கிழக்கின் ஆட்சி ஆளுநரிடம்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை(30) நள்ளிரவு 12மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் பலவற்றில், பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை சிலர் தெரிவித்தனர். காத்தான்குடி, ஓட்டமாவடி மற்றும் ஏறாவூர் போன்ற பிரதேசங்களிலேயே இவ்வாறு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்ளுக்கு, எதிராகவே இவ்வாறு பட்டாசுகளை கொளுத்துவதாகவும் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, அதன் அதிகாரம் ஆளுநரிடத்தில் ஒப்படைக்கப்பட்டமை தமக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் பட்டாசுகளை கொளுத்திய சிலர் தெரிவித்தனர்.

கிழக்கு மாகாண சபை, 37 உறுப்பினர்களைக் கொண்டது. இதில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 7 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சிக்கு 4 உறுப்பினர்களையும், தேசிய சுதந்திர முன்னணி ஓர் உறுப்பினரையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.