குமுதினி படகு படுகொலை 32 ஆண்டுகள்

இலங்கையில் விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட எண்ணிலடங்காத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த சம்பவங்கள் அனைத்தும், இன்று வரையிலும் தமிழ் மக்களின் ஆழ் மனதில் பதிந்துள்ள நிலையில், 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற படுகொலை சம்பவம் யாராலும் மறக்க முடியாத ஒன்றாகும்.

நெடுந்தீவு மற்றும் புங்குடுதீவு பிரதேசங்களுக்கு இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் நடுகடலில் வைத்து கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள் இன்றாகும்.

இந்த சம்பவம் இடம்பெற்று இன்றுடன் 32 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை படுகொலை செய்யப்பட்டார்கள்.

மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்றவர்களை நடுகடலில் வைத்து இடை மறிந்த சிலர் கூறிய ஆயுதங்களை கொண்டு கொடூரமான முறையில் தாக்கி படுகொலை செய்தார்கள்.

இந்த சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், பலரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர். எனினும், இந்த சம்பவத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவித்துள்ளது.