மக்கள் கொல்லப்படுவதை ஊக்குவிக்கும் வட மாகாண சபை – மல்லாகம் நீதிமன்றத்தில் நிர்வாணமானது!

எம்.ரி.டிவோக்கஸ் நிறுவனம் மத்திய மாகாண அரசுகளின் துணையுடன் நச்சாக்கிய சுன்னாகம் நீர் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதி மன்றத்தில் கடந்த திங்கள் 18/01/2016 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீர் நஞ்சானதை ஏற்றுக்கொண்ட மல்லாகம் நீதிமன்றம், இறுதித் தீர்வு கிடைக்கும் வரை பாதிக்கப்பப்பட்ட பகுதிகளுக்கு நீர் வழங்குமாறு உத்தரவிட்டிருந்தது. வடமாகாண சபை உருவாக்கிய போலி நிபுணர் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து நீர் வழங்கல் நிறுத்தப்பட்டடுள்ளது.

கிறீசும் எண்ணையும் கலந்த நச்சு நீரை அருந்துவதால் மக்களுக்கு உராபத்து வரை பல் வேறு நோய்கள் ஏற்படும் என மருத்துவர் குழு எச்சரித்திருந்தத்து. தவிர, ஏற்கனவே சிலர் மூளை நரம்பு பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்துள்ளனர்.

ஒரு புறத்தில் தீவிர தேசியவாதியாகத் தம்மை வெளிக்காட்டிக்கொள்ளும் சீ.வீ.விக்னேஸ்வரன் மறுபுறத்தில் இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் மக்களின் உயிரை எம்.ரி.டி வோக்கஸ் என்ற பல்தேசிய நிறுவனத்தின் பணத்திற்கு விற்பனை செய்துள்ளார். தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற வாக்குப் பொறுக்கும் கட்சிகள் தமது கண்முன்னே நடைபெறும் அழிப்பு குறித்து அலட்டிக்கொள்வதில்லை. இவர்கள் அனைவருமே மக்கள் கொல்லப்படுவதற்குத் துணை செல்கின்றனர்.

இவர்கள் மட்டுமல்ல மக்கள் கொல்லப்படுவதைக் கண்டுகொள்ளாமல் தமது ‘தேசிய வியாபாரத்திலேயே’ கவனம் செலுத்தும் புலம்பெயர் பினாமிக் குழுக்கள் யாருக்குச் சேவை செய்கிறார்கள் என்பது வெளிப்படை. இவர்கள் அனைவரும் இலங்கை அரசிற்கு இணையாகத் தமிழின அழிப்பிற்குத் துணை செல்கின்றவர்களே.

வட மாகாண சபையின் அறிக்கையைத் தொடர்ந்து குடி நீர் வழங்குவது நிறுத்தப்பட்டது தொடர்பாக தேசிய நீர் வழங்கல் அதிகார சபையிடம் மல்லாகம் நீதவான் கேள்வியெழுப்பினார்.

வட மாகாண அறிக்கையைத் தொடர்ந்து குடி நீர் வழங்குவதற்கான நிதி நிறுத்தப்பட்டதால் அதனை நிறுத்திவிட்டோம் என அதிகாரி குறிப்பிட்டார்.

நீதிமன்றம் முன்னர் வழங்கிய உத்தரவை உதாசீனம் செய்து குடி நீர் வழங்கலை நிறுத்தியது தொடர்பாக விசனம் தெரிவித்த நீதவான், நிறுத்தப்பட்டமைக்கான காரணத்தை எழுத்துமூலம் தெரிவிக்குமாறு நீர் வழங்கல் அதிகார சபையின் அதிகாரியிடம் உத்தரவு பிறப்பித்தார்.

தவிர, நீர் வழங்கலுக்கான நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவருமாறு உத்தரவிட்டார்.

சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகார சபை வெளிப்படைத் தன்மையைப் பேணி மக்களுக்கு உண்மை நிலையைத் தெரியப்படுத்த வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் மக்களின் சார்பில் சட்டத்தரணிகள் தேவராஜா, யேசுதாசன் ஆகியோர் வாதிட்டனர். அதேவேளை எதிரிகள் தரப்பில் வட மாகாண சபையின் சார்பில் சட்டத்தரணி வரதராஜா பிரசன்னமாகியிருந்தார்.

வட மாகாண சபையின் அறிக்கையில் நம்பிக்கையில்லை என மக்கள் சட்டத்தரணிகள் கருத்துவெளியிட அதனை மறுத்த வட மாகாண சபையின் சட்டத்தரணி, புதிய குழு ஒன்றை அமைக்குமாறு உத்தரவிட்டார்.

அதே வேளை இலங்கைக்கு வெளியில் சுன்னாகம் நீரின் மாதிரிகள் சர்வதேச அங்கீகாரம் பெற்ற சோதனைக்கூடங்களில் பரிசோதிக்கப்பட்டுவருகின்றது.

பல்வேறு அரசியல்வாதிகளுக்கு பணத்தைத் தாரைவார்த்து விலைக்கு வாங்கிக்கொண்ட எம்.ரி.டி வோக்கஸ் நிறுவனம் இன்று இலங்கையின் பங்கு சந்தையில் மிக முக்கிய நிறுவனமாகும்.

பேரினவாத அரசு, வாக்குப் பொறுக்கும் தமிழ் அரசியல் கட்சிகள், புலம்பெயர் தமிழ்த் தேசிய வியாபாரிகள் என்ற அனைத்துப் பிழைப்புவாதிகளாலும் நடுத்தெருவில் விடப்பட்ட தமிழ்ப் பேசும் மக்களைச் சூறையாடுவது இன்று இலகுபடுத்டப்பட்ட நடைமுறையாகிவிட்டது. இவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டு பிரதியிடப்படும் வரை அழிவுகள் தொடரும்.

இன்று ஒடுக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் தமது நண்பர்கள் யார் எதிரிகள் யார் என்பதை இனம் கண்டுகொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்த் தேசியத்திற்குள் தமது முகத்தைப் புதைத்துக்கொண்டு மக்களை அழிக்கும் எதிரிகள் இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலும் எஞ்சியுள்ள தமிழர்களைக் கொன்றுதின்ன ஆரம்பித்துள்ளனர்.

[ இனியொரு ]