அம்பாறை மாவட்டத்தின் அரசியலுக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும்!

நாபீர் பவுண்டேசனின் தலைவர் வலியுறுத்து –

– ரி. தர்மேந்திரன் –
அரசியல் மக்களுக்கானது, சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலிகளே அரசியலில் ஈடுபட வேண்டும். நாபீர் பவுண்டேசன் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்குகின்ற பகீரத முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. எதிர்வரும் தேர்தல் எதுவாக இருப்பினும் அதில் நாபீர் பவுண்டசன் நிச்சயம் போட்டியிடும் என்று பிரபல தொழிலதிபரும், அரசியல் விமர்சகரும், இப்பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார். இவருடனான நேர்காணல் வருமாறு:-


கேள்வி:- கடந்த இரு தசாப்தங்களுக்கும் மேலாக மகத்தான மக்கள் பணிகளை ஆற்றி வருகின்ற நாபீர் பவுண்டேசனுக்கு ஏன் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டு உள்ளது?
பதில்:- அரசியல் மக்களுக்கானது. சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலிகளே அரசியலில் ஈடுபட வேண்டும். அதாவது அரசியலில் ஈடுபடுபவர்கள் நல்லவர்களாக மாத்திரம் இருந்தால் போதாது, வல்லவர்களாகவும் இருத்தல் வேண்டும். ஆனால் நாம் காண்கின்ற அரசியல்வாதிகள் நல்லவர்களாகவும் இல்லை, வல்லவர்களாகவும் இல்லை. மக்களை ஏமாற்றி சுரண்டுபவர்களாகவும், மோசடி பேர்வழிகளாகவும், பகல் கொள்ளைக்காரர்களாகவும் உள்ள அதே நேரம் ஆற்றல் அற்றவர்களாகவும் காணப்படுகின்றனர். எனவேதான் நாம் புதிய அரசியல் கலாசாரம் ஒன்றை உருவாக்க விரும்புகின்றோம்.
கேள்வி:- எவ்வாறான ஒரு வியூகத்தில் நீங்கள் மக்கள் முன்னிலையில் வர போகின்றீர்கள்?
பதில்:- மிக நீண்ட காலமாக நாட்டின் அரசியல் நடப்புகளையும், கிழக்கு மாகாணத்தின் அரசியல் போக்குகளையும் நெருக்கமாக அவதானித்து வருகின்ற நாம் எதிர்வருகின்ற தேர்தல் எதுவாக இருப்பினும் அதில் போட்டியிடுவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு எதிர்பார்த்து காத்து நிற்கின்றோம். எம்முடன் பேச்சுவார்த்தைக்கு வருமாறு உரிய காலம் வருகின்றபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு பகிரங்க அழைப்பு விடுப்போம். எமது நிபந்தனைகளை மு. கா தலைமை ஏற்று, அங்கீகரிக்கின்ற பட்சத்தில் எமது தனித்துவத்தை பேணியவாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவோம். வேறு முஸ்லிம் தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்ற யோசனையோ, இணைந்து செயற்படுகின்ற நோக்கமோ எமக்கு கிடையாது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை எம்மை அலட்சியம் செய்யுமாக இருந்தால் நாபீர் பவுண்டேசன் சுயேச்சையாக போட்டியிட உத்தேசித்து உள்ளது. உள்ளூராட்சி தேர்தலே முன்னதாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து சபைகளுக்கும் நாபீர் பவுண்டேசன் போட்டியிடும். கால ஓட்டத்தில் எமக்கென ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்து எமது அரசியல் பயணத்தை தொடர்வோம்.
கேள்வி:- எவ்வாறான நிபந்தனைகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு முன்வைக்க இருக்கின்றீர்கள்?
பதில்:- நாம் பணமோ, பதவியோ, பட்டமோ தருமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையிடம் கேட்க போவது இல்லை. சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலிகளே மு. காவின் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வேண்டும், தூய்மை அற்றவர்களும், திறமை அற்றவர்களும் நிறுத்தப்பட கூடாது என்று வலியுறுத்துவோம். வேட்பாளர்கள் தெரிவு கட்சி தலைமையூடாக அன்றி பள்ளிவாசல் நிர்வாகம் போன்றவற்றின் மூலமாகவே இடம்பெறுதல் வேண்டும் என்று வற்புறுத்துவோம்.
கேள்வி:- தூய்மையை பற்றி பேசுகின்ற நீங்கள் உண்மையில் தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியுடன் அல்லவா பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்?
பதில்:- இது ஒரு நல்ல கேள்வி. யார் இந்த தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியினர்? என்று பதிலுக்கு நான் கேட்கின்றேன். இவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் இருந்தபோது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தூய்மையானதாக இருந்ததா? என்றும் வினவுகின்றேன். பதவிகள் வழங்கப்பட்டு இருந்தபோது மு. கா தலைமைக்கு செம்பு தூக்கியவர்கள்தான் -இவர்கள். பதவிகள் வழங்கப்படவில்லை என்றவுடன்தான் வெளியில் வந்தார்கள். கட்சிக்குள் இருந்து வரங்களையும், வர பிரசாதங்களையும், வசதிகளையும், சலுகைகளையும் அனுபவித்தபோது காலம் காலமாக பேசாமடந்தைகளாக இருந்து விட்டு இப்போது வெளியில் வந்து பேசுவதில் என்ன தூய்மை இருக்கின்றது? கடந்த ஜனாதிபதி தேர்தலில் இத்தூய முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டாளர்கள் ஒரு கோடி ரூபாய் கையூட்டு பெற்று உள்ளனரே? பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த குற்றம் தொடர்பாக இப்போதுதான் பேசுகின்றனர். அப்போது ஏன் வாய் திறக்கவில்லை? அக்குற்றம் நடந்தபோது உடன் இருந்து உதவி, ஒத்தாசை வழங்கியவர்கள் இவர்கள்தானே? ஒருவரின் அந்தரங்க விடயங்களை விமர்சிக்க கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. அவ்வாறு விமர்சிக்க கூடிய அருகதை இவர்களுக்கு உள்ளதா?
அதாவுல்லாவாக இருந்தாலும் சரி, றிசாத் பதியுதீனாக இருந்தாலும் சரி அவர்களும் முஸ்லிம் காங்கிரஸை விட்டு பதவிக்காக வெளியில் வந்தவர்களே ஆவர். அவர்களுடன் பேசுவதிலும் அர்த்தம் இல்லை.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை தவிர ஏனைய முஸ்லிம் கட்சிகள் அனைத்தும் உண்மையில் சிறிய குழுக்களே ஆகும். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு மாத்திரமே இன்று பாராளுமன்றத்தில் நேரடியான முஸ்லிம் பிரதிநிதித்துவம் காணப்படுகின்றது, ஒரு எம். பி இருக்கின்றார். மேலும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தேசிய மயப்படுத்தியதும், சர்வதேச மயப்படுத்தியதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே ஆகும். வெளிநாட்டவர்களுடன் மிக நெருக்கமாக பழகுகின்ற வாய்ப்பை பெற்ற நான் இதை தனிப்பட நன்கு அறிவேன். எனவேதான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனேயே நாம் பேச வேண்டி உள்ளது.
கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தூய்மையானவர், சமுதாய பற்று உள்ளவர், பொதுநல அக்கறை உடையவர் என்று கூற வருகின்றீர்களா?
பதில்:- நிச்சயமாக இல்லை. அவர் தூய்மையானவராகவும், சமுதாய பற்று உள்ளவராகவும், பொதுநல அக்கறை உடையவராகவும் இருந்து இருந்தால் தூய்மையானவர்களையும், சமுதாய பற்று உள்ளவர்களையும், பொதுநல அக்கறை உடையவர்களையும்தான் கடந்த காலங்களில் வேட்பாளர்களாக நிறுத்தி இருப்பார். அவர் அவ்வாறு செய்யவில்லையே? ஆனால் நாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடனேயே பேச வேண்டி உள்ளது. அதை ஸ்தாபித்து வளர்த்து எடுக்க ஸ்தாபக தலைவர் அஷ்ரப் பட்ட கஷ்ட நஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் அல்ல. இன்று அக்கட்சியின் தலைவராக ஹக்கீமே உள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து பிரிந்துதான் ஏனைய முஸ்லிம் கட்சிகள் உருவாகின, உருவாகின்றன. எனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைத்தான் அடிப்படையில் திருத்த வேண்டி உள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை திருத்தினால் அனைத்தும் சரியாகி விடும் என்றும் கூறலாம்.
கேள்வி:- நீங்கள் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்தவர். கடந்த 17 வருடங்களாக அம்பாறை மாவட்டத்துக்கு அமைச்சரவை அமைச்சர் பதவி ஒன்றை வழங்காத ரவூப் ஹக்கீமை எந்த அடிப்படையில் நீங்கள் விசுவாசிக்க முடியும்?
பதில்:- இக்கேள்வியையும் நான் எதிர்பார்த்துதான் இருந்தேன். இதில் நான் ரவூப் ஹக்கீமை பிழை சொல்ல மாட்டேன். அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு இடையில் ஒற்றுமை கிடையாது. இவர்கள் பதவிகளுக்காக அடிபடுபவர்களாகவே உள்ளனர். இவர்களை பொறுத்த வரை அரசியல் ஒரு வியாபாரம். இந்த வியாபாரத்தில் ஏகபோக உரிமையை பிடித்து வைத்திருக்க இவர்கள் ஒவ்வொருவரும் விரும்புகின்றனர். அரசியல் வியாபாரத்துக்காக தேர்தல்களில் முதலீடுகளை மேற்கொள்கின்றனர். இம்முதலீடுகள் மூலமாக உச்ச பட்ச இலாபத்தை அடைய முயற்சிக்கின்றனர். மற்றப்படி மக்கள் சேவை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இவர்களுக்கு கிடையவே கிடையாது. இவர்கள் எல்லோருக்குமே அமைச்சரவை அமைச்சரவை அமைச்சர் பதவியை அடைய, அதன் வரப்பிரசாதங்களை அனுபவிக்க கொள்ளை ஆசை. இந்நிலையில் யாரை ரவூப் ஹக்கீம் அமைச்சரவை அமைச்சர் ஆக்க முடியும்? தகுதி, தகைமை, அனுபவம் இவற்றில் எதை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை அமைச்சர் பதவியை கொடுப்பார்? அமைச்சரவை அமைச்சர் பதவி கிடைக்க பெறாதவர் குழப்பவாதியாக மாறி விடுவார் என்பது உறுதி. ஆகவேதான் அமைச்சரவை அமைச்சர் பதவியை வழங்காமல் பிரதி அமைச்சர் பதவிகளை ரவூப் ஹக்கீம் வழங்கி வருகின்றார்.
இந்நிலைமையில்தான் அம்பாறை மாவட்ட அரசியலில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும், சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலிகள் மக்கள் பிரதிநிதிகள் ஆக்கப்பட வேண்டும் என்று நாம் அடித்து கூறுகின்றோம். சமுதாய பற்றும், பொதுநல அக்கறையும் உடைய திறமைசாலி அரசியல்வாதிகள் தூய்மையானவர்களாகவும், நேர்மையானவர்களாகவும், ஆற்றல் உடையவர்களாகவும் இருப்பர் என்பது திண்ணம். எனக்கு இரு வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தந்து பாருங்கள். பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான சம்பளம், படி, நிதி ஒதுக்கீடு போன்ற எதுவும் எனக்கு தேவை இல்லை. அந்த வெற்று பதவியை வைத்து கொண்டு எங்கிருந்து பணம் கொண்டு வந்து அம்பாறை மாவட்டத்தை உயர்த்துகின்றேன் என்பதை பாருங்கள். என்னை பாராளுமன்ற உறுப்பினராக எமது மக்கள் தெரிவு செய்கின்ற பட்சத்தில் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் 2000 இளையோர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவேன். எம்மிடம் திறமை, தூர நோக்கு, தீர்க்கதரிசனம் ஆகியனவும் உள்ளன. அம்பாறை மாவட்ட அரசியலுக்கு புதிய இரத்தம் பாய்ச்சப்பட வேண்டும். குறிப்பாக இளையோர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும். ஆனால் இப்போது வரை இருந்து வருகின்ற நிலையே இனியும் தொடருமானால் அம்பாறை மாவட்டம் மட்டும் அல்ல கிழக்கு மாகாணம் முழுவதுமே பேரினவாதிகளிடம் சிக்கி, சின்னாபின்னப்பட்டு, சீரழிந்து விடும் என்பதில் மாற்றம் இல்லை.
கேள்வி:- அம்பாறை மாவட்டத்தில் தமிழ் – முஸ்லிம் உறவை மேம்படுத்த எவ்விதமான நடவடிக்கைகளை மேற்கொள்வீர்கள்?
பதில்:- நாபீர் பவுண்டேசன் தமிழ் – முஸ்லிம் உறவை மேம்படுத்துகின்ற பல நடவடிக்கைகளையும், செயல் திட்டங்களையும் முன்னெடுத்துதான் வருகின்றது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு உதாரணத்தை சொல்லுகின்றேன். நாபீர் பவுண்டேசன் கடந்த இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் பொத்துவில் தொகுதிக்கான வேட்பாளராக காரைதீவை சேர்ந்த சுலக்‌ஷன் என்கிற தமிழ் இளைஞனை நிறுத்தியது. இவரை முஸ்லிம் வாக்காளர்களின் பேராதரவுடன் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக கொண்டு வந்தது. முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவு இல்லாமல் இவர் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினராக வந்திருக்க முடியாது.
எம்மொழியும் என் மொழி என்பது எனது தாரக மந்திரம் ஆகும். எனது தாய்மொழி தமிழ். ஏனைய சமயத்தவர்களை மதித்து நடக்க வேண்டும் என்று எனது புனித இஸ்லாமிய மார்க்கம் கூறுகின்றது. நான் புனித இஸ்லாமிய மார்க்கத்தை வாழ்க்கை சட்டமாக கொண்டு ஒழுகுபவன். எனவே என்னிடம் இன பேதம் கிடையாது. எனவே தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கு இடையிலான உறவு பாலத்தை என்னால் கட்டி எழுப்ப முடியும்.