முருக்கு பெருத்து தூணுக்கு உதவுமா? அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கல்லவா!

தங்களின் மூன்று அம்ச கோரிக்கைகள் பற்றி கலந்துரையாட பேரவை தலைவர், அமைச்சர்கள் உறுப்பினர்கள் உட்பட 24 பேர் கையொப்பமிட்டு அனுப்பிய கடிதத்தில், அவர்கள் ஏற்புடையதாக தெரிவு செய்த 20-01-2016 திகதி அன்றே மாலை 5 மணிக்கு நேரம் ஒதுக்கிய முதல்வர், இரவு 8 மணிவரை தனது காரியாலய கேட்போர் கூடத்தில் நடத்திய கலந்துரையாடலின் முடிவு, சுமுகமாக முடிந்தமை ஒரு சிலரது உள்நோக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.

1. வினைத்திறன் உள்ள மாகாண சபை செயன்முறை 2. தமிழ் தேசிய கூட்டமைப்பாக செயல்படல் 3. அதிகாரபகிர்வு விடயத்தில் மாகாணசபையின் பங்கு பற்றுதல் என்ற அந்த மூன்று விடயங்கள் பற்றி முதல்வருடன் கலந்தாலோசிக்க தீர்மானித்த 24 பேரின் கோரிக்கையை ஏற்பதா? இல்லையா? என்ற முடிவை எடுக்கு முன்பே, அதனை எதிர்த்து சிலர் “கதகளி” ஆடத்தொடங்கி விட்டனர். மாகாண சபை உறுப்பினர்களுக்கான சுவிற்சலாந்து, தென்னாபிரிக்க பிரதிநிதிகளின் கலந்துரையாடலின் பின்பே மாகாண சபை உறுப்பினர்கள் கூடி பேச முற்பட்டுள்ளனர்.

அதன்போது உறுப்பினர்களுக்கு அழைப்புவிடுக்க இக்கலந்துரையாடல் முடிந்த பின் கூட்டமைப்பு ஆளும்தரப்பு உறுப்பினர்கள் கூடி பேசவுள்ளதால் தவறாது சமூகம் தரவும், என எழுதிய குறிப்பு சகல உறுப்பினர்களுக்கும் கைமாறி சென்றுள்ளது. அந்த குறிப்பு சர்வேஸ்வரன் கைக்கு சென்றபோது அதை அவர் அனந்திக்கு கைமாற்றி உள்ளார். அதை பார்த்த அனந்தி அதில் கையொப்பம் இல்லை என்பதால் இது என்ன மொட்டை கடிதம் போல் இருப்பதாக கூறியுள்ளார்.

பின்னர் நடந்த ஒன்றுகூடலில் அனந்தி, சர்வேஸ்வரன், சிவாஜிலிங்கம் கலந்து கொள்ளவில்லை. விந்தன் கனகரட்ணம் அவரது தந்தையாரின் மறைவால் நெடுந்தீவு சென்றாதல் அவரும் சில உறுப்பினர்களும் கலந்துகொள்ள முடியவில்லை. அமைச்சர் ஐங்கரநேசன் கொழும்பில் இருந்ததால் அமைச்சர்கள் எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தருவதாக தெரிவித்திருந்தார். மிகுதியான பேரவை தலைவர், அமைச்சர்கள், மற்றும் உறுப்பினர்கள் ஒன்று கூடி ஒருமித்த முடிவு எடுத்தனர்.

தங்கள் முடிவைப்பற்றி முதல்வருடன் கலந்துரையாட நேரம் ஒதுக்குமாறு கேட்டு எழுதிய கடிதத்தில் கையொப்பம் இடுமாறு எனைய உறுப்பினர்களிடம் கேட்டபோது சீறிப்பாய்ந்த ஒரு உறுப்பினர் அந்த செய்தியை தான் சேரும் இடம் சேர்ப்பித்தார். மறுநாள் “மொட்டை கடிதத்தில் கையெழுத்து முயற்சி” என கொட்டை எழுத்தில் பிரதான தலைப்பிட்டு பத்திரிகை செய்தி வந்தது. மேலும் மாகாண சபை உறுப்பினர் சிலரின் தூண்டுதலுக்கு ஏனைய உறுப்பினர்கள் மறுப்பு, என்ற பரம ரகசியத்தையும் துப்பறிந்து தெரிவித்தது.

பேரவை தலைவர், அமைச்சர்கள் சக உறுப்பினர்கள் கையொப்பம்மிட்ட கோரிக்கை கடிதத்தில் நீங்களும் ஒப்பமிடுகிறீர்களா? என்றே அந்த கலாநிதியிடம் தொலைபேசி மூலம் கேட்கப்பட்டது. சிறு குறிப்பில் வந்த செய்தியில் கையொப்பம் இல்லை என்பதால் அதை மொட்டைகடிதம் என அனந்தி கூறியது சரி என்றால் 24 பேர் கையொப்பம் இட்ட கடிதம் எப்படி மொட்டை கடிதமாகும்? 30 கூட்டமைப்பு உறுப்பினர்களில் 24 பேர் கையொப்பம் இட்டபின் அது எப்படி சிலரின் தூண்டுதலும் பலரின் மறுப்புமாகும்?

மக்களால் மதிக்கப்படும் முதல்வரை வஞ்சக புகழ்ச்சியால் மட்டுமல்ல சிண்டு முடியும் செயலாலும் சிறுமை படுத்த முயலும் இவர்களின் செயல், முதல்வர் அவர்களினால் உறுப்பினர்களின் வினயமான வேண்டுகோளை ஏற்று அனுப்பிய பதில் கடிதத்திலும் பிரதிபலித்தது. இந்த தட்டச்சு செய்யப்பட்ட கடிதம் 19-01-2016 என திகதியிடப்பட்டு பின் 19ஐ 20 என திகதியை பேனாவால் திருத்தி உள்ளனர். எனவே 18-01-2016 திகதியிடப்பட்ட கடிதம் கிடைத்த உடன் முதல்வர் உறுப்பினர்களை சந்திக்க முடிவு எடுத்துள்ளார்.

ஆனால் கடிதத் திகதி மாற்றம் இது முதல்வரின் முதல் முடிவுப்படி எழுதப்பட்டதா? அல்லது மறைகரங்கள் முதல்வரின் மனதை குழப்பி அதில் புதுவிடயங்களை புகுத்திய பின் அனுப்பபட்டதா? என்ற நியாமான சந்தேகத்தை முதல்வர் பற்றி அறிந்த பலருக்கும் ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதம் முதல்வரின் தரத்துக்கு ஏற்புடையதாக இல்லாமல் ஒரு சிலரின் செயலான சிண்டு முடியும் நோக்கில் எழுதப்பட்டது போலவே பலரால் பார்க்கப்பட்டது. அந்த கடிதத்தில் பின் வருபவன இடைசெருகலாக இருக்கலாம் எனவும் எண்ணத்தோன்றுகிறது.

“11-01-2016 ந் திகதிய கூட்டத்தில் கௌரவ பேரவைத்தலைவர் மற்றும் கௌரவ அமைச்சர்களை இணைத்து கொள்வது என்று தீர்மானம் என்முன் எடுக்கப்படவில்லை. அமைச்சர்களை பற்றி குறை கூறவே இக்கூட்டங்களை தொடங்கிவிட்டு, வேறு தீர்மானங்களை சிலர் பின்னர் எடுத்திருப்பதை அவதானிக்கிறேன்” என கடிதத்தின் இரண்டாம் பந்தியில் கூறி இருக்கும் விடயம் முதல்வரின் சிந்தையில் உதித்ததா இல்லை சிண்டு முடிபவர்களின் சிறுமதியில் உதித்ததா என்ற சந்தேகம் எழுகிறது.

காரணம் அமைச்சர்களுக்கு உறுப்பினர்களுக்கும் பகைமூட்டும் செயலை முதல்வர் செய்ய மாட்டார். அது அவர் தகுதி தராதரத்துக்கு ஏற்றதல்ல. அதற்கு அவர் பழக்கப்பட்டவரும் அல்ல. ஆனால் முதல்வரை சினக்கப்பண்ணி அவர் பின் மாயக்கரமாய் செயல்பட்டு இவ்வாறு எழுதினால் நான்கு அமைச்சர்களும் உறுப்பினர்களுடன் மல்லுக்கட்டுவார்கள் என புதுக்கணக்கு போட்ட புருசோத்தமரினதோ அல்லது அண்ணன் காட்டிய வழியம்மா என அமைச்சர் கனவுடன் அரசியலுக்கு வந்த தம்பியின் செயலாகவோ இது இருக்கலாம் என்ற பலரின் சந்தேகம் நியாமானதே.

மேலும் அந்த கடிதத்தில் “கிளிநொச்சி கூட்டத்தின் நிமித்தமோ என்னவோ 20ந் திகதியே கூட்டத்துக்கு நேரம் ஒதுக்கித்தருமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றுமாலை 5 மணிக்கு மேற்படி தொடர் கூட்டத்தை நியமித்துள்ளேன்” என்ற வரிகள் சற்று நெருடலாக உள்ளது. கிளிநொச்சியில் இடம்பெறும் கூட்டத்தில் முதல்வர் செயல் பற்றிய பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் தான் நான் அறிந்த வரை உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் கனவிலும் மலம் கிளறும் காக்கைகள் போன்ற செயலை புரியும் சிலர்தான் முதல்வரின் இந்த வரிகளுக்கும் சொந்தக்காரராய் இருப்பர் போலும்.

தங்கள் உள்ளத்து ஆசையை நிறைவேற்ற உறுப்பினர்களை அமைச்சர் பதவிக்கு ஆசைப்படுபவர்களாக, மக்கள் விரோதிகளாக எழுதி, முதல்வரின் காப்பரண் நானே என கூறி சங்கூதும் செயல் செய்பவர், அது அமைச்சர்பதவி கேட்டு முதல்வருடன் முரண்டுபிடித்தவரின் தம்பியின் தீராகனவு என்பதால் ஒட்டி உறவாடியாவது அதை பெற்றுவிட அவர் முதல்வருக்கு பரிவட்டம் கட்டுகிறார் என்பதையும், பாதிக்கபட்ட பெண்கள் சார்பாக எனக்கே அமைச்சுபதவி என எதிர்பார்தவரும் தங்கள் கூட்டில் என்பதையும், எண்ணிப்பார்த்து கண்ணாடி வீட்டு கல்லை எறியவேண்டும்.

இத்தனை இடைஞ்சல்களுக்கு மத்தியில் அகப்பட்ட முதல்வர் நிலைதடுமாறாது உறுப்பினர்களின் வினயமான வேண்டுகோளை ஏற்று, அவர்கள் கேட்ட 20ம் திகதியே நேரம் ஒதுக்கி கலந்துரையாடிய அந்த நிகழ்விலும் கதகளி ஆடிய கலாநிதி, ஏனைய உறுப்பினர் தங்கள் கருத்துகளை முதல்வர் முன் தெரிவிக்க முயன்ற போது குறுக்கிட்டு, தேவையற்ற விடயங்களை பேசி கூட்டத்தை எப்படியாவது குழப்பி முதல்வர் உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கு சாதகமான பதில் கொடுக்க கூடாதென்ற நிலைபாட்டில் இருந்துள்ளார். அனந்தியும் தன்பங்கிற்கு இவர்கள் என்னவாவது கூறட்டும் நீங்கள் மக்கள் முதல்வர் என செயல்படுங்கள் என திருவாய் மலர்ந்தார்.

எத்தனை இடர்கள் வந்தபோதும் எதிர்வரும் 26-01-2016 மாகாணசபை அமர்வில் அரசியல் தீர்வு குழு அமைத்தல் எனும் தீர்மானத்தை நிறைவேற்றி, அந்த குழுவின் தலைவராக தான் செயல்படுவேன் என்ற தீர்க்கமான தன் முடிவை முதல்வர் தெரிவித்து, நாங்கள் கூட்டமைப்பாகவே செயல்படுவோம் பேரவை அழைத்தபோது நிபந்தனை விதித்தே நான் சென்றேன், நான் நிலை தடுமாறுகிறேன் என்பது அவரவர் ஊகத்தில் வரும் வதந்திகள், நாம் அடம்பன் கொடியாக திரண்டு எம்மக்கள் துயர்துடைப்போம் என் உறுதிபட கூறியது புல்லுக்கு பாச்ச திருடமுற்படும் நீரை நெல்லுக்கு தான் பாய்ச்சுவேன் எனும் முதல்வரின் செயல் பெருமக்கள் பெருமக்களே! என்பதை புல்லுரிவிகளுக்கு நிச்சயம் புரியவைக்கும்.
(மாதவன் சஞ்சயன்)