அழியாத கோலங்கள் -2.’ பற்றிய விகடனின் பார்வையில் கூறப்படும் குறைகள் சிலவற்றை தாண்டியும்

“பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டப்படுவதும், கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது, அற்புதமாக இருக்கிறது…”

விகடனின் பார்வை…..

தன் எழுத்துக்குக் காரணமான நாயகியை 24 ஆண்டுகளுக்குப் பிறகு காணச் செல்லும் எழுத்தாளருக்கு நேரும் சம்பவங்களின் குவியல்தான் இந்த ‘அழியாத கோலங்கள் -2.’

தான் எழுதிய நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர் கௌரிசங்கர், சென்னையில் உள்ள தன் கல்லூரிக் காலத்துக் காதலி மோகனாவைப் பார்க்கச் செல்கிறார். இருவருக்குள்ளும் பேச ஆயிரம் கதைகளும், 24 மணி நேரமும் இருக்கின்றன. ஆனால், அன்றிரவு நடக்கும் ஓர் அசம்பாவிதத்தால் மோகனா இந்தச் சமூகத்தால் கேள்விக்குள்ளாக்கப்படுகிறாள். மோகனாவை அச்சூழலிலிருந்து யார் மீட்டெடுக்கிறார்கள் என்பதைக் கவித்துவமாக வரைகிறது இந்த அழியாத கோலங்கள்.

எழுத்தாளர் கௌரிசங்கராக பிரகாஷ்ராஜ். நெற்றி வியர்வை உணர்த்தும் சமிக்ஞையிலிருந்து, படுக்கையில் வீழ்வது வரை மனிதர் தான் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை உணர்த்துகிறார். கௌரிசங்கரின் மனைவி சீதாவாக ரேவதி, கணவருக்காகவே வாழும் கதாபாத்திரம். முதல் காட்சியிலிருந்து இறுதிவரை படத்தைத் தாங்கி நிற்கும் மோகனா கதாபாத்திரத்தில் அர்ச்சனா. எல்லாம் முடிந்து வாழ்வின் விளம்பில் எந்த சுவாரஸ்யமுமின்றிக் காத்திருக்கும் ஒருவருக்கு, தான் எல்லாமுமாய் நேசித்த ஒருவரின் வருகை எவ்வளவு மகிழ்ச்சியைத் தரும். அதை அப்படியே திரையில் கடத்துகிறார் அர்ச்சனா. சில இடங்களில் வெளிப்படுத்தும் அந்த மிகை நடிப்பை அர்ச்சனா குறைத்திருக்கலாம். போலீஸ் அதிகாரியாக நாசர். கச்சிதமாக நடித்திருக்கிறார்.

பள்ளிக் காதல், பதின்பருவத்துக் காதல், கல்யாணத்துக்குப் பின் காதல் என பார்த்துப்பழகிய கண்களுக்கு, நாற்பது ப்ளஸ் வயதினரின் காதலை, எவ்வித முகச்சுளிவும் ஏற்படாதவாறு இலக்கியமாய்ப் பளிங்குபோல் காட்டியதற்கு இயக்குநர் எம்.ஆர். பாரதிக்கு வாழ்த்துகள். கௌரிசங்கரும், மோகனாவும் பேசிக்கொள்வதும், கதையின் பிற்பகுதியில் சீதாவும் மோகனாவும் பேசிக்கொள்வதும் தெளிந்த நீரோடையில் ஓர் இலை மெல்ல மிதப்பதைப் போல் அவ்வளவு அழகாய் இருக்கிறது.

வங்க மொழியில் வெளியான சௌமிக் மித்ராவின் கதையை அழியாத கோலங்களாக எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குநர், ஆனால், அதில் கடக்க முடியாத பக்கங்களாய் அத்தனை லாஜிக் மீறல்கள். எட்டு மாடிக்கு ஓடிச் சென்று வாட்ச் மேனை எழுப்புவது முதல் கேமரா இல்லாமலேயே சுற்றிக் கொண்டிருக்கும் செய்தியாளர்கள் வரை அத்தனை செயற்கைகள். ராஜேஷ் நாயரின் ஒளிப்பதிவோ, காசி விஸ்வநாதனின் படத்தொகுப்போ படத்துக்கு எந்தவிதத்திலும் துணைநிற்கவில்லை. படத்தின் பெரும்பகுதியைக் காப்பாற்றுவது அனுபவமிக்க நடிகர்கள்தாம். மற்றவர்கள் வரும் காட்சிகள் அனைத்தும் ஏதோ மேடை நாடகம் போல் திரைமொழியற்று ஏமாற்றமளிக்கின்றன.

ஓர் ஆத்மார்த்தமான கதையை இன்னும் சிரத்தையோடு எடுத்திருந்தால், என்றென்றைக்கும் அழியாத கோலங்களாய் நிலைத்திருக்கும்.!