மீண்டும் இனவாத சலசலப்புகள்!

சிறுபான்மையின மக்கள் மீது சிங்கள மக்கள் விரோதம் கொள்ளும்படியான இனவாதம் நாட்டில் விதைக்கப்பட்டமை கடந்த ஆட்சிக்காலத்திலேயே ஆகும். உள்நாட்டுப் போர் மிகத் தீவிரமடைந்திருந்த பத்து வருடத்துக்கு முற்பட்ட காலப் பகுதியில் பெரும்பான்மையின மக்களின் உள்ளங்களில் சிறுபான்மையினங்கள் மீதான விரோதம் மேலோங்கியிருந்த போதிலும், நாட்டில் திட்டமிட்ட முறையிலான இனவாத முன்னெடுப்புகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டது கிடையாது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஜனாதிபதியாக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற காலம் தொடக்கமே இனவாத செயற்பாடு என்பது ஒரு நிகழ்ச்சித் திட்டமாகவே ஆகிப் போனது.

இலங்கையில் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் கட்சிகளும் பௌத்த அமைப்புகளும் தோற்றம் பெறத் தொடங்கியதும் 2005 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலப் பகுதியிலேயே ஆகும். இனவாத அமைப்புகளின் நிகழ்ச்சித் திட்டங்கள் ஏராளம். சிறுபான்மை மக்களை எவ்விதம் ஒடுக்கலாமென்பதில் அரசுக்கு ஆலோசனை வழங்குபவையாகவும் அவ்வமைப்புகள் இருந்தன. சுருங்கக் கூறுவதானால் அரசாங்கத்தின் பின்புலமாகவிருந்து செல்லப்பிள்ளைகளாக பௌத்த இனவாத அமைப்புகள் அன்றைய வேளையில் துணிச்சலுடன் செயற்பட்டன என்பதே உண்மை.

முஸ்லிம்களின் வர்த்தகத்தை வீழ்த்துவது; அவர்களது மத அடையாளங்களை இல்லாதொழிப்பது; பிரதேச ரீதியில் முஸ்லிம்களின் விகிதாசாரத்தைக் குறைப்பது; அவர்களது எதிரிகளாக சிங்கள மக்களை உருவாக்கிக் கொள்வது……

இவையெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனவாத சக்திகள் அவ்வேளையில் முன்னெடுத்து வந்த திட்டங்களாகும்.

தமிழ் மக்களுக்கு எதிராகவும் இதேவிதமான கைங்கரியங்களே முன்னெடுக்கப்பட்டன. வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ்ப் பிரதேசங்களில் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தைக் குறைக்கும் நோக்கில் சிங்கள மக்களை திட்டமிட்டுக் குடியேற்றுவது; இந்து ஆலயங்கள் கூடுதலாகவுள்ள பிரதேசங்களில் புத்தர் பெருமானின் சிலைகளை வைத்து பெளத்த மதத் தலங்களை அமைத்தல், இந்து ஆலயங்களை அகற்றுதல் போன்றனவெல்லாம் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னைய ஆட்சிக் காலத்தில் இனவாதிகள் முன்னெடுத்த செயற்பாடுகளாகும்.

இவ்வாறான செயற்பாடுகளின் தொடர்ச்சியாகவே தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிராக நாட்டில் ஆங்காங்கே சிறியளவிலும் பாரியளவிலும் வன் செயல்களும் கட்டவிழ்த்து விடப்பட்டன. அளுத்கமை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்செயலை இதற்கொரு உதாரணமாகக் கூற முடியும்.

சிறுபான்மையினங்களுக்கு எதிரான விரோதம் நாட்டில் வளர்த்தெடுக்கப்பட்ட போதிலும் இனவாதிகளின் உண்மையான இலக்கு முஸ்லிம்களாவர். முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகளும் பிரசாரங்களுமே அன்றைய காலத்தில் பிரதானமாக முன்னெடுக்கப்பட்டன. முஸ்லிம்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வெளியே நடமாட முடியாதபடியாகவே முன்னைய ஆட்சிக்காலம் இருந்தது.

முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத அமைப்புகள் எவையென்பது பற்றியோ அவ்வமைப்புகளின் பலம் பொருந்திய காவலர்களாக செயற்பட்டோர் யாரென்பது பற்றியோ இங்கு குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது. இனவாத அமைப்புகள் பகிரங்கமாக இயங்கிய போதிலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு அன்றைய அரசு முன்வராத காரணத்தை வைத்து நோக்குவோமானால் அன்றைய பின்புல சக்தி எதுவென்பதை இலகுவாகவே ஊகித்துக் கொள்ள முடியும்.

கடந்த வருடம் ஜனவரியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்தே இவ்வாறான நெருக்குதல்களிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு விடிவு ஏற்பட்டது. இனவாதம் குறித்த அச்சத்திலிருந்து அவர்கள் மீண்டுகொண்டனர். ஒருவருட காலம் இவ்வாறான நிம்மதியான சூழல் தொடர்ந்ததையடுத்து நாட்டில் மீண்டும் இப்போது இனவாத சலசலப்புகள் உருவாகியிருக்கின்றன. முஸ்லிம் மக்களே இப்போதும் இலக்காகியிருக்கிறார்கள்.

வில்பத்து விவகாரம் ஒருவாறு தணிந்து போயிருக்கிறது. அதன் பின்னர் பௌத்த இனவாத அமைப்பொன்றின் முக்கியஸ்தர்கள் சிலர் ஐ.எஸ். தீவிரவாத புரளியைக் கிளப்பி விட்டுள்ளனர். ஐ.எஸ். தீவிரவாதிகள் இலங்கையிலும் தாக்குதல்களை மேற்கொள்ளக்கூடுமென அவர்கள் அவ்வப்போது எச்சரிக்கை செய்த வண்ணமுள்ளனர். இது ஒருபுறமிருக்க தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ மற்றொரு தகவலை சில தினங்களுக்கு முன்னர் கூறியிருக்கிறார். சிங்கள – முஸ்லிம் கலவரமொன்றுக்கு அரசாங்கம் திட்டமிடுவதாகக் கூறியிருக்கிறார் வீரவன்ஸ.

சிங்கள மக்களை மருட்சிக்கு உள்ளாக்கும் பரபரப்புத் தகவல்களை வெளியிடுவதில் கைதேர்ந்தவர் விமல் வீரவன்ஸ. அவரது தகவல்களில் உண்மைத்தன்மையைக் காண முடியாத போதிலும் மக்களுக்கு அத்தகவல்கள் உண்மையிலேயே சுவாரஸ்யத்தை ஊட்டுவதுண்டு.

சிங்கள – முஸ்லிம் கலவரம் தொடர்பான எச்சரிக்கையானது தற்போது அவரிடமிருந்து வெளிப்படுவதற்கான காரணம் உண்மையிலேயே ஆராயப்பட வேண்டியதாகும். முன்னைய ஆட்சிக் காலத்தில் நிலவியதைப் போன்று முஸ்லிம்களுக்கு விரோதமான சூழலொன்றை வலிந்து உருவாக்குவதற்கு மறைமுக முயற்சி நடைபெறுகிறதா? இத்தகைய திட்டத்தின் மூலம் அரசு மீது முஸ்லிம்கள் விரோதம் கொள்வதற்கான தந்திரம் கையாளப்படுகின்றதா? சிங்கள மக்களைத் தூண்டி விட்டு அரசு மீது பழியைப் போடுவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா?

இவ்வாறான வினாக்கள் இன்றைய வேளையில் இயல்பாகவே எழுகின்றன.
(Thinakaran)