பரிணாம வளர்ச்சி ஆய்வு குறித்து அமைச்சர் சர்ச்சை கருத்து: டார்வின் கோட்பாட்டை பாடத்திட்டத்தில் இருந்து நீக்குவது சரியா?

(எம்.சண்முகம்)

ரங்கில் இருந்து மனிதன் பிறந்தானா? இதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா? ஆராய்ச்சியாளர் டார்வின் சொன்னது தவறு’ என்று ஒரு கருத்தைச் சொல்லி சர்ச்சையில் சிக்கியுள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சத்யபால் சிங். டார்வின் தெரிவித்துள்ள பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை பள்ளி பாடத்திட்டத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர், இதுகுறித்து அறிவியல் ஆய்வாளர்கள் விவாதிக்க விரும்பினால், சர்வதேச அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மாநாட்டை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையே ஏற்பாடு செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் பிறந்து 1809 முதல் 1882 வரை வாழ்ந்த உயிரியல் மற்றும் பூகோள ஆராய்ச்சியாளர் சார்லஸ் ராபர்ட் டார்வின். உயிரினத்தின் தோற்றம் மற்றும் அதன் பரிணாம வளர்ச்சி குறித்து 1859-ல் இவர் வெளியிட்ட ‘ஆன் த ஆரிஜின் ஆஃப் ஸ்பீசிஸ்’ என்ற ஆய்வறிக்கையில்தான் சர்ச்சைக்குரிய பரிணாம வளர்ச்சி குறித்த கருத்து இடம்பெற்றுள்ளது. அவரது கோட்பாட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால், உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்துக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பு உண்டு. இவை அனைத்தும் ஒரே பொதுவான உயிரினத்தில் இருந்து பரிணாம வளர்ச்சியில் காலப்போக்கில் மாற்றம் கண்டு வெவ்வேறு உயிரினங்களாக பிரிந்துள்ளன. சூழ்நிலைகளுக்கு ஏற்ப உயிரினங்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளும்போது, வடிவத்திலும் திறனிலும் மேம்பாடு அடைந்துள்ளன. இந்த வகையில் ஒரு செல் உயிரினங்களில் இருந்து மாற்றம் பெற்றவைதான் இன்றைக்கு உள்ள திறன்மிக்க சிந்திக்கும் ஆற்றல் பெற்ற உயிரினங்கள் என்பதாகும்

குரங்குடன் 95 சதவீத ஒற்றுமை

இந்த கோட்பாட்டைத்தான் மத்திய அமைச்சர் கேள்விக்குள்ளாக்கி இருக்கிறார். மேலும், எந்த ஒரு அறிவியல் ஆய்வும் 3சோதனைகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அறிவியல்பூர்வமானது என்று ஏற்றுக் கொள்ள முடியும் என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ள மூன்று சோதனைகளை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்ச்சை குறித்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவி பேராசிரியர் டாக்டர் இளங்கோவனிடம் கேட்டபோது, ‘டார்வின் வெளியிட்டுள்ள பரிணாம கோட்பாடு நீண்ட ஆய்வுக்குப் பின் வெளியிடப்பட்டு அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. பூமியில் உயிரினங்கள் 6 முதல் 7 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம். அதில், மனித இனத்துக்கான முன்னோடியாக கருதப்படும் சிம்பான்சி குரங்கு வகை ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருக்கலாம் என்பதுதான் அவரது பரிணாம கோட்பாடு. அமெரிக்காவில் உள்ள தேசிய மனித மரபணு ஆய்வு மையம் (என்எச்ஜிஆர்ஐ) சிம்பான்சி குரங்கு இனத்துக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள டிஎன்ஏ மூலக்கூறுகளை ஆய்வு செய்ததில் 95 சதவீதத்துக்கும் அதிகமான ஒற்றுமை இருப்பதை கண்டறிந்துள்ளது. மூளை செயல்பாடுகள் குறித்த டிஎன்ஏ-வில் மட்டுமே 5 சதவீத வேறுபாடு இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் டார்வின் கோட்பாட்டை நிராகரிப்பதை ஏற்க முடியாது. துருக்கியில் கடந்த ஆண்டு இதே சர்ச்சையைக் கிளப்பி, டார்வின் கோட்பாட்டை பாடத்திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளனர். அதேபோன்று, இங்கும் பாடத்திட்டத்தில் இருந்து நீக்க முயற்சிப்பது ஏற்புடையதல்ல’ என்றார்.

‘ஜிஹாத்’ பாடத்திட்டம்

டாக்டர் இளங்கோவன் குறிப்பிட்டுள்ளதுபோல், துருக்கியில் டார்வின் கோட்பாடு பள்ளிப் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அங்குள்ள ‘இமாம் ஹதீப்’ எனப்படும் மதக் கல்வி மையங்களில் ‘ஜிஹாத்’ போதிக்கப்படுகிறது. ‘ஜிஹாத்’ பாடத்திட்டம் என்பது தேசத்தை நேசித்தல் மற்றும் பாவச் செயல்களுக்கு எதிராக போரிடுதல் என்று இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதேபோன்ற ஒரு முயற்சியை மத்தியில் உள்ள பாஜக அரசு எடுக்க முயற்சிக்கிறதோ என்ற அச்சம் கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும், மத்திய அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ள ஐன்ஸ்டீனின் 3 சோதனைகள் டார்வின் கோட்பாட்டுக்கு பொருந்தாது. ஐன்ஸ்டீன் தெரிவித்துள்ள 3 சோதனைகள் ‘ஜெனரல் ரிலேட்டிவிட்டி’ எனப்படும் அவரது இயற்பியல் கோட்பாடுடன் தொடர்புடையது. அதற்கும் டார்வின் கோட்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தொடர்பில்லாத ஒன்றை குறிப்பிட்டு மத்திய அமைச்சர் தனது வாதத்துக்கு பலம் சேர்க்க முயன்றுள்ளார். அவரது பேச்சை வாதத்துக்காக ஏற்றுக் கொண்டாலும், ‘டார்வின் தியரி’ என்பது என்ன என்பதை குறிப்பிட்டாக வேண்டும். ‘தியரி’ என்ற ஆங்கில வார்த்தைக்கு பொருள் – ஒரு உண்மையை புரிந்துகொள்ள ஆய்வு நடத்தியதில் கிடைத்த விவரங்களின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் கருத்து அல்லது விளக்கம் என்பதே. உலகில் உயிரினங்கள் எப்படி உருவானது என்று கண்டுபிடிக்க டார்வின் எடுத்த முயற்சியில் அவருக்கு புலப்பட்ட தகவல்களை அவர் கருத்தாக தெரிவித்துள்ளார். அதை ஏற்றுக் கொள்பவர்களும் உண்டு. ஏற்காதவர்களும் உண்டு.

உலகை கடவுள் படைத்தார் என்பதும் ஒரு கோட்பாடுதான். இந்தக் கோட்பாட்டை ஏற்பவர்களும் உண்டு; எதிர்ப்பவர்களும் உண்டு. ‘பிக் பேங்’ எனப்படும் வெடிப்பின் மூலம் கோள்களும் அண்டவெளியில் உள்ள ‘மில்கிவே கேலக்ஸி’ உள்ளிட்ட மண்டலங்களும் உருவாயின என்பதும் ஒரு கோட்பாடுதான். இதை ஏற்பவர்களும் உண்டு; எதிர்ப்பவர்களும் உண்டு. அதேபோன்று, கோட்பாடு அளவில் உள்ள ஒரு விஷயத்தை மாணவர்கள் படிப்பதில் தவறில்லை. பாடத்திட்டத்தில் இருந்து டார்வின் கோட்பாட்டை நீக்க முயற்சிப்பது அறிவியல் ஆய்வாளர்களின் வரம்புக்குள் அரசு தலையிடும் செயலாகவே கருதப்படும்.

(The Hindu)