சிறுபான்மையினர் பிரச்சினைக்கு தீர்வு கண்டாலேயே நாட்டை பாதுகாக்க முடியும்

சிங்கள பௌத்தர்களுக்கு இலங்கைதான் ஒரே நாடு என்போர் சிந்திக்க வேண்டும்

பண்டா – செல்வா, டட்லி-செல்வா, இலங்கை-இந்திய ஒப்பந்தங்கள் அமுலாகியிருந்தால் நிலைமை மாறியிருக்கும். சிங்கள பௌத்தர்களுக்குள்ள ஒரே நாடு இலங்கைதான் என்று குரல் கொடுப்பவர்கள் இந்த நாட்டில் நிரந்தர அமைதியும் சுதந்திரமும் நிலைப்பதற்குச் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்காமல் நாடு சுதந்திரமாகவும் ஜனநாயக ரீதியிலும் பாதுகாக்கப்பட வேண்டுமானால் சிறுபான்மையினரின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களது உரிமைகளும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கை சிங்கள பௌத்தர்களுக்கு என இருக்கும் ஒரே நாடு. அது பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.

அப்படியானால் நாடு பாதுகாக்கப்படுவதற்கு நாட்டில் குழப்பகரநிலை இல்லாது சுதந்திரமாகவும் அமைதியாகவும் பயணம் முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கு ஏனைய இன, மத மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பண்டா – செல்வா ஒப்பந்தம் டட்லி – செல்வா ஒப்பந்தம் அதன் பின்னர் ஜே. ஆர். ஜெயவர்தனவின் இலங்கை – இந்திய ஒப்பந்தங்கள் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமையே நாட்டில் மோசமான சூழ்நிலை உருவாகக் காரணமானது.

எல்லாக் காலத்திலும் அடிப்படைவாதிகள் செயற்பட்டுள்ளனர். 30 வருட கொடூர யுத்தத்துக்குப் பின்னர் நாட்டின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்ற போதும் இத்தகைய அடிப்படைவாதிகளே அதனையும் சீர்குலைக்கப் பார்க்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் சுதந்திரமும் ஜனநாயகமும் அமைதியும் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதில் அனைத்துத் தரப்பினருக்கும் பொறுப்பு உண்டு என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ஜனாதிபதி; புதிய அரசாங்கத்தின் வெற்றிகரமான ஒரு வருட நிறைவு தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்ததுடன் அரசாங்கம் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கினார்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

நாடு தொடர்பிலான பொதுவான சிந்தனை நோக்கம் அனைவருக்கும் இருப்பது முக்கியம். மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படாமல் தடுப்பது அனைவரதும் பொறுப்பாகும். ஏனைய மதங்களை விட பௌத்த தரிசனம் ஏனையவர்களின் உரிமை தொடர்பில் பேசுகிறது. பிற இன மதத்தவருக்கும் அவரது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு சமமாக வாழும் உரிமை கிட்டுவது முக்கியம். 2016 ல் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் நோக்கமும் எதிர்பார்ப்பும் இதுதான்.

நாட்டில் நிரந்தர அமைதி சமாதானம் நிலவ வேண்டுமானால், நாடு பாதுகாக்கப்பட வேண்டுமானால் ஏனைய இன, மத மக்களுடனான நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது, அதற்கான அடித்தளத்தையே நாம் தற்போது இட்டுள்ளோம்.

எமது வரலாற்றை மீளாய்வு செய்து எதிர்காலத்தில் செயற்படுவது அவசியமாகும். பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் ஜே. ஆரின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை செயற்படுத்தவிடவில்லை. இதுவே பயங்கரவாதம் உருவாகவும் காரணமாகியது.

வடக்கிலும் தெற்கிலும் அடிப்படைவாதிகள் உள்ளனர். புதிய அரசியலமைப்பு தொடர்பில் இப்போதிருந்தே விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அரசாங்கம் கவிழும் என்றும் தெரிவித்து வருகின்றனர். 1947 லில் இருந்து 1978 வரை நாடு சுமுகமாக இருந்துள்ளது. 1978 அரசியலமைப்பு விருப்பு வாக்கு முறைமையோடுதான் பிரச்சினை தொடங்கியது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருந்ததால்தான் யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்தது என்றும் அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை அவசியம் என்றும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

எமது தேவை நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்வதா அல்லது மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டைக் கட்டியெழுப்புவதா? என்பதை நான் கேட்க விரும்புகிறேன்.

நாட்டில் அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும். மீண்டும் யுத்தமொன்றுக்கு வழிவகுக்கக்கூடாது. அனைத்து இன, மத மக்களுக்கும் சுதந்திரமும் அமைதியாக வாழும் சூழலும் உருவாக்கப்பட வேண்டும். அனைத்து மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் அவர்கள் கூறும் சிங்களவர்களின் ஒரே நாடு என்கின்ற இலங்கை பாதுகாக்கப்படும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.