கனவுகள் மெய்ப்படுமா?

‘மது இல்லாத மலையகம்’ காலம்காலமாய் எமக்குள் நீளும் ஓர் எதிர்பார்ப்பு. போதைப்பொருள் பாவனையும் மதுப்பாவனையும் மலையக வளர்ச்சிக்கு இன்றுவரை பெரும் முட்டுக்கட்டைகளாகத் திகழ்கின்றன. உலகம் பருக தேநீர் தரும் மலையகம், தன்னால் தானே புதைவதற்கு மதுவையும் ஏற்கிறது.

மலையகம் முன்னேற இன்னும் காலம் தேவை என்பது, பெரும்பாலானோரின் கருத்து. மலையகம், தன் வளர்ச்சி பற்றி மற்றவர்களுக்குத் தக்க பதில் வழங்க இயலாமைக்கு, இந்தப் போதைப்பழக்கமும் காரணமாகவே அமைகிறது.

சட்ட ரீதியாக இயங்கும் மதுபானசாலைகள் இன்றைய தொற்று நோய் பரவல், ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டாலும், மலையகப் பகுதிகளில் தயாராகும் காய்ச்சி வடிக்கப்பட்ட சாராயம் எனும் ‘கசிப்பு’ உற்பத்தியையும் பெரும்பாலும் காணமுடிகின்றது.

அடிமைப்படுத்தப்படுகிறோம் என்று ஒருசாரார் குமுறிக் கொண்டிருக்கும் காலத்தில், மதுப்பழக்கத்திற்கு அடிமையானதிலிருந்து மீள முடியாமல் பல்வேறு ஆபத்துகளையும் பொருட்படுத்தாமல் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களும், ஒருபுறம் இருக்கத் தான் செய்கிறார்கள்.

மரக்கறி விலைகளின் அதிகரிப்பின் போது அங்கலாய்த்துக்கொள்பவர்கள், ஒருபோதும் வீட்டுக்கொரு வீட்டுத்தோட்டத்தின் அவசியத்தை உணர்வதில்லை. ஆனால், மதுபானசாலைகள் மூடப்படும் போது, சுயமாகவே அதை உற்பத்தி செய்வது பற்றி சிந்திக்கிறார்கள் அல்லவா? வேரோடு வெட்டி வீழ்த்திவிட முடியாத ஒரு பிரச்சினைதான் இது. ஆனால், இந்தப் போதைப்பழக்கம் அடிப்படை தேவையொன்றல்ல என்பது மட்டுமே உண்மை.

அரசியல்வாதிகளின் தலையீடும் மதுபான விற்பனையில் உண்டு என்ற கருத்தும் மலையகத்தில் நிலவுகின்றது. ஆனால், தனது குடும்பத்தின் தேவை பற்றியும் தனது உடல் சார்ந்த அக்கறை பற்றியும் சிந்திக்கும் எந்த ஓர் ஆணுக்கும் இதர சக்திகளின் தலையீடு இரண்டாம்பட்சம்தான்.

இன்று மலையக நகரங்களில் மதுபான கடைகளில் சிலருக்கு கணக்கும் பேணப்படுவதாக தெரிகிறது. வேதனப்பற்றாக்குறையில் வாடும் ஒரு குடும்பத்தலைவன் எவ்வாறு மதுபான கடைகளில் மட்டும் தனக்கென ஒரு கணக்கைப் பேணுகிறார் என்பதைப் பற்றிச் சிந்திக்கும்போது, மலையகத்தின் விடிவு நோக்கிய எதிர்பார்ப்புகளும் சிதைந்து போகின்றன.

சாராயம், கள், கசிப்பு, புகையிலை என்று பட்டியலிடும் மலையக போதைப்பொருள் கலாசாரத்துடன், இன்றைய இளைஞர்களால் கஞ்சாவும் ஹெரோயினும் இணைத்து எடுத்துச் செல்லப்படுகின்றன.

பாடசாலை காலங்களிலேயே சிகரெட் பாவனையை தொடங்கி விடுவதால், மதுப் பழக்கத்துக்கு அடிமையாவதும் இலகுவானதொன்றே! கல்வியை இடைவிட்டு, நகர்ப்பகுதி நாடி வேலைக்குச் செல்வதால்,தேவையான சுதந்திரத்தையும் அவர்களால் பெறமுடிகின்றது. பெற்றோர் விழித்துக்கொள்வதற்கு முன்னர் இளைய சமுதாயத்தினர் போதை வலைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள்.

கிராமிய பூஜை முறைகளிலும் மதுவுக்கு இடமுண்டு என்பதால், மதுப்பழக்கம் தவறு என்பதைக்கூட அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டு வன்முறை தொடங்கி, வீணான சண்டை சச்சரவுகளையும் மதுப்பழக்கம் ஏற்படுத்தி விடுகின்றது.

உடல் சோர்வுக்காய் தினமும் மதுக் குடிப்பது அவசியம் என்கிறார்கள் மதுப் பிரியர்கள். “உடலுக்கு இயற்கையாக அற்ககோல் தேவை; அதனால் மது அவசியம்” என்றும் ஆண் என்பவன் போதைப் பழக்கத்தை ஒரு தடவையாவது அனுபவிக்க வேண்டுமென்றும் அவர்கள் தமது தவறை நியாயப்படுத்துகிறார்கள். இந்தச் சந்தர்ப்பங்களின்போது, கோபத்தையும் தாண்டி, அவர்கள் மீது ஒருவித பரிதாபமே எழுகிறது.

பெண்கள், ஆண்கள் என்ற பாகுபாடின்றி வெற்றிலை, புகையிலை மெல்லும் பழக்கமும் மலையகத்தில் அதிகமாகவே காணப்படுகின்றது. இன்று மலையகத்தில் வாய்ப் புற்றுநோய் அதிகரித்ததற்கான காரணமும் இதுதான். போதைப் பொருள் சார்ந்த நோய்கள் குறித்தான தெளிவும் மலையக மக்களிடம் குறைவே!

நுரையீரல் புற்றுநோய், ஈரல் நோய், கல்லீரலின் செயற்பாடு குறைதல், சுவாசக் கோளாறுகள் என எந்த நோயால் சாகிறோம் என்று கூடத் தெரியாமல் மரணிக்கும் எத்தனை நபர்களை இன்று நாம் காண்கிறோம். சொற்ப சுகத்துக்காக முழுக் குடும்பத்தின் எதிர்காலம் பற்றிக்கூட, அவர்கள் சிந்திக்க மறந்து விடுகிறார்கள்.

போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் பாரிய நோய்களில் இருந்து மீள்வதென்பது கடினமான விடயமே! மேலும், பாரிய நோய்களுக்கும் புற்றுநோய்க்கும் உரிய சிகிச்சைகளை பெறுவது சவாலான விடயமாகவே அமைகிறது.

போதிய வசதியின்மை, நகர்ப்பகுதி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறவேண்டிய நிலைமை, நோய் அறிகுறி பற்றிய போதிய தெளிவின்மை காரணமாக இறக்கும் நோயாளிகளும் ஏராளம். இவர்கள் குடும்பத்தின் எதிர்காலத்தை வீதியில் விட்டுச் செல்கிறார்கள் என்பதுதான் கவலை.

குடும்ப வறுமையில் செலவுகளை ஈடுசெய்ய முடியாமல், தான் பெற்ற பிள்ளைகளையே பாடசாலை இடைவிலக்கி வேலைக்கு அனுப்பும் பெற்றோர்கள், என்றுமே வறுமையைக் காரணம்காட்டி குடிப்பழக்கத்தையும் வெற்றிலை பழக்கத்தையும் விடுவதில்லை.

நகர் பகுதி மக்களைக் காட்டிலும் மந்த போசணை அதிகம் உடையவர்கள் மலையகத்தவர்கள். போதைப்பொருளுக்காய் செலவழிக்கும் ஒரு தொகை பணத்தை குறைந்தது சிறந்த உணவை உட்கொள்ளவாவது பயன்படுத்தும்போது உங்கள் சந்ததிகளும் வலுப் பெறுகின்றன என்பதை உணருங்கள்.

பெரும்பாலும், மலையக நகரங்களில் குறைந்தது ஐந்து மதுபானசாலைகளாவது காணமுடிகிறது. வெற்றிலை, சிகரெட், மது என்று எல்லா போதைப்பொருட்களும் தோட்ட பகுதியிலேயே விற்பனையும் செய்யப்படுகின்றன. ஆனால், குறைந்தது ஒரு புத்தக விற்பனை நிலையமாவது நகர்ப்பகுதிகளில் காணப்படுகின்றதா என்று எண்ணிப் பாருங்கள். போதைப் பொருள் பாவனையற்ற எத்தனையோ பேர் மலையகத்தில் வாழத்தான் செய்கிறார்கள். அவர்களும் உடல் வருத்தி உழைப்பவர்கள் தான்! ஆனால், உலக நடப்பு உணர்ந்தவர்கள். அதுதான் அவர்களை வளமாக வாழ வழிசமைக்கிறது.

நாகரிகம் என்ற போர்வையில் போதைப் பொருட்களை பயன்படுத்தும் இளையோர்களும் இன்று அதிகம். வளர்ச்சி அடைந்த சமூகமும் நாடும் இதைக் கடைபிடிப்பது தவறல்ல. ஆனால் fashion என்ற போர்வையில் சீரழியும் மலையக இளைஞர்கள், அப்படி என்ன சாதித்து விட்டார்கள் என்பதை மீட்டுப் பார்க்க வேண்டும். அடிப்படை தேவைகளுக்குக்கூட, அனுசரணை நாடி நிற்கும் சமூகம் நம் சமூகம். மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில் வாழ்வியலில் நாகரிகமாக வாழ்கிறோமா என்று சிந்தித்துவிட்டு மதுப்பழக்கத்தை நாகரிகம் ஆக்கிக்கொள்ளுங்கள்; மலையகத்தின் வளர்ச்சியை, மதுவைத் தீர்மானிக்க விடாதீர்கள்.