் சொந்தமானது. அந்த நிறுவனம் அதி கூடுதலான வட்டி தருகிறோம் என்று சொல்லி, யாழ்ப்பாண மக்களின் கோடிக்கணக்கான ரூபா பணத்தை தனது நிதி நிறுவனத்தில் வைப்புச் செய்யும்படி கவர்ச்சிகரமான பிரச்சாரத்தில் இறங்கியது. அதை நம்பிய யாழ் குடாநாட்டு மக்கள், தமது பிற்கால சீவியத்திற்காக வைத்திருந்த பணம், தமது பிள்ளைகளின் சீதனத்துக்காக வைத்திருந்த பணம் என எல்லாவற்றையும் சப்றா ஃபினான்ஸில் வைப்புச் செய்தனர்.

ஆனால் அந்த நிறுவனம் திடீரென ஒருநாள் வட பகுதி தமிழ் மக்கள் வைப்புச் செய்த கோடிக்கணக்கான பணத்தை வாரிச் சுருட்டிக்கொண்டு, காரியாலயத்தையும் இழுத்து மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டது. பணத்தை இழந்த மக்கள் தலையிலடித்துக்கொண்டு வீதி வீதியாகக் கதறியதுதான் மிச்சம். இந்த பெரும் மோசடியால் அதிர்ச்சியடைந்த சிலா மரணத்தையும் தழுவிக் கொண்டனர். அந்த நிறுவனத்தின் பிரதான நிர்வாகியான சரவணபவனும் மக்களின் கண்களில் படாமல் எங்கோ ஒளிந்து கொண்டார். அவரை ‘இன்டர் போல்’ என்ற சர்வதேச பொலிஸ் நிறுவனம் இந்த நிதி மோசடிக்காகத் தேடுவதாக மக்கள் பேசிக்கொண்டாலும் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.

ஆனால் இந்த நிதியில் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்ட உதயன் பத்திரிகை தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தது. அப்பத்திரிகை பொய்ப்பிரச்சாரங்கள் செய்து மக்களைச் சுரண்டி பணம் பண்ணியது மட்டுமின்றி, சப்றா பற்றி கதைத்தவர்களையும், பத்திரிகை பற்றி விமர்சனம் செய்தவர்களையும் அச்சுறுத்துவதற்கு புலிகள் இயக்கத்தைக் கேடயமாகவும் பயன்படுத்திக் கொண்டது.

ஆனால் இன்றைவரை அந்த நிறுவனத்தில் பணம்; வைப்புச் செய்தவர்களுக்கு, அந்த நிறுவனத்தை நடாத்திய சரவணபவன் எம்.பி உட்பட எவராலும் எந்தவித நிவாரணமும் வழங்கப்படவில்லை. அரசாங்கமும் இதுபற்றி தொடர்ந்து அக்கறையற்றே இருந்து வருகிறது. சரவணபவனும் ஒன்றும் நடக்காதது போல பின்னர் வெளியே வந்து மக்கள் முன் தோன்றியதுமல்லாமல், தமிழ் கூட்டமைப்பின் டிக்கட் பெற்று தன்னிடமுள்ள பண பலத்தாலும், பத்திரிகை பலத்தாலும் பாராளுமன்ற உறுப்பினராகவும் ஆகிக் கொண்டார். இன்று யாராவது சப்றா பண மோசடி விவகாரத்தைக் கிளப்பினால், தனது பாராளுமன்ற சிறப்புரிமையை அஸ்திரமாகப் பாவித்து தப்பித்துக் கொள்வாரோ என்னமோ?

(Jehan Pathmanathan)