பாலியல் தொழிலுக்காக விமானத்தில் கடத்தப்பட்ட சிறுமி… காப்பாற்றினார் விமானப் பணிப்பெண் ஷீலா!

(எஸ். ஹமீத்)
அவரது பெயர் ஷீலா பெட்ரிக். 49 வயது. பத்து வருடங்களாக விமானப் பணிப் பெண்ணாகப் பணியாற்றுகிறார். இரண்டொரு தினங்களுக்கு முன்பு அவர் பணியாற்றும் அலாஸ்கா எயார் லைன்சுக்குச் சொந்தமான விமானம் சியாட்டிலிலிருந்து சான் பிரான்சிஸ்கோவுக்குப் பறந்து கொண்டிருந்தது. அவ்வேளைதான் அவர் அந்த ஏழைச் சிறுமியைக் கண்டார். மிகவும் கசங்கிய ஆடைகளுடனும் கவலை தோய்ந்த முகத்துடனும் அந்தச் சிறுமி, உயர்தரமான ஆடையணிந்த ஒரு மனிதனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்ததும் விமானப் பணிப்பெண் ஷீலாவின் மனதுக்குள் ஒரு சிறு சந்தேகம் முளைத்தது. ‘எங்கேயோ ஒரு தவறு நடக்கின்றது.’ என அவரது உள்மனது கூறியது.

அந்தச் சிறுமியுடன் பேச்சுக் கொடுக்க முயன்றார் ஷீலா. ஆனால், அவள் பேசவில்லை. மாறாக, அந்தச் சிறுமியிடம் கேட்ட சில கேள்விகளுக்கு அவளுக்குப் பக்கத்திலிருந்தவனே பதில் சொல்லிக் கொண்டிருந்தான். அத்தோடு விமானப் பணிப்பெண் சிறுமியுடன் பேசுவதையும் விரும்பாதவனாய் இருந்தான்.

ஷீலாவின் சந்தேகம் வலுத்தது. அவர் சமயோசிதமாக ஒரு வேலை செய்தார். சிறுமியிடம் ‘விமானக் கழிவறைக்கு வா!’ என்று மிகத் தெளிவாக ஜாடை காட்டிவிட்டு, முதலில் கழிவறைக்குள் போனார் ஷீலா. அவசர அவசரமாக ஒரு துண்டுக் காகிதத்தில் ” நான் உனக்கு உதவ விரும்புகிறேன். உனக்கு ஏதாவது உதவி தேவையா? அப்படியெனில் இந்த நோட்டில் பதில் எழுதி விடு!’ என்று எழுதி வைத்து விட்டு வெளியே வர, சிறுமி கழிவறை வாசலில் நின்றாள். ”உள்ளே ஒரு குறிப்பு வைத்துள்ளேன். அதற்கு பதில் எழுது” என்று மட்டும் சொன்னார் ஷீலா. சிறுமி தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.

சிறுமி வெளியேறியதும் உள்ளே நுழைந்து குறிப்பைப் பார்த்தார் ஷீலா. அவர் நினைத்தது சரி. ”ஆம்; நான் ஆபத்தில் இருக்கிறேன். அந்த மனிதர் என்னைக் கடத்திக் கொண்டு போகிறார்!” என்று அந்தச் சிறுமி எழுதி வைத்திருந்தாள்.

ஷீலா வேகமாக இயங்கினார். பைலட்டிடம் விடயத்தை விரிவாக எடுத்துச் சொன்னார். பைலட் சான் பிரான்ஸிஸ்கோ விமான நிலைய பொலிஸாருக்குத் தகவல் தெரிவித்தார். விமானம் தரை இறங்கிய போது, விமானத்தில் நுழைந்த போலீசார் அந்த மனிதனைக் கைது செய்தனர்.

விசாரணையில் பாலியல் தொழிலுக்காக அந்தப் பதினான்கு வயதுச் சிறுமி கடத்திச் செல்லப்பட்டது தெரிய வந்தது. தற்போது அந்தக் கடத்தல்காரனைச் சிறையில் தள்ளி, மேலதிக விசாரணைகள் நடைபெறுகின்றன. தைரியமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயற்பட்டு ஒரு சிறுமியைக் காப்பாற்றிய பணிப்பெண் ஷீலாவுக்குப் பாராட்டுக்கள் குவிந்த வண்ணமுள்ளன.