கேப்பாப்புலவில் படையினர் குவிப்பு

கேப்பாப்புலவு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிகளவான பொலிஸாரும் இராணுவப் புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில், நேற்று (05) குவிக்கப்பட்டிருந்தனர். முல்லைத்தீவு, கேப்பாபுலவு மற்றும் சூரியபுரத்தைச்சேர்ந்த மக்கள், தமது நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி, முல்லைத்தீவு படை முகாமுக்கு முன்னால், தொடர் போராட்டத்தை புதன்கிழமை (01) முதல் முன்னெடுத்துவரும் நிலையில், போராட்டம் 5 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் (05) தொடர்ந்தது.

கேப்பாபுலவைச்சேர்ந்த 145 குடும்பங்களும் சூரியபுரத்தைச்சேர்ந்த 46 குடும்பங்களுமே இவ்வாறு பொதுமக்களுக்குச் சொந்தமான 450 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். முல்லைத்தீவு இராணுவ முகாம், கேப்பாபுலவு, சூரியபுரம் ஆகிய 528 ஏக்கர் காணிகளை உடைய கிராமங்களை உள்ளடக்கி அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தமது நிலங்கள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் இடம்பெறும் என தெரிவித்து மக்கள் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இம்மக்களை அச்சுறுத்தும் வகையிலேயே இவ்வாறு பொலிஸாரும், இராணுவ புலனாய்வாளர்களும் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர்.