75 ரூபாய்

வண்டியிலிருந்து இறங்கும் முன்னே “வாங்க தம்பி, நல்லா இருக்கீங்களா!” எனக் கேட்பார் அந்த அண்ணன்.

இன்றுவரை அவரது பெயர் என்ன என்று எனக்குத் தெரியாது தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. நட்புக்கும் பெயருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு.

அவர் ஜூஸ் பிழிவதற்கு 5 நிமிடம் ஆகும் அதை நான் குடிப்பதற்கு 5 நிமிடம் ஆகும் ஆனால் அரை மணி நேரம் அவருடன் பேசி இருந்துவிட்டு தான் செல்வேன்.

சிலநாட்களில் இஸ்லாத்தைப் பற்றி பேசுவார் சில நாட்களில் அரசியல் பேசுவார் சில நாட்களில் மனிதர்களைப் பற்றிப் பேசுவார் சில நாட்களில் மௌனமாக இருப்பார்.

ஒருமுறை ஜூஸ் குடித்துக் கொண்டிருந்த போது ஒரு வயதானவர் வந்தார்.

அவர் கை நீட்டி யாசகம் கேட்பதற்கு முன்பே ஒரு ஐந்து ரூபாயை எடுத்து அவர் கையில் கொடுத்தேன் வாங்கிக்கொண்டு நகர்ந்தார்.

இப்போது அந்தப் பெரியவரை பாய் அழைத்தார் ஒரு பழச்சாறு பிழிந்து கொடுத்து அந்த முதியவரின் கதையை கேட்டார்.

அந்த முதியவர் சென்றபிறகு “எல்லா மதமும் அன்பதான தம்பி போதிக்குது அப்புறம் எப்படி பிள்ளைங்க பெத்தவங்கள ரோட்டில விட்டுறாங்க” என ஆதங்கப்பட்டார்.

ஒருமுறை கூடையில் வெள்ளரிப் பிஞ்சுகளை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

“என்னணே தொழில மாத்திட்டீங்க” என்றேன்.

“சீசனுக்கு சீசன் வியாபாரம்தான் மாறுது எங்க வாழ்க்கை மாறவே இல்லையே” என்று சிரித்துக் கொண்டே வெள்ளரிப் பிஞ்சுகளை கவரில் கட்டி கூடவே உப்பு மிளகாய் பொடி கொடுத்தார்.

ஒரு நாள் ஜூஸ் கடைக்கு சென்றேன் இருவரும் ஏதேதோ ஊர் கதைகளை பேசிவிட்டு ஜூஸ் குடித்தேன். நூறு ரூபாய் தாளை நீட்டினேன்.

சில்லறையை தேடிவிட்டு “சில்லறை இல்ல தம்பி திரும்பி வரப்ப வாங்கிக்கங்க” என்றார்.

“சரிணே” என நானும் கிளம்பிவிட்டேன்.

மாலை திரும்பி வரும்போது அவர் கடை பூட்டப்பட்டு இருந்தது. தள்ளுவண்டி கடைக்கு ஏது பூட்டு தார்ப்பாய் வைத்து இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் பிறகு நான் வெளியூர் சென்று விட்டதால் அவரை பார்க்க வாய்ப்பில்லாமல் போனது.

சமீபத்தில் மீண்டும் வேளாங்கண்ணி தாண்டி பயணிக்கும்போது ஜூஸ் கடை பக்கம் வண்டி ஒதுங்கியது.

சாறு பிழியும் இடத்தில் ஒரு பெண்மணி அவர் மனைவியாக இருப்பார் என யூகித்துக் கொண்டு

“அண்ணன் இல்லையா” என்றேன்

“அண்ணன் செத்து ரெண்டு மாசம் ஆச்சு தம்பி” என சொல்லி கண்களைத் துடைத்துக் கொண்டாள் அந்த தாய்.

எனக்கு பேச்சு வரவில்லை.

“நெஞ்சு வலினு ஆஸ்பத்திரி போனாரு வீட்டுக்கு பொணமாதான் திரும்பி வந்தாரு”

என் மண்டைக்குள் ஏதேதோ ஓடுகிறது, தலை சுற்றுவது போல் இருக்கிறது, நா வரண்டு விட்டது.

“ஜூஸ் குடிங்க தம்பி” என்று சாறு பிழிய தொடங்கினாள் அந்த தாய்.

“வேண்டாம்” என்று சென்று விட்டேன்.

இரவில் தூங்கும் போது உதட்டோரம் புன்னகையில் வரவேற்கும் அந்த அண்ணனின் முகம் தான்.

சில நாட்கள் பிறகு மீண்டும் ஜூஸ் கடைக்கு சென்றேன் அம்மா கையால் ஜூஸ் குடித்துவிட்டு வண்டியில் ஏறினேன்.

தம்பி என அருகில் வந்த அந்த அம்மா “இது உங்க வண்டியா?” என்று கேட்டாள்.

“ஆமாம்” என்றேன்.

“இல்ல தம்பி இந்த வண்டி நம்பரை எழுதி 75 ரூபாய் கொடுக்கணும்னு அண்ணன் எழுதி வைத்திருக்கிறார்” என 75 ரூபாயை என் பாக்கெட்டில் திணித்தாள்.

அவருக்கும் என் பெயர் தெரியாது அதனால்தான் வண்டி நம்பரை எழுதியிருக்கிறார்.

வீட்டுக்கு வந்து அந்த 75 ரூபாயை பர்ஸ்ஸில் வைக்கும்போது எந்த காலத்திலும் இந்த பணத்தை செலவிட கூடாது என்று தீர்மானித்தேன்.

(படித்ததில் பிடித்தது)