தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [3]

ஸ்டாலின் அண்ணா மோட்டார் எறிகணை தொழில்நுட்பம் பற்றிய அறிவை, அது சம்மந்தமான ஆங்கில புத்தகங்களை வாசித்தே தெரிந்து கொண்டார். அதில் தனக்கு தோன்றிய யுக்திகளையும் பயன்படுத்தி, எமக்கு தேவையான விதத்தில் அதனை வடிவமைத்தார். ஒருமுறை மேலெழுந்து நீண்டதூரம் சென்று இலக்கை அடைந்த பின் வீழ்ந்து, ஏற்படும் அதிர்வில் வெடிக்கும் வகையில் வடிவமைத்த மோட்டார், பரீட்சாத்தத்தின் போது, ஈடு செய்ய முடியாத உயிர் இழப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீனத்தில் பயிற்சிபெற்ற தோழர் ராஜன் அவர்கள், பரீட்சாத்தத்தில் ஈடுபட்டவேளை மோட்டார் செல், பரல் உள்ளே வெடித்ததால், மிகப்பெரிய இரும்பு துண்டு, அவர் வயிற்றை பிளந்து உயிர் பிரிந்தது. அந்த உன்னதமான தோழர் உயிர் பிரியும் வேளையிலும் கூறியது, இயக்கத்தை கட்டுக்கோப்பாக நடத்துங்கள், தோழர் நாபாவின் கரங்களை பலப்படுத்துங்கள் என்பதே.

காரணம் அப்போது இயக்கத்துள் கருத்து முரண், முளைவிட தொடங்கியமை. பெரும் அதிர்ச்சியில் உறைந்தாலும் ஸ்டாலின் அண்ணா, மோட்டார் தொழில் நுட்பத்தை மெருகேற்றும் முயற்சியை கைவிடவில்லை. பல்கலை, தொழில்நுட்ப, விஞ்ஞான படிப்பின் பின்னர் ஏவப்படும் ரொக்கட்டுகளே வானில் வெடித்து சிதறும் உலக செய்திகளை அறிந்த நாம், ஆங்கில அறிவை மட்டும் வைத்து புத்தகங்களை வாசித்து, கிரகித்து, செயல்பட்ட, ஸ்டாலின் அண்ணா என்கின்ற சாமானியரின் சாதனையை திடமாக நம்பினோம். அதனை சாதித்தும் காட்டினார் ஸ்டாலின் அண்ணா. ஈழ விடுதலை போராட்டத்தில் தன் சொந்த தயாரிப்பான மோட்டார் எறிகணைகளை, முதன் முதல் பாவித்த இயக்கம் என்ற பெருமையை, ஈ பி ஆர் எல் எப் க்கு கிடைக்க செய்தவர் ஸ்டாலின் அண்ணா.

போராட்ட ஆரம்பகாலத்தில் கடல் வலய பாதுகாப்பில், இலங்கை கடல் படை பெரும் ஈடுபாடு காட்டவில்லை. ஆனால் இந்தியாவில் ஆயுத பயிற்சி நடக்கும் செய்தி கசிந்ததும், அதுபற்றி கவனத்தில் கொண்டு மீன்பிடி தடை வலயம் உட்பட கடல் ரோந்துகளை அதிகரித்தது. அப்போது எம்மவரிடம் கலிபர்30, கலிபர்40, கலிபர் 50 என நீண்ட தூர சுடுதிறன் கொண்ட இயந்திர துப்பாக்கிகள் இருக்கவில்லை. பயிற்சி முடித்தவர் திரும்பி செல்லும்போது ஏற்படக்கூடிய ஆபத்தை உணர்ந்த அண்ணா, புதிய தொழில் நுட்பம் ஒன்றை புகுத்தினார். அதுவரை மேலெழுந்து பின் நிலத்தில் வீழ்ந்தபின் வெடிக்கும் தொழில் நுட்பத்துக்கு பதிலாக, படகில் பொருத்தக்கூடிய நீண்டதூரம் சென்று, இடையில் வெடிக்கும் தொழில் நுட்பத்தை வெற்றிகரமாக உட்புகுத்தினார். அப்போது தோழர்கள் இனி கடலில் வல்லிபுர கோவில் வான வேடிக்கை தான் என பூரித்துப்போனார்கள். தூரத்தில் கறுப்பு புள்ளியாக நேவி போட் தெரிந்தால், கடலில் வான வேடிக்கை தொடங்கிவிடும். ஆபத்தை உணரும் கடல்படை நெருங்கி வருவதில்லை.

யாழ் கோட்டைக்குள் முடக்கப்பட்ட சிங்கள ராணுவத்திற்கு எங்கள் போராட்ட நியாயத்தை விளக்க அண்ணா ஒரு யுக்தி கண்டுபிடித்தார். ஏவப்படும் கணைகள் கோட்டைக்குள் விழுந்து வெடித்ததும், அதனுள் இருக்கும் துண்டு பிரசுரங்கள் சிதறவேண்டும் என்பதே அந்த திட்டம். அதன்படி எம்முடன் பயிற்சியில் இணைந்த தென் இலங்கை நேச சக்தியான, தயான் ஜயதிலக தலைமையில் இயங்கிய P R F [People’s Revolutionary Force ] தோழர்களான கமல், பியல், சிறில், சாந்த, ஜோ போன்றவர்களின் ஒத்துழைப்பில் துண்டுப்பிரசுரங்கள், சிங்கள மொழியில் அச்சிடப்பட்டு அவற்றை எறிகணை குண்டுகளுக்குள் வைத்து, யாழ் கோட்டை முகாமுக்குள் ஏவினர். அதில் முக்கிய வாசகம் ‘’நாம் எம் மக்களை காக்க, அவர்கள் வாழும் மண்ணை பாதுகாக்க போராடுகிறோம். நீங்கள் கூலிக்கு மாரடிக்கிறீர்கள். உங்கள் இழப்பு உங்கள் உறவுகளை பாதிக்கும். எங்கள் இழப்பு எம் உறவுகளை, அவர்தம் உரிமைகளை பாதுகாக்கும். சிந்தியுங்கள் சகோதர்களே! எம்மை மோதவிட்ட பேரினவாதம், குளிரூட்டிய அறையில் குதூகலித்து இருக்க, நீங்களும், நாங்களும் கொட்டும் மழையில், சுட்டெரிக்கும் வெயிலில், துப்பாக்கி ரவைகளும், மோட்டார் குண்டுகளும் எம் உடலை முத்தமிடும் யுத்தகளத்தில்’’. ஸ்டாலின் அண்ணாவின் இந்த யுக்தி, எதிரிக்கு ஒரு உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும் போர் தந்திரோபாயம்.

ஒரு தடவை நான் கும்பகோணம் சென்றவேளை அண்ணா என்னிடம் கள நிலைமைகளை கேட்டறிந்தார். மோட்டார் தாக்குதலால் ராணுவம் முகாங்களுக்குள் முடக்கப்பட்டாலும் பெல் ஹெலிகப்டர்கள் ஏற்படுத்தும் தாக்கத்தை பற்றி விபரித்தபோது, அண்ணா யோசனையில் இறங்கிவிட்டார். அன்று மாலை ஆயுத சாலை சென்றபோது, அண்ணா மோட்டார் உற்பத்தி பட்டறையில் இருந்த ஏனையவர்களுடன், புதிய தொழில்நுட்பம் பற்றி விபரித்துக் கொண்டிருந்தார். ஹெலிகள் வரும்போது ஒரே நேரத்தில் 4 அல்லது 5 எறிகணைகள் மேலெழுந்து வெடித்தால், அது நேரடியாக SAM 7 போல ஹெலியை தாக்காவிட்டாலும் ஏற்படும் அதிர்வால், வான்வெளியில் ஏற்படும் அமுக்கம் ஹெலியின் பறப்பை நிலைகுலைய செய்யும் யுக்திதான் அது. ஸ்டாலின் அண்ணாவின் சிந்தனை, செயல் அனைத்துக்கும் செயல்வடிவம் கொடுக்க கூடிய நிதிவசதி இயக்கத்திடம் இருக்கவில்லை. இருந்திருந்தால் அண்ணாவின் அறிவு, விடாமுயற்சி, இதயசுத்தியுடனான அர்ப்பணிப்பு எம்மை ஆயுதரீதியாகவும் முன்னிலைப்படுத்தி, எமது இலக்கை இலகுவில் அடையவைத்திருக்கும்.
இந்த உண்மையை புளட் இயக்க தலைவர் அமரர் உமா மகேஸ்வரன் என்னிடம் உறுதிப்படுத்தினார். அமரர் அண்ணன் அமிர்தலிங்கம் படுகொலை செய்யப்பட்ட போது அவரது கொழும்பு பொரளை புலர்ஸ் வீதி இல்லத்துக்கு அஞ்சலி செலுத்தவந்தவரை, முதன் முதல் சந்திக்கவும் கலந்துரையாடவும் எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அப்போது உமா என்னிடம் உங்களுக்கு கிடைத்த ஸ்டாலின் அண்ணா எனக்கு கிடைத்திருந்தால், நாம் இப்போது தமிழ் ஈழத்தில் இருந்திருப்போம். என்னிடம் நூற்றுக்கணக்கான பயிற்சி முடித்த போராளிகள் இருந்தார்கள், போதிய நிதிவசதியும் இருந்தது ஆனால் நான் தருவித்த ஆயுத கப்பலை இந்தியா மடக்கி ஆயுதங்களை பறித்துவிட்டது. என்னிடம் இருந்த நிதியில் ஸ்டாலின் அண்ணாவை கொண்டே எமக்கு தேவையான அனைத்தையும் செய்து இலக்கை அடைந்திருப்பேன் என ஆதங்கப்பட்டார். ‘’கற்றாரை கற்றார் காமுறுவர்’’

[ நீட்சி – தொடர் 4ல் ]

(ராம்)