ஆயிரக் கணக்கில் பெண்களைக் கடத்தி விற்று கோடீஸ்வரர்களான தம்பதியர்! ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!!

(எஸ். ஹமீத்)

கடந்த பத்து ஆண்டுகளில் ஏறத்தாழ நாலாயிரம் பெண்களைக் கடத்தி காமுகர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் சுமார் ரூ.250 கோடி ரூபா பணம் சம்பாதித்த கணவனையும் மனைவியையும் டில்லி உளவுத்துறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வங்கதேசம் வழியாக வெளிநாடுகளுக்குப் பெண்கள் இரகசியமாகக் கடத்தப்பட்ட அநியாயம் பற்றிய தகவல் டில்லி உளவுத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. முதற்கட்ட விசாரணையின் மூலம் ஆந்திரா, கர்நாடகா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்தான் மிக அதிகளவில் கடத்தப்பட்டிருப்பதை உளவுத்துறையினர் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து, கடத்தல் கோஷ்டியைப் பிடிக்க நாடெங்கும் வலை விரித்துத் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது.

அந்த நேரத்தில்தான் டெல்லியைச் சேர்ந்த கணவன், மனைவியான உசேன், சாய்ரா பேகம் ஆகியோர் பெண்களைக் கடத்தும் விடயத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்திய போது, அவ்விருவரும் பெண்களைக் கடத்தி, விபசார புரோக்கர்களிடம் விற்பனை செய்வதை மிகப்பெரிய அளவில் தொழிலாகச் செய்து வந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.

கடந்த பத்து வருடங்களில் மட்டும் கிட்டத்தட்ட நாலாயிரம் இளம்பெண்களை வஞ்சகமான முறையில் ஏமாற்றி, அவர்களை நாசூக்காகக் கடத்தி விபசாரத்துக்காகத் தரகர்களிடம் அத்தம்பதியர் விற்பனை செய்து வந்தமை விசாரணையில் வெளிவந்தபோது, போலீசாரே மிக்க அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இந்திய நாட்டின் பல்வேறு இடங்களிலும் புரோக்கர்கள் மற்றும் முகவர்களை நியமனம் செய்து, ஒரு பெரிய வலைப்பின்னல் மூலம் பாவப்பட்ட, அப்பாவிப் பெண்களைக் கடத்தி விற்பனை செய்து,
ரூ.250 கோடி வரை அவர்கள் இதுவரை சம்பாதித்துள்ளமை முறையான விசாரணைகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தாம் ‘உழைத்த’ அந்தப் பணத்தைக் கொண்டு அத்தம்பதியினர் டெல்லி உள்பட பல இடங்களில் சொகுசு பங்களாக்கள் மற்றும் சொத்துகள் வாங்கியுள்ளனர்.

கணவனான உசேன் ஐதராபாத்தைச் சேர்ந்தவன். அவன் டெல்லியில் ஒரு நிறுவனத்தில் மூவாயிரம் ரூபா மாத சம்பளத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறான். சாய்ரா பேகம் உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத்தைச் சேர்ந்தவள். விபசார தொழிலில் ஈடுபட்டு வந்த சாய்ரா பேகத்தை 1999ம் ஆண்டு உசேன் திருமணம் செய்து கொண்டிருக்கிறான். அதன் பின்னர் அவர்கள் இருவரும் இணைந்து, பெண்களைக் கடத்தி விற்கும் கொடூரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தற்போது உசேன், சாய்ரா பேகம் ஆகியோர் பெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுப் பொலிஸ் காவலில் இருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து இயங்கியதாகக் கூறப்படும் மேலும் பத்துப் பேரையும் பொலிஸார் காவலில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

மொத்தமாக 3895 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 126 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

உசேன் – சாய்ரா பேகம் ஆகிய இருவருக்கும் சொந்தமானதெனக் கூறப்படும் பதினெட்டு பங்களாக்கள், ஐந்து கார்கள் இதுவரை முடக்கப்பட்டுள்ளன. இதில் ஜெய்ப்பூரில் உள்ள ரூ.35 கோடி மதிப்புள்ள பண்ணை வீடும், பகவன் நகரில் உள்ள ரூ.12 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவும் உள்ளடங்குகின்றன.

மேலும், இதுவரை காணாமல் போன பல பெண்களைப் பற்றிய தகவல்களும் பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவருமென நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.