கேரளாவில் இன்று 1038 பேருக்கு கரோனா தொற்று: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி

இன்று 1,038 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 15,032 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 785 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 57 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 109 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்தவர்கள் ஆவர். கரோனா பாதித்து இன்று ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த 75 வயதான நாராயணன் என்பவர் மரணமடைந்தார். இன்று 272 பேர் நோயிலிருந்து குணமடைந்துள்ளனர். இதையடுத்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 6,164 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 8,818 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 226 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 133 பேர் கொல்லம் மாவட்டத்தையும், 120 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 101 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 92 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 61 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 56 பேர் திருச்சூர் மாவட்டத்தையும், 51 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 49 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும், தலா 43 பேர் இடுக்கி மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களையும், 34 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 25 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 4 பேர் வயநாடு மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

இன்று சுகாதார துறையை சேர்ந்த 24 பேருக்கு நோய் பரவியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20,847 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கேரளாவில் தற்போது பல்வேறு பகுதிகளில் 1,59,777 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இதில் 1,50,746 பேர் வீடுகளிலும், 9,031 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று நோய் அறிகுறிகளுடன் 1,164 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரை 3,18,644 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. இதில் 8,320 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.

சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ள 1,03,951பேரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் 99,499 பேருக்கு நோய் இல்லை என தெரியவந்துள்ளது.

கேரளாவில் தற்போது 397 நோய் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. தற்போது சிகிச்சையில் உள்ள 8,056 பேரில் 53 பேர் அவசர சிகிச்சைப் பிரிவிலும், 9 பேர் வென்டிலேட்டர்களிலும் உள்ளனர். இந்தியாவில் 10 லட்சம் பேரில் 864.4 பேருக்கு நோய் பரவுகிறது. ஆனால் கேரளாவில் இது 419.1 ஆக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 2.41 ஆகும். ஆனால் கேரளாவில் அது 0.31 ஆகும். கேரளாவில் தற்போது கரோனா நோயாளிகளுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களின் எண்ணிக்கை 86,959 ஆக உள்ளது. அடுத்த தொடர்பில் இருப்பவர்கள் எண்ணிக்கை 37,937 ஆகும்.

மொத்தம் உள்ள நோயாளிகளில் தற்போதைய கணக்கின்படி 65.16 சதவீதம் பேருக்கு அந்தந்த பகுதியில் இருந்து நோய் பரவி உள்ளது. இதில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 94.4 சதவீதம் பேருக்கு நோய் பரவி உள்ளது. கரோனா சிகிச்சைக்காக மட்டும் செயல்படும் மருத்துவமனைகளில் தற்போது உள்ள படுக்கைகள் தவிர, முதல் நிலை சிகிச்சை மையங்களில் 15,975 படுக்கைகள் தயார் படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் தற்போது 4,535 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுகாதாரத்துறை பணியாளர்களுக்காக 3,42,000 என் 95 முககவசங்களும், 3,86,000 பாதுகாப்பு உடைகளும், 16,16,000 மூன்று அடுக்கு முககவசங்களும் வாங்கப்பட்டுள்ளன. தற்போது கூடுதலாக 80 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை பிரிவில் பயன்படுத்தப்படும் 270 வென்டிலெட்டர்களை அனுப்பி வைப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் மிக மோசமான நிலை உள்ளது. இங்கு இன்று நோய் பாதிக்கப்பட்ட 226 பேரில் 190 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 15 பேருக்கு எங்கிருந்து, எப்படி நோய் பரவியது என தெரியவில்லை. தமிழக எல்லையிலுள்ள பாறசாலை பகுதியில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா உள்பட பெரும்பாலான மாநிலங்களில் நோயாளிகளின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருகிறது.

அதன்படி பார்த்தால் கேரளாவில் நோய் பரவல் குறைவாகும். இம்மாதம் 20ஆம் தேதி வரை கேரளாவில் 267 சுகாதார துறை ஊழியர்களுக்கு நோய் பரவி உள்ளது. இதில் 62.55 சதவீதம் பேருக்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. இதுவரை 63 நர்சுகளுக்கும், 47 டாக்டர்களுக்கும் கொரோனா நோய் பரவி உள்ளது. இந்தியாவில் உள்ள மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது கேரளாவில் சுகாதாரத் தொழிலாளர்களுக்கு மிக குறைவாகவே நோய் பரவியுள்ளது.

இதுவரை இந்தியாவில் 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மரணமடைந்துள்ளனர். கேரளாவில் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு மிகுந்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் தான் இங்கு சுகாதாரத் துறையினருக்கு இதுவரை கூடுதல் பாதிப்பு ஏற்படவில்லை. கொரோனா நிபந்தனைகளை மீறி செயல்படும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது கைது உள்பட கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நிபந்தனைகளை மீறுபவர்களை கண்டுபிடிப்பதற்காக கூடுதல் எஸ்பி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் இருந்து மருத்துவம், மரணம் உள்பட அவசர தேவைகளுக்கு மட்டுமே வெளி மாநிலம் செல்ல செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஓணம் பண்டிகையை முன்னிட்டு 88 லட்சம் ரேசன் கார்டுதாரர்களுக்கு சீனி, பருப்பு உள்பட 16 வகையான பொருட்கள் அடங்கிய கிட் இலவசமாக வழங்கப்படும். கேரளாவில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு சட்டம் அமல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பினரிடம் இது குறித்து ஆலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.