கைவிடப்பட்ட மக்களுக்காக கருத்தரங்கு – சுன்னாகம் தெற்கு சனசமூக நிலையத்தில்

போலி தமிழ்த் தேசியம் பேசிய அனைவரும் சுன்னாகம் பேரழிவைக் கண்டும் காணாமல் கண்களை மூடிக்கொண்டிருக்கும் நிலையில் வைத்தியக் கலாநிதி முரளி வல்லிபுரநாதன் மற்றும் துவாரகன் போன்ற ஒரு சில தனி நபர்களின் முயற்சி மக்களுக்கு நம்பிக்கை தருகிறது. பல்வேறு ஆபத்தான சூழ்நிலைகளைக் கடந்து போராடும் மக்களின் நம்பிக்கையாக ஒரு சில தனிநபர்களே எஞ்சியுள்ளனர்.

இவர்கள் முன்னெடுக்கும் முயற்சிகளின் மற்றொரு பகுதியாக கழிவு ஒயிலால் நஞ்சான நீரைக் குடிக்கலாமா வேண்டாமா என்ற கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஒழுங்கமைக்கும் இக் கருத்தரங்கு சுன்னாகம் தெற்கு சன சமூக நிலையத்தில் நடைபெறுகிறது. வடக்கு மாகாண சபையில் போலி நிபுணர் குழு முன்னைய பரந்துபட்ட ஆய்வுகள் அனைத்தையும் நிராகரித்து ஆதாரம் எதுவுமின்றிய பொய்களை முடிவுகளாக முன்வைத்தது. ஆய்வறிக்கை வெளியிடப்படாமல் முடிவுகள் மட்டுமே வெளியிடப்பட்டன.

நஞ்சு கலந்த நீரை அருந்த வேண்டாம் என்று மக்களுக்கு அறிவுரை கூறி மாற்று வழிகளை பரிந்துரை செய்வதற்கும் ஏற்படுத்துவதற்கும் பதிலாக மக்களை குழ்ப்பத்திற்கு உள்ளாக்கி அவர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்திய வடக்கு மாகாண சபையின் செயற்பாடுகளை எதிர்கொள்வதே இன்று சிக்கலான பிரச்சனையாகியுள்ளது. இவ்வாறான சூழலில் இக் கருத்தரங்கும் தொடர்ச்சியான நடவடிக்கைகளும் காலத்தின் தேவை!

[ இனியொரு ]