ஈரானுடனான இராஜதந்திர உறவை துண்டித்தது சவூதி

பிராந்தியத்தில் பதற்றம் அதிகரிப்பு

ஈரானுடனான இராஜதந்திர உறவுகளை துண்டிப்பதாக அறிவித்திருக்கும் சவூதி அரேபியா, ஈரானிய இராஜதந்திரிகளுக்கு நாட்டில் இருந்து வெளியேற 48 மணி நேர அவகாசம் வழங்கியுள்ளது. சவூதி ஷியா மதத்தலைவர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் டெஹ்ரான் சவூதி அரேபிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்தே சவூதி இந்த அறிவிப்பை ஞாயிறன்று வெளியிட்டது.

பிராந்தியத்தின் பிரதான சுன்னி மற்றும் ஷியா வல்லமை நாடுகளான சவூதி மற்றும் ஈரான் உள்நாட்டு யுத்தம் நடக்கும் சிரியா மற்றும் யெமனில் எதிர் எதிர் தரப்புகளுக்கு ஆதரவாக செயற்படுகின்றன.

தற்போதைய பதற்றத்தை தணிக்க இரு தரப்புக்கும் அமைதி காக்கும்படி வலியுறுத்தி இருக்கும் அமெரிக்கா, இராஜதந்திர உறவுகளை தொடரும்படியும் அழைப்பு விடுத்துள்ளது.

சவூதி அரேபியா கடந்த சனிக்கிழமை தீவிரவாத குற்றச்சாட்டில் 46 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியது. அதில் ஷியா தலைவர் ஷெய்க் நிம்ர் அல் நிம்ரும் அடங்குகிறார்.

இவர் தவிர, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் மேலும் மூன்று பேர் ஷியா பிரிவினராவர்.

எனினும் இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் அதிகப் பெரும்பாலானவர்கள் 2003 மற்றும் 2006 காலப்பகுதியில் சவூதியில் அல் கொய்தா தாக்குதலில் தொடர்புபட்ட சுன்னி பிரிவினராவர்.

இந்நிலையில் கடந்த ஞாயிறு பின்னேரம் நிம்ரின் சொந்த ஊரான கிழக்கு சவூதியின் அவாமியா நகரில் துப்பாக்கிச் சண்டை ஒன்று ஏற்பட்டிருப்பதோடு ஒருவர் கொல்லப்பட்டு குழந்தை ஒன்றுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருக்கும் சவூதி தூதரகத்தை ஆக்கிரமித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு உடைமைகளுக்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து ஈரானுக்கான சவூதி பிரதிநிதிகள் திரும்ப அழைக்கப்பட்டதோடு தற்போது தூதரக உறவை துண்டிப்பதாக சவூதி அறிவித்துள்ளது.

தமது நாட்டின் பாதுகாப்பை குறைவாக மதிப்பிட ஈரானுக்கு இடமளிக்க முடியாது என்று சவூதி வெளியுறவு அமைச்சர் அப்துல் அல்–ஜுபைர் குறிப்பிட்டார். ஈரான் பிராந்தியத்தில் ஆயுதங்கள் விநியோகித்து, தீவிரவாதக் குழுக்களை உருவாக்கி வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

சவூதி மற்றும் ஈரானுக்கு இடையில் அண்மைய தசாப்தங்களில் இராஜதந்திர உறவுகளில் பல முறை விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஈரானின் அணு சக்தி செயற்பாடுகள் மற்றும் 1987 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஈரானிய ஹஜ் யாத்திரிகர்கள் மரணித்த சம்பவங்களில் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் தீவிரம் அடைந்திருந்தது.

இதில் 1988 தொடக்கம் 1991 வரையான காலத்தில் ஈரான் மற்றும் சவூதி இராஜதந்திர உறவுகள் முறிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பதற்றத்தை தணிக்க பிராந்தி தலைவர்கள் சாதகமான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் ஜோர் கிர்பி வலியுறுத்தியுள்ளார். “இராஜதந்திர உறவுகள் மற்றும் நேரடி பேச்சுவார்த்தை அத்தியாவசியமானது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சவூதியின் அவாமி நகரில் ஞாயிறன்று இடம்பெற்ற கடும் துப்பாக்கிச் சூடு பொலிஸாரை இலக்கு வைத்தே நடத்தப்பட்டிருப்பதாக சவூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவொரு தீவிரவாத செயல் என வர்ணித்திருக்கும் சவூதி பாதுகாப்புப் படையினர் தாக்குதல்தாரிகளை தேடிவருவதாகவும் தெரிவித்தனர்.

சவூதியின் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் தாம் ஒடுக்கப்பட்டு வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். 18 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சவூதியில் சுமார் 2 மில்லியன் ஷியா முஸ்லிம்கள் வாழ்கின்றனர்.

இதில் மரண தண்டனைக்கு உள்ளான நிம்ர் மீது வன்முறையை தூண்டியதாகவும் 2011 இல் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தலைமை வகித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

அவர் தேசத்துரோகத்தில் ஈடுபட்டதாகவும் ஒத்துழையாமை மற்றும் ஆயுதம் ஏந்தியதாகவும் குற்றங்காணப்பட்டார்.

நிம்ர் தன் மீதான அரசியல் குற்றச்சாட்டுகளை மறுக்காதபோதும் வன்முறையில் ஈடுபட ஆயுதம் ஏந்தும்படி அழைப்பு விடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருந்தார். தனது 50 வயதுகளில் இருந்த நிமிர் ஈரானில் ஒரு தசாப்தத்திற்கும் மேல் கல்வி கற்றவராவார்.

நிம்ர் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு எதிராக ஈரான் தவிர பல நாடுகளிலும் ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றன. குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஈராக் மற்றும் பஹ்ரைன் உட்பட பல நாடுகளிலும் ஷியா முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தவிர பிராந்தியத்தின் ஈரான் ஆதரவு ஷியா கூட்டணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன. லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் செய்யிது ஹஸன் நஸ்ருல்லாஹ், இந்த மரண தண்டனை, ‘ஓர் இரத்தத்தாலான செய்தி’ என்று எச்சரித்தார். ஈராக்கின் முன்னணி ஷியா மதத்தலைவர் முக்ததா அல் சதிர், கடும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஈரான் ஜனாதிபதி ஹஸன் ரவ்ஹானி இந்த மரண தண்டனையை மனிதாபிமானமற்ற செயல் என்று வர்ணித்தார். மறுபுறும் சவூதியின் இந்த செயலுக்கு அது இறைவனின் பழிவாங்கலுக்கு உள்ளாகும், என்று ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமைனி எச்சரித்திருந்தார்.

சவூதி மற்றும் ஈரான் பதற்றத்தால் எண்ணெய் விலையிலும் ஆசிய சந்தையில் நேற்று ஏற்றம் கண்டது.