இந்தியாவில் ஜனநாயகம் இல்லை – ராகுல் காந்தி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், அவற்றைத் திரும்பப் பெறக் கோரியும் கடந்த 4 வாரங்களுக்கு மேலாக டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி இந்தச் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி விவசாயிகளிடம் கையொப்பம் பெற்றுள்ளது.

இந்தக் கையொப்பத்துடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து முறையிட காங்கிரஸ் நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

குடியரசுத் தலைவர் மாளிகை அருகே இருக்கும் விஜய் சவுக் பகுதியிலிருந்து ராகுல் காந்தி தலைமையில், பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணு கோபால் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணியாகக் குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி காலை சென்றனர்.

ஆனால், பேரணி செல்வதற்கு பொலிஸார் அனுமதியளிக்கவில்லை. ஆனால், காங்கிரஸ் நிர்வாகிகள் பேரணி செல்ல தொடர்ந்து முயன்றபோது, பொலிஸார் அவர்களைத் தடுத்துக் கைது செய்தனர்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தைச் சந்தித்து 2 கோடி கையொப்பங்களை அளித்து, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுமாறு கூற வேண்டும் என வலியுறுத்தினர்.

குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றுவிட்டு வெளியே வந்த ராகுல் காந்தி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

”மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. விவசாயிகள், தொழிலாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் எனக் குடியரசுத் தலைவரிடம் தெரிவித்தோம். ஆனால், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு ஆதரவானவை என மத்திய அரசு கூறுகிறது.

3 பேர் மட்டும் சென்று குடியரசுத் தலைவரிடம் 2 கோடி விவசாயிகளின் கையொப்பம் அடங்கிய ஆவணத்தை அளித்தோம். இந்தச் சட்டங்களால் விவசாயிகள் வேதனைப்படுகிறார்கள், உயிரிழந்து வருகிறார்கள். இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால், இந்த தேசம் பாதிப்படையும் எனத் தெரிவித்தோம்.