இலங்கை: கொரனா செய்திகள்

தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், எதிர்வரும் 23ஆம் திகதி இரவு 10 மணி முதல் 25ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில் பயணக்கட்டுப்பாடு அமுலாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தற்போது அமுலில் இருப்பதைப்போன்றே மக்கள் ஒன்று கூடல்கள், பொதுநிகழ்வுகள் உள்ளிட்டவற்றிற்கான தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும். அத்துடன், மாகாணங்களுக்கு இடையிலான   கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.  சுகாதார பிரிவின் அறிவுறுத்தல்களை மீறி, பண்டத்தரிப்பு பகுதியில் கடந்த 4ஆம் திகதி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டிருந்த  78 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 13 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து குறித்த 13 பேரும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் மணமக்கள் குடும்பத்தினரை மேலும் 14 நாள்கள் தனிமைப்படுத்தியுள்ளனர்.