முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன்

கிழக்கு மாகாண சபையில், முஸ்லிம் முதலமைச்சர் இல்லாமல் போய் விடவேண்டும் என்று சந்தோசப்படுகின்ற சமூகத்தைப் பார்த்து தான் வெட்கப்படுகின்றேன் என்று, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.   மட்டக்களப்பில் உள்ள அவருடைய காரியாலயத்தில் நேற்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  ‘ஒரு லீற்றர் பெற்றோல் கூட எனது தனிப்பட்ட தேவைக்காக, பாவிக்கவில்லை. எதனையும் நான் எனக்காக, செய்யவில்லை. சமூகத்துக்காக, தான் செய்தேன். ஏன் என்னை தொலைக்க வேண்டும் என்று சிலர் நினைக்கின்றார்கள் என்று தெரியவில்லை’ என்றும் அவர் குறிப்பிட்டார்.

”இந்த மண்ணுக்கு என்ன செய்தோம் என்று கேட்கின்றார்கள். ஐந்நூறு மில்லியன் ரூபாய் அல்ல, மூவாயிரம் மில்லியன் ரூபாயை இந்த மண்ணுக்காக, செலவழித்துள்ளோம். அதனை நான் சொல்லி காட்ட விரும்பவில்லை. இதுவரைக்கும் நாம் எந்தவித ஊழலும் செய்யவில்லை. ஊழல் செய்பவர்கள் எமக்கு பக்கத்திலும் இருக்க முடியாது. அதனால் தான் நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம்” என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

”இரவு பகலாக சமூகத்துக்காக உழைத்து இருக்கின்றோம். இதற்காக ஐந்து சதமும் களவு செய்யாத எமது மாகாண சபை உறுப்பினர்கள் இருக்கின்றர்கள். அவர்களை பார்த்தும் நான் பெருமைப்படுகின்றேன். சட்டத்தரணிகள் ஆர்வம் உள்ளவர்கள் படித்தவர்கள் அதிகாரத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்தவர்கள் என சமூகத்துக்காக, நாங்கள் உழைத்து இருக்கின்றோம் என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

”இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உழைத்து இருக்கின்றார்கள் அவர்களை பார்த்து நாங்கள் பெருமையடைகின்றோம். நாங்கள் செய்த அநியாயம் என்ன? அல்லது இந்த பதவியை எடுத்து விட்டு ஓடி ஒளிந்து உறங்கி கொண்டு இருந்தோமா? என்னுடைய சம்பளத்தில் ஐந்து சதம் கூட நான் எடுக்கவில்லை. அத்தனையும் மக்களுக்காக செலவு செய்துள்ளேன்” என்றார்.

”பல்கலைக்கழகத்துக்கு போன பெண்கள் அடித்து துரத்தப்பட்ட போது அந்த பெண்களை எந்தவித பயமும் இல்லாமல் வைத்தியசாலைக்கு பார்க்க முயன்ற போது நூற்றுக்கணக்கானோர் தடுக்க முயன்றனர். இங்கு எதுவும் நடக்கக்கூடாது என்று பயமில்லாமல் சென்றவன் நான். எந்த ஒரு பூச்சாண்டியையும் பார்த்து பயப்பட வேண்டிய தேவையும் எங்களுக்கு இல்லை. ஒரு பெரிய படை அதிகார வீரரைப் பார்த்து பேசியதற்கு இங்கு மட்டக்களப்பில் இருக்கின்ற அதிகாரிகள் முதலமைச்சர் பதவியைப் பறியுங்கள் என்று சொன்ன அமைச்சர்கள் இருக்கிறார்கள். நான் இந்த பதவிக்காக முட்டிக்கொண்டு வரவில்லை” என்றும் குறிப்பிட்டார்.

”ஆகவே, தயவுசெய்து இந்த சில்லறை வேலைகளை நிறுத்துங்கள். எமக்கு இருக்கின்ற வேலைகளைப் பார்ப்பதற்கு நேரம் இல்லாமல் இருக்கின்றோம். புல்மோட்டையில் இருந்து பொத்துவில் வரைக்கும் எமது அபிவிருத்தி வேலைகளைச் செய்திருக்கின்றோம்” என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.