அரிதாகி வரும் ஐடி ஊழியர்களின் புது வீடு கனவு: சென்னையில் விற்பனை கடும் சரிவு

ஐ.டி. துறையில், வேலைவாய்ப்பு மற்றும் சம்பள உயர்வு குறைந்து வருவதால் அத்துறை ஊழியர்கள் வீடு வாங்குவதை குறைத்துள்ளனர். இதனால் சென்னையில் புதிய வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்காவில் விசா கெடுபிடி என தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. இதனால், ஐடித்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு குறைந்து வருகிறது. முன்னணி ஐடி நிறுவனங்கள் புதிய ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதை கணிசமாக குறைத்துள்ளன.

ஐடித்துறை பாதிப்பு

டிசிஎஸ், விப்ரோ, இன்போசிஸ் உள்ளிட்டநிறுவனங்கள் கடந்த ஆண்டில், புதிய ஊழியர்களை பணிக்கு சேர்ப்பதை 35 சதவீத அளவிற்கு குறைத்துள்ளன. இதுபோலவே, கல்வி நிறுவன வளாகங்களுக்கு சென்று புதிய நபர்களை வேலைக்கு பணியமரத்தும் ‘கேம்பஸ் இண்ட்வியூ’ 23 சதவீத அளவிற்கு குறைந்துள்ளது. ஐடி நிறுவனங்களில் பணியாற்றி வரும் ஊழியர்களின் சம்பளமும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மிக அதிக சம்பளம் வழங்கும் நிறுவனங்கள் அதனை கணிசமாக குறைத்துள்ளன. அதிக சம்பளம் வழங்கப்படும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறைக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்களின் இதுபோன்ற நடவடிக்கையால், ஐடி ஊழியர்களி்ன வருவாய் கணிசமாக குறைந்துள்ளது. எனவே ஐடி ஊழியர்கள் சொந்த வீடு வாங்குவதை தள்ளி வைத்து வருகின்றனர். மற்ற பல செலவுகளுக்கு தேவை என்பதால் வீடு வாங்குவதை குறைத்து வருகின்றனர்.

ரியல் எஸ்டேட் துறையில், ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்கள் வீடு வாங்கும் திட்டத்தை கைவிட்டு விட்டனர். இதுபோலவே ஐடி நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களுகான செலவையும் கணிசமாக குறைந்துள்ளன. புதிய அலுவலக கட்டடம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளன. இதனால் செலவுகளைக் குறைக்க குறைந்த வசதியில் அலுவலகம் என்ற இலக்குடன் செயல்படுகின்றன.

விற்பனை குறைந்தது

இதுகுறித்து டிசிஎஸ் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு பிரிவு துணைத் தலைவர் அஜய் முகர்ஜி கூறுகையில் ‘‘புதிய அலுவலங்கள் கட்டுவது அல்லது வாடகைக்கு எடுப்பது என்பது தேவையை பொறுத்துமே முடிவு செய்கிறோம்’’ என்றார்.

சுந்தரம் பிஎன்பி பாரிபாஸ் வீடுக்கடன் நிதி பிரிவு நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாஸ் ஆச்சார்யா கூறுகையில் ‘சென்னை ரியல் எஸ்டேட் துறையில் ஐடி துறை சார்ந்த பங்களிப்பு 30 சதவீதம். ஐடி நிறுவனங்கள் தேவைக்கு ஏற்ப சிறிய அலுவலகங்களை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதால் புதிய கட்டடங்களின் தேவை குறைந்து வருகிறது. அதுபோவே ஐடி நிறுவனங்களில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதால் ஊழியர்கள் புதிய வீடுகளை வாங்குவதையும் கைவிட்டுள்ளனர். இதனால் சென்னையில் வீடுகள் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது’’ எனக்கூறினார்.

இதனால் சென்னையில் 2017ம் ஆண்டில் புதிய வீடு கட்டுமான திட்டங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இதுபோலவே ஐடி நிறுவனங்களுக்கான அலுவலக கட்டடங்களுக்கான தேவை 2016 இரண்டாவது காலாண்டில் 43 சதவீதமாக இருந்த நிலையில், 2017 இரண்டாவது காலாண்டில் இது, 25 சதவீதமாக குறைந்துள்ளது.

இதுகுறித்து வீடு வாங்குபவர்களுக்கான ஆலோசனை நிறுவனமான ஸ்கைலைன் நிறுவனத்தின் சஞ்சய் கூறுகையில் ‘‘ஐடி ஊழியர்களை பொறுத்தவரை மூன்று வகையாக பிரிக்கலாம். முதல் பிரிவினர் வேலைக்கு சேர்ந்த உடன் வீடு வாங்கும் 25 வயது முதல் 30 வயது வரையிலானவர்கள். தங்கள் வருவாயில் முதலில் வீடு ஒன்றை வாங்க வேண்டும் என விரும்புகின்றனர். இரண்டாவது பிரிவினர் ஐடித்துறையில் சில ஆண்டுகள் பணி புரிபவர்கள். ஏற்கெனவே வீடுள்ள நிலையில், அதற்கு பதிலாக வசதியான பெரிய வீட்டை தேடுபவர்கள். மூன்றாவதாக திருமணமான நிலையில் குடியிருக்க வீடு தேடுபவர்கள். கடந்த ஆண்டு இந்த மூன்று பிரிவினருமே வீடு வாங்குவதை குறைத்துக் கொண்டுள்ளனர்’’ எனக்கூறினார்.

வீடு விற்பனைக்கு அரசின் கொள்கை முடிவு, பொதுவான பொருளாதார சிக்கல் என பல காரணங்கள் இருந்தாலும், ஐடி துறை சரிவும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கட்டுமானத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

(தமிழில்: நெல்லை ஜெனா)

(The Hindu)