கேப்பாப்பிலவு போராட்டத்தில் ஆசிரியர் சங்கம் பங்கெடுப்பு

குடியிருப்பு நிலங்கள் பறிக்கப்பட்ட நிலையில் வாழும் இடம் இல்லாமல் தமது நிலதுக்காக பள்ளிசெல் பிள்ளைகளுடன் வாழும் உரிமை கேட்டுப் போராடும் கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டதில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாகக் பங்கேற்கின்றது என ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சரா.புவனேஸ்வரன் விடுத்துள்ள ஊடகச் செய்தியில், காணாமல் ஆக்கப்பட்ட பெற்றோரின், சகோதரர்களின் குழந்தைகள் அனாதைகளாக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. பள்ளிசெல் குழந்தைகளில் பலர் தாய், தந்தையரை இழந்து அநாதைகளாக ஆக்கப்பட்டுள்ளனர். இதற்கு மேலாக குடியிருப்பு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு நல்லாட்சி அரசிலும் விடிவு இன்றி பள்ளிசெல் பிள்ளைகள் உள்ள குடும்பங்கள் பல நடுத்தெருவில் நிற்கின்றன. இத்தகைய நிலை தொடர்ந்தவண்ணம் உள்ளது. இதற்காக போராடும் மக்கள் எமது இரத்த உறவுகள் அவர்களின் துன்பங்களில் எமக்கு முழுமையான உரிமை உறவு இருக்கின்றது.

ஆகையால் கேப்பாப்பிலவு மக்களினதும், புதுக்குடியிருப்பு மக்களினதும் சொந்த நிலங்களை மீட்கும் அகிம்சைப் போராட்டத்தில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் முழுமையாக இணைந்துகொள்கின்றது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தாய்ச் சங்க பிரதிநிதிகள் மற்றும் வடமாகாண பிரதிநிதிகள் இவர்களோடு முல்லைத்தீவு அதிபர்கள், ஆசிரியர் அனைவரையும் காலை.8.30 மணிக்கு குறித்த பிரதேசங்களில் நடைபெறும் போராட்டங்களில் இணைந்துகொள்ளுமாறு சங்கத்தின் பொதுச் செயலாளரும், முல்லைத்தீவு மாவட்டச் தலைவரும், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரும் முல்வைத்தீவு கல்வி வலயச் செயலாளரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

அனைத்து அதிபர்களும், ஆசிரியர்களும் வெள்ளிக்கிழமை காலை தமது விடுமுறைக்கான அறிவித்தலை உரியவர்களிடம் தெரியப்படுத்தி போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.