இரு யாழ் சட்டத்தரணிகள் மீது விசனம்!

ஹரிஸ்ணவி எனும் பதின்ம வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொடூரமாகக் கொல்லப்பட்டார். இவ்வாறான கொலைகள் இனிமேலும் நடக்க கூடாது என்பதுடன் காமக் கொடூரர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காக குடாநாடு உட்பட வடபகுதி எங்கும் நேற்று ஹர்த்தால் நடாத்தப்பட்டது. அனைத்துத் தரப்பினரும் ஹர்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். யாழ்ப்பாணத்தில் உள்ள சட்டத்தரணிகளும் இதில் பங்கு கொண்டு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் யாழ்ப்பாணத்தில் பிரபலமான கிரிமினல் வழக்குகளில் ஆஜராகின்ற இரு சட்டத்தரணிகள் மிகக் கேவலமான செயலை நேற்றுச் செய்து முடித்துள்ளனர். சாவகச்சேரி நீதிமன்றில் நேற்று இரு வழக்குகளுக்கு ஆஜராகி வட பகுதி மக்களின் உணர்வுகளை கேள்விக்குறியாக்கி உள்ளனர் யாழ்ப்பாணத்தில் உள்ள இரு கிரிமினல் சட்டத்தரணிகள்.

இவர்களில் ஒருவர் தொடர்ச்சியாக கற்பழிப்பு கொலை, கொள்ளைகளில் ஈடுபடும் சமூக விரோதிகளுக்காக ஆஜராகின்ற பிரபல கிறிமினல் வழக்கறிஞரும் தமிழ்த்தேசியம் தொடர்பான அரசியல் கட்சியின் உறுப்பினருமாவார். வரணிப் பகுதியில் பெண் விதானையைக் கடத்திய ரவுடிகளுக்கு ஆதரவாகவே இவர் நேற்று சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜராகியுள்ளார். சாவகச்சேரி நீதிபதி உட்பட யாழ்ப்பாணத்தில் கடமையாற்றுகின்ற நீதிபதிகள் மிகுந்த சமூகப்பற்றுடனே செயற்பட்டு நீதிவழங்கி வருகின்றார்கள். யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்களுக்கு தகுந்த தீர்ப்பு வழங்கி அச் செயல்களை இல்லாதொழிக்க நீதிபதிகள் நடவடிக்கை எடுத்துவரும் வேளையில் இவ்வாறான ஒரு சில சட்டத்தரணிகளின் நடவடிக்கையால் யாழ்ப்பாண மக்களின் உணர்வுகள் இவர்களுக்கு எதிராகத் திரும்பத் தொடங்கியுள்ளது.

ஒரு பெண் விதானைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் யாழ்ப்பாணக் குடாநாடு வருவதற்கு குறித்த ஒரு சில சட்டத்தரணிகளின் நடவடிக்கையே காரணம் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அதே சாவகச்சேரி நீதிமன்றில் இன்னொரு சட்டத்தரணி, லண்டனில் இருந்து வந்து ஒரு ஏழை விவசாயியின் தோட்டத்தை நாசப்படுத்திய ஒருவனுக்கு ஆதரவாக நேற்று ஆஜராகி வாதாடியுள்ளார். லண்டனில் இருந்து வந்தவர் தனது பகையைத் தீர்த்துக் கொள்வதற்காக விவசாயி வைத்திருந்த ஏராளமான புசணிக் கொடியை காய்கள், பிஞ்சுகளுடன் வெட்டி நாசப்படுத்தி பெருமளவு சேதத்தை உண்டுபண்ணியிருந்தார். இவரது வழங்கு நீதிமன்றில் வந்த போது அவருக்கு ஆதரவாக இச் சட்டத்தரணி வாதிட்டதாகத் தெரியவருகின்றது. பணத்தில் ஆசைப்பட்டு செயற்படும் இவ்வாறான சட்டத்தரணிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் வரை குற்றவாளிகளின் தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும். இவர்களாக உணர்ந்து செயற்பட்டால் யாழ்ப்பாணம் அமைதியான நிலைக்கு வரும் என்பது உறுதி.